நேற்று எழுதிய சிறிய குறிப்பில் கடைசியில் இப்படி எழுதியிருந்தேன்.
”என் கட்டுரைத் தொகுதிகளை இன்னும் விரிவாக வாசித்தீர்களானால் இந்தக் கேள்வியே எழாது. உங்கள் வயது இருபத்தைந்துக்குள் இருக்க வேண்டும். சரியா?
வயதைக் கண்டு பிடித்தது உங்கள் கேள்வியினால் அல்ல. உங்கள் மெயில் ஐடியை வைத்து. சுமார் இருபது வயது இளைஞர்கள்தான் இப்படிப்பட்ட ஐடி வைத்துப் பார்க்கிறேன்.”
முதலில் இருபத்தைந்து என்று எழுதி விட்டு, பிறகு, அதுவே அதிகம் என்று தோன்றி இருபது என்று இன்னொரு வாக்கியத்தைச் சேர்த்தேன். பொதுவாக இந்தியாவில் (மட்டும்) வயது ஆக ஆக புத்தி மழுங்குகிறது என்று பலரும் – அல்லது எல்லோரும் சொல்லக் கேட்கிறேன். இதை வயதானவர்கள்தான் அதிகமாகச் சொல்வதையும் பார்க்கிறேன். பலர் விஷயத்தில் அது உண்மையும் கூட. ஊரே சொல்வதால் அப்படிச் சொல்வதை தப்பாக ஆக்கக் கூடாது என்றே வேண்டுமென்று புத்தியை மழுங்கடித்துக் கொள்கிறார்களோ என்று கூட எனக்குத் தோன்றியதுண்டு. நெருக்கத்தில் இருந்த என் பெற்றோர் அதற்குச் சிறந்த உதாரணம். மற்றபடி நான் பார்க்கும் நண்பர்களின் பெற்றோர் என் பெற்றோரையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் அளவிலேயே உள்ளனர்.
அசோகமித்திரனுக்கு என்றுமே வயது ஆனதில்லை. முப்பத்தைந்து வயதிலேயே ஆள் எழுபத்தைந்து மாதிரி தெரிந்தார். எழுபத்தைந்திலும் எழுபத்தைந்து மாதிரியே தெரிந்தார். அது அவர் உடல் வாகு. அவர் கிடந்த பட்டினி. பல காரணங்கள். மற்றபடி அவருக்கு வயதே ஆனதில்லை. கடைசி நாள் வரையிலும் அதே கிண்டல், அதே நக்கல், அதே சுறுசுறுப்பான எழுத்து. 1940-இல் ஹைதராபாதில் நடந்த விஷயத்தை நேற்று நடந்தது போல் தமிழ் இந்துவில் கட்டுரை எழுதுவார். ஆச்சரியம் என்னவென்றால், ஹைதராபாத் பற்றி அவர் ஏற்கனவே 2000 கட்டுரைகள் எழுதியிருப்பார். இந்தப் புதிய கட்டுரையில் அது எதுவுமே திரும்ப வந்திருக்காது. புத்தம் புதிய விஷயமாக இருக்கும்.
கிட்டத்தட்ட எனக்கும் வயதாகியும் புத்தி மழுங்கவில்லை என்று இன்று தோன்றியது. நேற்று தினேஷ் கடிதத்துக்குப் பதில் எழுதினேனா? அதற்கு இன்று வந்த பதிலைப் பார்க்கவும்.
அன்புள்ள சாரு அவர்களுக்கு,
என் கேள்விக்கு பதிலளித்தமைக்கு நன்றி சாரு. பிஸ்மில்லா கானின் ஷெனாய் அற்புதமாக உள்ளது.
