பெரியார்

Charu

I feel your understanding about periyar will be helpful for modern youth. With multi dimensional views of yours will bring periyar metaphysical concept into lime light. People like vinayaga murugan are product of flat propaganda by periyarist and knee jerking response from hindutva.
Being a writer with postmodern understanding,  your views on Periyar will serve as a platform to debate and think.
Please consider this in writing series of article. Which I believe will help in unearth periyar as a social activist. Already Periyar was made as Saint and Satan.  Person who knows both can create master class symphony.
Nirmal
மேலே காணும் கடிதத்தை எழுதியுள்ள நிர்மல் வாசகர் வட்டத்தின் மிக அருமையான மாணவர்களில் ஒருவர்.  தவறுகளோடு கூடிய அவரது தமிழை சரி செய்து வெளியிட்டால் அவர் எழுதியுள்ள அறிவியல் கட்டுரைகள் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்யக் கூடியவையாக இருக்கும்.  சமீபத்தில் மதுரை சந்திப்பில் நிர்மலை சந்திக்க முடிந்தது.  கத்தரில் வாழ்ந்தாலும் கரூர் சென்ற போதும் அவரை சந்தித்தேன்.  இந்த முறை மதுரை சந்திப்பில் அவரை சந்தித்தது அவர் என் மீது கொண்டுள்ள அன்புக்கு ஒரு சான்று.  கத்தரிலிருந்து வந்து இறங்கியதும் எல்லோரிடமும் டாட்டா சொல்லி விட்டு தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு வந்து ஒரு நாள் முழுவதும் இருந்து பேசி விட்டுப் போனார்.  அந்த தைரியம் பாராட்டுக்குரியது.  அந்த சந்திப்பில் ஒரு நம்ப முடியாத விஷயம் நடந்தது.
உரையாடலின் இடையே மிலோராத் பாவிச் (Milorad Pavic) எழுதிய டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ் நாவலைப் பற்றிய பேச்சு வந்தது.  அப்போது நிர்மல் அந்த நாவலை ஆறு முறை படித்திருப்பதாகச் சொன்னார்.  நானே இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை.  அந்த நாவல் நம் வாழ்நாள் முழுவதும் படிக்கும்படியான சவாலைக் கொண்ட ஒரு படைப்பு.  நாவலின் எந்தப் பக்கத்திலிருந்தும் படிக்க ஆரம்பிக்கலாம்.  சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  இந்த நாவலுக்கு female edition என்ற ஒரு பதிப்பும் உள்ளது.  இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று எழுதியிருக்கிறார் எம்.டி.எம். (தமிழில் நான் வெகுவாக மதிக்கும் ஸ்காலர் எம்.டி.எம்.  அறிஞர் என்று எழுதினால் கிண்டலாக இருக்கும்.  தமிழ் வார்த்தைகள் எப்படியெல்லாம் abuse ஆகி இருக்கின்றன பாருங்கள்.)  உடனே நிர்மல் எம்.டி.எம்.மை மறுத்து, “ female edition-இல் பதினாறு வாக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன” என்று எழுதி அந்த வாக்கியங்களையும் எடுத்து எழுதியிருக்கிறார்.    நிர்மல் என் மாணவர் என்பதையும் மிலோராத் பாவிச் என் பாடத் திட்டத்தில் உள்ள முக்கியமான எழுத்தாளர் என்பதையும் இங்கே நான் பெருமையோடு நினைத்துப் பார்க்கிறேன்.    சமூக அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் இது போன்ற விஷயங்கள் எனக்கு சந்துஷ்டியை அளிக்கிறது.  சும்மா முகநூலில் முகம் காண்பித்து ஜல்லி அடிப்பது, குட்மார்னிங் போட்டு 300 லைக் வாங்குவது, வெட்டிச் சண்டை போடுவது என்பதில் நிர்மல் ஆர்வம் காட்டுவதில்லை.  அவர் பாட்டுக்கு படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்.  இந்த விஷயங்களை அவர் என்னிடம் கூட சொல்வதில்லை என்பதால் அவருடைய விரிவான வாசிப்பு குறித்து முதல் முறையாகக் கேட்டதால் நானே பிரமிப்பு அடைய நேர்ந்தது.
இப்போது நிர்மல் குறிப்பிடும் பெரியார் விஷயத்துக்கு வருவோம்.  பெரியார் பற்றிப் பேசியது எனக்கு நினைவில் இல்லை.  Wenjun காரணமாக இருக்கலாம்.   ஆனால் பெரியார் பற்றி நான் என்ன பேசி இருப்பேன் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது.  அதை மிக விரிவான ஒரு ஆய்வு நூலாக எழுதுவதும் சாத்தியம்தான்.  ஆனால்…
