அடங்காத ஆட்டம் ஆடி ஒரு முறை பட்டாகி விட்டது. இன்னுமா? அனுபவித்த வலியும் வேதனையும் போதாதா நண்பா? நான் உன்னை அறிஞன் என்றேன். நீ என்னை முட்டாள் என்கிறாய். யார் அறிஞன்? யார் முட்டாள்? திராவிடக் கொழுந்துகளின் தமிழ்த் தொண்டின் காரணமாக, அறிஞன் என்று சொன்னால் அது கிண்டல் போல் தொனித்து விடக் கூடாதே என்று மெனக்கெட்டு ஸ்காலர் என்று எழுதினேன். நீயோ என்னையும் நிர்மலையும் கூகிளில் பார்த்து எழுதுகிறோம் என்று கிண்டல் செய்கிறாய். 20 ஆண்டுகள் ஆகியும் நீ மாறவில்லையா நண்பா? புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொன்ன கதை என்ற என்னுடைய சிறுகதையை நீ தானே வெளியிட்டாய்? இப்போது 20 ஆண்டுகள் ஆகியும் என்னை நீ முட்டாள் என்கிறாய். நாம் வளரவே இல்லையா? உன் எழுத்தைப் பார்த்தால் வருடத்தில் பத்து மாதம் ஆக்ஸ்ஃபோர்ட், ஸோர்போன், யேல் என்று உன் ஃப்ரெஞ்ச் தோழியுடன் சுற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. உன் கட்டுரைகளையும் கவிதைகளையும் நீ இப்போதெல்லாம் விமான நிலையத்திலிருந்துதான் எழுதுவதாக நீயே சொல்கிறாய். உலகில் நீ கால் வைக்காத பல்கலைக்கழகமே இல்லை போல் இருக்கிறது. இப்பேர்ப்பட்ட அறிஞனான நீ இன்னமும் என்னைப் போன்ற பன்னாடைகளை கூகிளில் படிக்கிறாய் என்று சொன்னால் உன்னுடைய கோட்டு சூட்டு வேஷத்துக்குப் பொருந்தவில்லையே நண்பா? எல்லாம் டாஸ்மாக் பார்ட்டி போல என்றல்லவா எல்லோரும் நினைப்பார்கள்? அல்லது, அதுதான் உண்மையா?
சரி, நானும் நிர்மலும் கூகிளில் பார்த்தோம் என்கிறாய். மிலோராத் பாவிச்சை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது யார்? 30 ஆண்டுகளுக்கு முன்பு நாகார்ச்சுனன் Dictionary of Khazars –ஐ என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்ல, அதே சமயத்தில் தமிழவனும் அதைப் பற்றிப் பேச அதிலிருந்துதானே மிலோராத் பாவிச் தமிழ்நாட்டுக்கே அறிமுகம். 30 ஆண்டுகளுக்கு முன்பு நீ பள்ளிக்கூடத்தை முடித்து விட்டு அப்போதுதானே கல்லூரியில் சேர்ந்திருப்பாய்? அப்போதெல்லாம் கணினி பற்றிய பேச்சே இல்லை அப்பனே. புத்தகங்களை வாங்குவதற்குக் கூட ஆறு மாதமெல்லாம் காத்திருந்திருக்கிறோம். அதிலும் சென்னையில் தாஜ் கன்னிமாரா ஓட்டலில் உள்ள Giggles என்ற புத்தகக் கடையின் உரிமையாளர் நளினி செத்தூரிடம் சொல்லி வைத்து வாங்குவோம். கார்லோஸ் ஃபுவெந்தேஸின் Terra Nostra என்ற நாவலை இப்படித்தான் ஆறு மாதம் காத்திருந்து வாங்கினோம் நானும் நாகார்ச்சுனனும். ஒவ்வொரு மாதமும் போய்க் கேட்டுக் கொண்டே இருப்போம். கப்பலில்தான் புத்தகம் வர வேண்டும்.
