இருட்டு அறையில் முரட்டுக் குத்து (செக்ஸ் கதை அல்ல; துரோகக் கதை): Inspired by Hamlet

எளியவர்கள் பற்றி அராத்து எழுதியதன் தொடர்ச்சி இது. அராத்து எழுதியது ஒரு சமூகவியல் cum அரசியல் ஆய்வு முடிவு. நமக்கு இரண்டு இயலுமே கொஞ்சம் அலர்ஜி. ஆனாலும் கஷ்டப்பட்டு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்த்தால், மேட்டர் சிம்பிள். எளியவன் என்றால் கஞ்சிக்கு இல்லாதவன் என்று அர்த்தம் அல்ல. மூளை காஞ்சவன் எளியவன். அவன் அம்பானியாகவும் இருக்கலாம். அய்யம்பேட்டை அய்யாசாமியாகவும் இருக்கலாம்.

அப்படி ஒரு எளியவர் சமீபத்தில் என்னை முதுகில் குத்திய கதை அராத்து, காயத்ரி, ராம்ஜி ஆகியோருக்குத் தெரியும். ஆனால் கடைசியில் எளியவர் ”இதுக்கு எல்லாம் காரணம் அராத்துதான்” என்று பழியை அராத்து தலையில் போட்டுவிட்டார். அதாவது, இருட்டு அறையில் முரட்டுக் குத்து குத்தி விட்டு ஓடியவர் இன்னார் என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் அராத்துதானாம். இல்லாவிட்டால் சாரு பாட்டுக்கு என்னோடு நட்பாகவே பழகிக் கொண்டிருந்திருப்பார் என்று முகநூலில் அழுதிருக்கிறார். எனக்கும் தனிப்பட்ட முறையில் மெஸேஜ் பண்ணினார். நான் வேண்டுமென்றே குத்தவில்லை சாரு. குத்தியவன் என் நெருங்கிய நண்பன். அவன் குத்தும்போது சேர்ந்து குத்துவது என் பழக்கம். அதனால் குத்தி விட்டேன். குத்தியதற்குப் பிராயச்சித்தமாகத்தான் நான் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் உங்கள் காலில் விழுந்து வைக்கிறேன். இருட்டு அறையில் நடந்ததை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து சாருவிடம் சொல்லி விட்ட நண்பரே, நீர் நினைத்ததை சாதித்து விட்டீர், நன்றாக இரும் என்ற ஆசீர்வாதத்தோடு முடிகிறது எளியவரின் அந்த முகநூல் பதிவு.