இந்த ஆனாலுக்கு ஒரு பத்து பக்கம் விளக்கம் எழுத வேண்டும்.  நேரமின்மை கருதி சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.  அம்மாதிரி ஆய்வுகளை ஆய்வாளர்கள்தான் செய்ய வேண்டும்.  துரதிர்ஷ்டவசமாக இங்கே ஆய்வாளர்கள் கம்மி.  ஜெயமோகன் ஒரு நல்ல ஆய்வாளர்.  ஆனால் அவர் ஒரு சார்பாகத்தான் பேசுவார்.  ஆய்வாளனுக்கு விருப்பு வெறுப்புகள் கூடாது.  ஜெயமோகனிடம் உழைப்பும் வாசிப்பும் இருக்கிறது.  ஆனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கவே செய்வார்.  அது உதவாது.  ஆனால் நான் ஒரு புனைவு எழுத்தாளன்.  நான் ஏன் இந்த ஆய்வுகளில் சிக்கிக் கொள்ள வேண்டும்?  இன்னும் மூன்று நாவல்களுக்கான கதைகள் என்னிடம் உள்ளன.  ஒவ்வொன்றும் இரண்டு ஆண்டுகள் எடுக்கும்.  இதற்கிடையே ஏன் ஆய்வு?  இன்னொரு முக்கியமான காரணம், நான் ஆங்கிலத்தில்தான் இயங்க விரும்புகிறேன். எனது நாவல்களை நான் ஆங்கிலத்தில் கொண்டு போயாக வேண்டும்.  ஏன்?  சுஜாதா இருந்தார்.  அவரைப் போன்ற பிரபலம் யாருமே கிடையாது.  இலக்கியத்தில் ரஜினிகாந்த் போல. வெறும் கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்த, நான்காம் வகுப்பு மட்டுமே படித்த என் அம்மாவே சுஜாதாவின் விசிறி.  ஆனால் பாப்லோ நெரூதா, காப்ரியல் மார்க்கேஸ் போன்றவர்களுக்கு இருந்த மதிப்பு சுஜாதாவுக்கு இருந்ததா?  சிலேயின் அரண்மனை அளவுக்கு இருந்தது நெரூதாவின் வீடு.  ஜனாதிபதியாக இருந்த டாக்டர் அயெந்தே நெரூதாவின் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பார்.  அயெந்தே கொல்லப்பட்டதும் பினோசெத் ஆட்சிக்கு வந்து நெரூதாவுக்கு பலவித நெருக்கடிகள் கொடுத்து சாகடித்தார்.  இப்படி வாழ்வு என்றாலும் சாவு என்றாலும் அதை ஜனாதிபதி செய்ய வேண்டியிருந்தது.  ஆனால் இங்கே தமிழ்நாட்டில் என் வாழ்வும் மரணமும் என் வீட்டுக் கத்தரிக்காயின் உள்ளே இருக்கும் புழுவைப் போல் அல்லவா உள்ளது?
கோவா செல்வதற்கு ஆகும் செலவை யாரிடம் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  தன் குடும்ப பரிபாலனத்துக்காக சுஜாதா தான் சாகும் வரை வேலை செய்து கொண்டிருக்க வேண்டியிருந்தது.  எனக்குத் தெரிந்த மிகப் பிரபலமான  ஒரு எழுத்தாளர், அப்பாடா, டிவியிலிருந்து காசு வருது… கொஞ்சம் ஆஃபீஸ் வாடகை கொடுக்க முடிகிறது என்று பெருமூச்சு விட்டார்.    தருண் இப்போது சிறையில் இருக்கிறார்.  ஆனால் அவர் புத்தகம் நாலு லட்சம் பிரதி விற்றது.  ஒரே வார்த்தையில் சொல்கிறேன்.  சேடன் பகத்தினால் ஹலோ ராகுல் என்றோ, மோடி ஜி என்றோ அழைக்க முடியும்.  இந்திரா காந்தி ஒரு பேரழகி என்று குஷ்வந்த் சிங்கால் எழுத முடிந்தது.  இப்போதைய பிரதமரின் – பெயர் என்ன?  அவர் ஒரு சீக்கியர் என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது – மனைவி தன் தோழி என்று எழுதுகிறார் குஷ்வந்த் சிங்.  அந்தத் தோழி குஷ்வந்தின் புத்தகத்தை வெளியிடுகிறார்.  என் நண்பர்  உதய் பிரகாஷ் என்ற ஹிந்தி எழுத்தாளர்.   ஹிந்தி நடிகர் ஃபர்ஹான் கான் பற்றி உங்களுக்குத் தெரியும்.  அவர் ஒரு பேட்டியில் என் மனம் எப்போதெல்லாம் உற்சாகமாக இல்லையோ அப்போதெல்லாம் உதய் பிரகாஷைப் படிப்பேன் என்று சொன்னார்.  சொன்னதோடு மட்டும் அல்ல, உதய் பிரகாஷ் வீட்டுக்குப் போய் (தில்லி) மூன்று தினங்கள் அவரோடு அவருடைய வீட்டில் தங்கி விட்டு வந்திருக்கிறார்.   இது போன்ற அடையாளம் தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கிறதா?
ஒன்றுமில்லை நிர்மல்… சிலே போக வேண்டும் என்று இருபது ஆண்டுகளாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  யோசனையில் தான் நிற்கிறது.  இங்கே எழுத்தாளனைக் கொண்டாடும் சூழ்நிலை இல்லை.  மதுரையில் ஒருசில நண்பர்கள் gatecrash செய்து வந்து என்னோடு போட்டோ எடுத்துக் கொண்டு போனார்கள்.  அதுவா கொண்டாட்டம்?  (மற்ற மதுரை கொண்டாட்டங்கள் பற்றி வேறு ஒரு பத்திரிகையில் எழுதியிருக்கிறேன்)
ஆய்வுகளை ஆய்வாளர்கள் செய்யட்டும்.  நான் கதைகளை எழுதுகிறேன்…
பணம் அனுப்புவதற்கான வங்கி விபரம்:

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI account No. 602601 505045

Account holder’s name: K. ARIVAZHAGAN

T. Nagar branch.  chennai

IFSC Code Number: ICIC0006026

Comments are closed.