இன்னமும் எனக்கு கணினி சமாச்சாரம் எல்லாம் புதுசாகத்தான் இருக்கிறது. நீ தான் தமிழ் எழுத்தாளர்களிலேயே முதல் முதலாக மடிக்கணினி வாங்கியவன். அதுவும் அமெரிக்க ஜனாதிபதி உனக்குப் பரிசாகக் கொடுத்தது என்பதையும் நாம் இருவரும் நுங்கம்பாக்கம் வேலு ஒயின்ஸில் தண்ணி அடித்துக் கொண்டே மரியோ பர்கஸ் யோசா பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது சொல்லியிருக்கிறாய். நீ இப்போது பல்வேறு ஜனாதிபதிகளுடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதால் அந்த அமெரிக்க ஜனாதிபதி விஷயம் மறந்து போய் இருக்கும். நீ யேல் பல்கலைக்கழகத்தில் Folklore Department-க்குக் கொடுத்த சிலபஸைப் பார்த்து அசந்து போன அமெரிக்க புத்திஜீவிகள் ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்து் அவர் உன்னைக் கூப்பிட்டு விருந்து கொடுத்த கதை அது. ஏதோ வயிற்றெரிச்சலில் கிண்டல் செய்கிறேன் என்று நினைக்காதே நண்பா. வயிற்றெரிச்சல் உண்மைதான். ஆனால் கிண்டல் அல்ல. நீ அமெரிக்க ஜனாதிபதியோடு அப்படி விருந்து உண்ட போது உன் வயது 23 என்று நினைக்கிறேன். எப்பேர்ப்பட்ட அறிஞன் நீ! அப்பேர்ப்பட்ட அறிஞனான நீ என்னைப் போன்ற முட்டாக் காதுகளோடு (வேறு நல்ல வார்த்தை போட்டால் பெண்ணியவாதிகள் சண்டைக்கு வருவார்கள்… எனக்கு வேண்டாம் வம்பு) விவாதத்துக்கு வரலாமா? சரி, நாங்கள்தான் கூகிளில் பார்த்து Dictionary of Khazars இன் Male edition and Female edition இரண்டுக்கும் இடையில் 16 வரி வித்தியாசம் என்று கண்டு பிடித்தோம். நீ உலக இலக்கிய நாயகன் தானே? இவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பற்றி எழுதும் போது அட்லீஸ்ட் கூகிளைப் பார்த்து சரி செய்து கொண்டிருக்க வேண்டாமா?
வெட்கமாக இல்லையா இப்படியெல்லாம் கூகிள் பாகிள் என்று பேச? கூகிளில் என்ன தெரியும்? அதில் போட்டிருப்பதெல்லாம் சரியா? அது ஒரு தொலைபேசி அட்டவணையைப் போல் ஒன்று. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். நண்பா, நீ என்னை மாதிரி தெருப் பொறுக்கிகளோடு, ஈனப் பிறவிகளோடு, முட்டாக் காதுகளோடு பேசுவதே தவறு. நேற்று நடந்த வேடிக்கையைக் கேள். ஒரு நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். இரவு பத்து மணி. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. ஒரு பையன் அபாரமாகப் பாடிக் கொண்டிருந்தான். எனக்குத்தான் கொஞ்சம் கொஞ்சம் இசை பற்றித் தெரிந்து தொலையும் இல்லையா? நிச்சயம் இந்தப் பயலுக்குத்தான் பரிசு என்றேன். அவன் பாடி முடித்ததும் வெள்ளைப் புடவை கட்டிய வயதான அம்மா எழுந்து மேடைக்குப் போய் அந்தப் பையனிடம் ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து உச்சி முகர்ந்து பாராட்டினார். அவர் போட்டிருந்த உடை அலங்காரத்தை நான் எங்கோ பார்த்திருக்கிறேன். பெயர் தெரியவில்லை. இந்த அம்மா யார் என்றேன் நண்பரிடம். ”இவரைத் தெரியாதா? இவர் தான் ஜானகி” என்றார். உடனே நான் வி.