சரிதான், சாரு. எனக்கு இருபது வயது ஆகிறது. அந்த மெயில் ஐடி பற்றின பகுதியை படித்த பின் ஏனோ எனக்கு சிரிப்பு வந்து விட்டது. இந்த மெயில் ஐடியை நான் பதினாறாவது வயதில் இருக்கும் போது ஒரு நோக்கத்துக்காக உருவாக்கினேன். இப்போது அந்த நோக்கம் மறைந்தது. இந்த மெயில் ஐடி மட்டும் மிஞ்சியுள்ளது. இப்போது, அதனை ஆன்லைன் வகுப்புகளுக்கு உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறேன். தங்களுக்கு youtube லிங்க் அனுப்புகையில் தவறுதலாக இதன் மூலம் அனுப்பி விட்டேன். ஆதலால், இதிலேயே தொடர்கிறேன்.
பிஞ்ஜ் செயலியில் வரும் அ-காலம் படித்தேன். நன்றாக உள்ளது. குறிப்பாக, பெய்ரூத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கையில், தெருவில் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்தவர்கள், குழந்தை இருப்பதை கவனித்த பின் தாலாட்டு பாடிய பகுதி என்னை மிகவும் கவர்ந்தது.
நேற்றிரவு யூடியூபில் உங்கள் பேச்சினை (தமிழ் – அசலும் நகலும்) கேட்டேன். காட்டில் சில செடிகள் விஷச் செடிகளாக இருப்பதற்காக மொத்த காட்டையே பழிப்பது மூடத்தனம் ஆகும். இசையையே சில பேர் மதச் சாயம் அரசியல் சாயத்தை பூசி வெறுப்பதை என்னவென்று சொல்வது. உங்களிடம் மிகவும் பிடித்த ஒன்று நீங்கள் எந்தப் பக்கத்தையும் தீவிரமாகப் பிடித்துக் கொள்ளாமல் இருப்பது. காம்யூ, நோபல் விருது உரையில் சொன்ன வாசகம் ஞாபகம் வருகிறது, “That is why true artists scorn nothing: they are obliged to understand rather than to judge”.
உங்கள் வாசகன்,
தினேஷ்.
மிகச் சரியாக இருபது வயது என்பதை மின்னஞ்சல் முகவரி மூலம் அறிந்து கொண்டதில் எனக்கு மெத்த மகிழ்ச்சி. அந்த முகவரியில் வயது எல்லாம் இல்லை. இளைஞர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய சில சமிக்ஞைகள் இருந்தன. அவ்வளவுதான் விஷயம். நான் இளைஞர்களை விட வயதானவர்களை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்றே அர்த்தம். வயதானவர்கள் அப்படிப்பட்ட மின்னஞ்சல் முகவரி வைக்க மாட்டார்கள். அதற்குக் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமும் விளையாட்டு புத்தியும் தேவை. வயதானவர்கள் முப்பது வயதிலேயே கிழடு தட்டிப் போனவர்கள்.
தினேஷிடம் பிடித்த இன்னொரு விஷயம். தமிழ் நன்றாக எழுத வருகிறது. பாருங்கள், இதையெல்லாம் பெருமையாகப் பேச வேண்டிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தி.ஜானகிராமன் நிச்சயமாக தன் வாசகருக்கு ”தமிழ் பிழையின்றி எழுதுகிறாய், சந்தோஷமாக இருக்கிறது” என்று எழுதியிருக்க மாட்டார்.
என்னை நெருங்கிப் பேசும் இளைஞர்களின் வாசிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக அர்ஜுன் மோகன். இன்று கூட பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புத்தகம் தேவை. எங்குமே கிடைக்கவில்லை. விலை 4000 ரூ போட்டிருந்தது. பழைய நூற்கிடங்கிலும் இல்லை. அர்ஜுனிடம் சொன்னேன். ஐந்தே நிமிடத்தில் புத்தகம் 570 ரூபாயில் ஃப்லிப்கார்ட்டில் கிடைக்கிறது என்றார். ரெண்டே புத்தகம்தான் உள்ளது என்றும் மேலதிகத் தகவல் சொன்னார். வாங்கியாயிற்று.
***