அளவுகோல்கள்

அன்புள்ள சாரு அவ‌ர்க‌ளுக்கு,

உங்கள் இலக்கிய அளவுகோல்கள் மற்றும் சினிமா அளவுகோல்கள் என்னவாக இருக்கும் என்று அவ்வப்போது நான் யோசிப்பதுண்டு. நீங்கள் சில படைப்புகளை குப்பை என்றும் சில படைப்புகளை அற்புதம் என்றும் சிலாகிப்பீர்கள். எப்படி சில படைப்புகளை குப்பை என்றும் அற்புதம் என்றும் மதிப்பிடுகிறீர்கள். சொன்னால் நன்றாக இருக்கும். 

இப்படிக்கு உங்கள் வாசகன், 

தினேஷ் 

அன்புள்ள தினேஷ்,

நேற்று காலையிலிருந்து தியாகராஜாவுக்காகப் பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டு எழுத்துகளைப் படித்துக் கொண்டிருந்த நிலையில் உங்கள் இந்தக் கடிதம் அந்த உலகத்திலிருந்து நிகழ்காலத்துக்கு இழுத்து வருகிறது.  உங்களைத் தவிர வேறு யாராக இருந்தாலும் ”என் புத்தகங்களைப் படியுங்கள், பதில் கிடைக்கும்” என்று பதில் எழுதியிருப்பேன்.  ஆனால் உங்களுக்கு அப்படி எழுத முடியவில்லை.  முக்கியமான ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களின் பேச்சுகளை எனக்கு அனுப்பியிருக்கிறீர்கள்.  அதற்குப் பிரதியாக நானும் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

முதலில் சினிமாவை முடித்து விடுவோம்.  சினிமா பற்றி ஆறு ஏழு நூல்கள் எழுதியிருக்கிறேன்.  அதிலேயே உங்கள் கேள்விக்குத் தெளிவான பதில் இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு நண்பர் புத்தகத்தின் அட்டையைப் பார்த்து விட்டு புத்தகத்தைப் பற்றி முடிவு செய்யலாமா என்று கேட்டு எழுதியிருந்தார்.  மண்டேலா பற்றிய கேள்வி அவருடையது.  ஐந்து பத்து நிமிடம் பார்த்து விட்டுத்தான் இனிமேல் இந்தக் குப்பையில் நேரத்தை வீணடிக்க முடியாது என்று முடிவு செய்தேன்.  எனக்குக் குப்பை.  மற்றவருக்குக் காவியமாக இருக்கலாம்.  சூரரைப் போற்று ஓஹோ என்று ஓடியது.  ஆனால் என்னால் ஐந்து நிமிடம் தாண்ட முடியவில்லை.  முக்கியமாக ரயில் காட்சி.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  என் முகத்திலிருந்து ரெண்டு அடி தூரத்தில் இருந்து ஒருவர் என்னிடம் பேசும் போது காட்டுக் கத்தல் கத்தினால் நான் உடனே அவரிடமிருந்து விலகி விடுவேன்.  என்னால் அந்த சத்தமான பேச்சைத் தாங்க இயலாது.  அருவருப்பு அடைவேன்.  ஆனால் சூரரைப் போற்று படத்தில் ரயில் காட்சியில் எல்லோருமே கத்துகிறார்கள்.  விமான நிலையக் காட்சி.  எல்லாமே செயற்கை.  குப்பை.  எவ்வளவு கற்பனையாக இருந்தாலும் அதில் செயற்கைத்தன்மை இருக்கக் கூடாது.  நம் சுரணையுணர்வில் வன்முறையைப் பாய்ச்சுவது குப்பை. 

ஆனால் இலக்கியத்தில் நான் குப்பை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை.  போலி அல்லது fake என்பதே என் வார்த்தை.  ஜேஜே சில குறிப்புகள் ஒரு போலியான படைப்பு.  மற்றபடி – அவர் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை – அவருடைய எல்லா எழுத்துமே எனக்கு படு சாதாரணமாகவும் தட்டையாகவும் தெரிகிறது.  ஆனால் உலகமே கொண்டாடுகிறது என்பது வேறு விஷயம்.  அது இலக்கியத்துக்காக அல்ல.  இன்னொருவர்.  அவர் உலகப் பிரசித்தம் பெறவில்லை என்றாலும் தமிழில் ஆகப் பிரபலம்.  அவரைப் பாராட்டாத தமிழ் எழுத்தாளரே இல்லை.  ஆனால் அவர் எழுதுவது எனக்கு தினத்தந்தி, விகடன் போன்ற பத்திரிகைகளில் தினசரிகளில் வரும் செய்திகள் மாதிரிதான் தெரிகிறது.  அதற்கு மேல் அதில் ஒன்றுமே இல்லை.  ஆனால் தமிழ்நாடே கொண்டாடுகிறது.  ஜெயமோகன் உட்பட.  இலக்கியம் என்று சொல்லப்படும் எழுத்து பலவித நுணுக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது என் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு.  கல்கியின் பொன்னியின் செல்வனில் என்ன நுணுக்கம் இருக்கிறது?  அது பொழுதுபோக்கு எழுத்து.  ஆனால் இலக்கியம் என்பது திரும்பத் திரும்ப வாசிக்கும்படியும் வாழ்வின் அடிப்படைகளைக் குறித்த கேள்விகளை நோக்கி நம்மை இட்டுச் செல்வதாகவும் இருக்க வேண்டாமா?  சினிமா பாட்டைக் கேட்கிறோம்.  நானும் கேட்பேன்.  ஆனால் பீத்தோவனைக் கேட்டால் அது வேறு மாதிரி இல்லையா?   அது ஆன்மாவுக்குள் செல்லவில்லையா?  செவி அளவில் நிற்பது சினிமா சங்கீதம்.  ஆனால் நம் ஆன்மாவுக்குள்ளும் சென்று ஊடுருவது சாஸ்த்ரீய சங்கீதம்.  பிஸ்மில்லா கானின் ஷெனாயை நீங்கள் கேட்டிருக்கலாம்.  கேட்டால் கடவுளைக் காணலாம்.  இதை இலக்கியம் இன்னும் ஆழமாகச் செய்கிறது. 

என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கேட்கலாம்.  எனக்கு ஜெயமோகனின் எழுத்து பிடிக்கவில்லையே?  அது முழுக்க முழுக்க வேறு விஷயம்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித ரசனையும் தேர்வும் இருக்கிறது.  ஜெயமோகனை அதிகம் வாசிப்பவர்களுக்கு என் எழுத்து ரசிக்காது.  இரண்டும் இரண்டு வெவ்வேறு தளங்களில் செயல்படுபவை.  நான் சொல்வது மிகத் தட்டையான, எந்த நுண்ணுணர்வும் இல்லாத எழுத்தை. 

என் கட்டுரைத் தொகுதிகளை இன்னும் விரிவாக வாசித்தீர்களானால் இந்தக் கேள்வியே எழாது.  உங்கள் வயது இருபத்தைந்துக்குள் இருக்க வேண்டும்.  சரியா?   

வயதைக் கண்டு பிடித்தது உங்கள் கேள்வியினால் அல்ல. உங்கள் மெயில் ஐடியை வைத்து. சுமார் இருபது வயது இளைஞர்கள்தான் இப்படிப்பட்ட ஐடி வைத்துப் பார்க்கிறேன்.