உலகத்தரமான ஒரு சிறுகதை

அது என்ன உலகத் தரம் என்றெல்லாம் கேட்கக் கூடாது.  அப்படிக் கேட்டால் அது அரிச்சுவடி நிலையில் உள்ள மாணவனின் கேள்வி.  போர்ஹேஸின் கதைகளைப் படித்திருக்கிறீர்களா?  ஆம் எனில் அதுதான் உலகத் தரம்.

கடந்த சில தினங்களாக எக்ஸைல் – 2இன் கடைசிக் கட்ட வேலையில் இருக்கிறேன்.  செப்பனிடும் வேலை.  ஆங்கில மொழிபெயர்ப்புக்காக மட்டுமே எழுதப் பட்டதால் பல இடங்களில் என் எழுத்தை நானே மொழிபெயர்ப்பது போல் இருந்தன.  இந்த நிலையில் எனக்கு வரும் எல்லா கடிதங்களுக்கும் ஒரு வரியாவது பதில் எழுதி விடும் நான் அதைச் செய்யவில்லை.  என் அன்புக்குரிய இளவல் ஷோபா சக்தியின் கடிதத்துக்குக் கூட பதில் எழுதவில்லை.  பல தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை.  மிக முக்கியமாக, அராத்துவின் புத்தக வெளியீட்டு விழா பற்றி எதுவும் எழுதவில்லை.  எக்ஸைலை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் எப்போதும் இருந்தது.  900 பக்கங்கள் முடித்து விட்டேன்.  இன்னும் 400 பக்கம்.  இந்த 400 தான் நாவலில் அதி முக்கியமான இடம்.  நாவலை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம் என்றால் இதுதான் கடைசிப் பகுதி.  ஆங்கிலத்தில் Epilogue என்று தலைப்பிட்டிருந்தேன்.   இதற்கிடையில்தான் கோவா பயணம்.  கோவாவில் என்னை சந்திக்க யாரும் இல்லை என்று தெரிகிறது.  இருந்த ஒரே நண்பரும் நான் செல்லும் தினங்களில் வெளியூர் போய் விடுவதாக எழுதியுள்ளார்.  கோவாவில் என் வேலை அரை மணி நேரம் தான்.  மற்றபடி மூன்று இரவுகளும் இரண்டு பகல்களும் உள்ளன.  திங்கள் கிழமை மாலை கிளம்பி வியாழன் மாலை வருகிறேன்.  ஈரோட்டிலிருந்து நண்பர் அலெக்ஸ் கோவா வருவதாக இருக்கிறார்.  சொர்க்கத்திலேயே இருந்தாலும் எனக்குத் தனிமை பிடிக்காது.  தனிமையாக இருந்தால் புத்தகம் படிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதில் மனம் ஈடுபடாது.  தன் வேலையையெல்லாம் விட்டு விட்டு என் பொருட்டு கோவா வரும் அலெக்ஸுக்கு நன்றி.

இந்த இக்கட்டான நிலையில் இன்று ஷோபா சக்தியின் தங்கரேகை என்ற சிறுகதை வெளிவந்திருப்பதை அறிந்து அதைப் படித்தேன்.  படித்து ஐந்து நிமிடம் தான் இருக்கும்.  சமீப காலத்தில் நான் படித்த ஒரு உலகத் தரமான சிறுகதை இது.  சிறுகதைகளில் ஷோபா சக்தியை அடித்துக் கொள்ள தமிழில் ஆளே இல்லை என்று தோன்றுகிறது.  இது ஆங்கிலத்தில் வெளிவர வேண்டும் என்பது என் அவா.  இவ்வளவு திறமையை வைத்துக் கொண்டு ஏன் ஷோபா வெத்து இலக்கியச் சண்டைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்கிறார் என்று எனக்குத் தெரியவே இல்லை.  யார் என்றே தெரியாதவர்களோடு எல்லாம் பக்கம் பக்கமாகச் சண்டை போடுகிறார்.

நான் மோடி ஆதரவாளன் என்பதால் அவருக்கு நான் எதிரியாகி விட்டேன்.  அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.  காங்கிரஸ் என்ற பெருநோயிடமிருந்து இந்தியா விடுபட்டாக வேண்டும்.  மற்றபடி இலக்கியம் ஒன்றே என் உயிர்மூச்சு.  இப்பேர்ப்பட்ட அற்புதமான சிறுகதையை எழுதியிருப்பதன் மூலம் ஷோபா சக்தி என்னை வென்று விட்டான்.  அவன் கைகளை எடுத்து என் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன்.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1142

 

Comments are closed.