Bynge.in இல் நான் எழுதி வரும் அ-காலம் தொடரை (அப்படி ஒரு தொடர் வருவது உங்களுக்குத் தெரியுமா?) கலா கௌமுதியில் மொழிபெயர்த்துப் போடலாமா என்று கலா கௌமுதியிலிருந்து தகவல் வந்தது. அதன் ஆசிரியர் என்னுடைய இருபது ஆண்டுக் கால நண்பர். சமீபத்தில் ஏழெட்டு ஆண்டுகளாகத் தொடர்பில் இல்லை. நான்தான் காரணம். பொதுவாக நான் மலையாளத்தில் வெளியிடுவதை ஏழெட்டு ஆண்டுகளாக நிறுத்தி விட்டேன். பணம் ரொம்பக் கம்மியாகத் தருகிறார்கள். ஒரு கட்டுரைக்கு ஆயிரம் ரூபாய். மாத்ரு பூமியில் மட்டும் ரெண்டாயிரமோ என்னமோ. சரி, பணத்தை விடுங்கள். ஆடு ஜீவிதம் என்று ஒரே ஒரு நாவலை எழுதி விட்டு பென் யாமின் உலகப் புகழ் அடைந்து விட்டார். இப்போது நாலைந்து எழுதி விட்டார். நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சொல்கிறேன். உடனுக்கு உடனே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது. நல்ல ஆங்கிலத்தில் என்பது முக்கியம். அதை விட முக்கியம், உலகம் பூராவும் அதை கவனிக்கிறார்கள். ஏனென்றால், அந்தப் பதிப்பாளர்களுக்கு லண்டனில் imprint உள்ளது. சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். மலையாள லாபியும் பயங்கரம். இங்கே எனக்குப் பரிசு கிடைப்பது போல் இருந்தது. உடனே ————————(ஊர் பெயர்) இருந்து வடக்கே போன். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் சாருவுடையது. முடிந்தது கதை. Self publishingக்குப் பரிசு தர மாட்டார்கள். மார்ஜினல் மேன் ரிஜக்டட். புக்கருக்கு அனுப்பலாமா என்று பார்த்தால் அங்கே imprint இருக்க வேண்டும். இம்ப்ரிண்ட் என்றால், இங்கே உள்ள பதிப்பாளருக்கு அங்கே கிளையோ அல்லது அங்கே உள்ள ஒரு பதிப்பாளரோடு தொடர்போ இருக்க வேண்டும். அதெல்லாம் மலையாளிகளுக்கு உண்டு.
பரிசு விஷயமும் அப்படியே. எல்லா சர்வதேசப் பரிசும் மீராவுக்கும் பென் யாமினுக்கும்தான். இப்போதுதான் பெருமாள் முருகன் சுனாமி போல் நுழைந்திருக்கிறார்.
ஆக, பணமும் இல்லை, அங்கீகாரமும் இல்லை என்பதால் மலையாளத்தில் கொடுக்காமல் இருந்தேன். மற்றபடி நல்ல மரியாதை உண்டு. இங்கே சினிமா நடிகருக்கு – அதாவது கமலுக்குக் கொடுக்கும் மரியாதை – அங்கே எனக்கு உண்டு. எனக்கு மட்டும் அல்ல. எல்லா எழுத்தாளருக்கும்.
இப்போது மீண்டும் தொடரலாம் என்று சம்மதித்து விட்டேன். அ-காலம் தொடர் அல்ல. நிலவு தேயாத தேசம் தொடர் விரைவில் கலா கௌமுதியில் மொழிபெயர்ப்பில் வரும். பிறகு அ-காலம். இது தவிர வேறொரு தொடரும் கேட்டார்கள். எழுதுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.
ஒரு தகவலுக்கு: ராஸ லீலா நாவல் கலா கௌமுதியில்தான் இரண்டு ஆண்டுகளுக்கு வாரா வாரம் தொடராக வந்தது. அதற்குப் பிறகே அது தமிழில் புத்தகமாக வந்தது. ராஸ லீலா ஒரு தொடர்கதையாக எழுதப்பட்டதுதான். உலகில் தாய்மொழியில் வராமல் இன்னொரு அந்நிய மொழியில் வெளியிடப்பட்டு பிறகு தாய்மொழியில் வந்த நாவல்கள் ஏதும் உண்டா? தெரிந்தால் சொல்லுங்கள்.