என். ஜானகி செத்துப் போய்ட்டார் இல்ல? என்றேன். நண்பர் இருக்கையிலிருந்து எழுந்து நின்று, இவர் எஸ். ஜானகி என்ற மிகப் பிரபலமான பாடகி சாரு என்றார். அத்தோடு கிளம்பி வந்து விட்டேன். பிரச்சினை என்னவென்றால், எனக்கு என்.ஸி. வஸந்த கோகிலம், எம்.எல். வசந்த குமாரி மாதிரி பாடகிகளைத்தான் தெரியும். வேண்டுமானால் பானுமதி வரை வரலாம். அதற்கு மேல் ம்ஹும். அப்பேர்ப்பட்ட பழைய ஆளிடம் நீ கூகிள் பாகிள் பற்றியெல்லாம் பேசுவது அனாச்சாரம் நண்பா. அதுசரி, உன் ஃப்ரெஞ்ச் தோழியையும் நீ இப்படித்தான் கூகிள் பாகிள் என்று சொல்லி டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறாயா? சமீபத்தில் என் ஃப்ரெஞ்ச் தோழி ஒருத்தி தான் படித்த ஒரு ஃப்ரெஞ்ச் நாவல் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதை எழுதியவர் ஒரு இளம் ஃப்ரெஞ்ச் பெண். அந்த நாவலில் அவள் ஒரு தமிழ் எழுத்தாளனால் படும் கடுமையான மன உளைச்சலையும் உடல் உபாதைகளையும் பச்சை பச்சையாக எழுதியிருக்கிறாள். அவள் உடலுறவுக்குக் கூப்பிட்டால் தமிழ் எழுத்தாளன் தாமிரபரணியைப் பற்றிக் கவிதை பாடுகிறானாம். ஆதிவாசி என்கிறானாம். கூகிள் என்கிறானாம். என் பிள்ளைகளைப் போல் வருமா என்கிறானாம். சாரு ஒரு மூடன்; கூகிளைப் பார்த்து எழுதுபவன் என்கிறானாம். இன்னும் என்னென்னவோ பிதற்றுகிறானாம். இப்போதுதான் தெரிகிறது, அந்த ஃப்ரெஞ்ச் நாவலாசிரியை உன்னுடைய தோழியாகத்தான் இருக்க வேண்டும். அந்தத் தமிழ் எழுத்தாளனும் நீ தான்.
சரி நண்பா, நிர்மல் யார்? அவர் கூகிளில் பார்த்தார் என்கிறாய். ஆனால் உன் பிள்ளைகளை மெச்சுகிறாய். உன் குஞ்சிலிருந்து வந்தால் மெச்சுவாய். அடுத்தவன் குஞ்சிலிருந்து வந்தால் திட்டு, வசை. எனக்கு அப்படி அல்ல நண்பா, எனக்கு என் பிள்ளையும், உன் பிள்ளையும், நிர்மலும் ஒன்றுதான். வேறு வேறே அல்ல. இதுதான் ஞானம். இந்த அற்புதமான மனநிலையையே நான் எப்போதும் தியானித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீயோ அறிவைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாய். அது உன் வாழ்க்கை. ஏன் என்னை இழுக்கிறாய்?
என்னை முனைவர் என்றும் பேராசிரியர் என்றும் நக்கல் அடித்திருக்கிறாய். அதெல்லாம் உனக்கு உவப்பான வேலகள், பட்டங்கள். நான் ஒரு தெருப் பொறுக்கி, பிச்சைக்காரன், முடிச்சவிக்கி. 20 ஆண்டுகளாக ஸ்டெனோ வேலை பார்த்தவன். அந்த வேலையை விட்ட போது மேலே சொன்ன வேலைகளைச் செய்தவன். உன்னிடம் கூட ஒருமுறை முடிச்சு அவிழ்த்திருக்கிறேன் நண்பா. எனக்கு எப்போதாவது நல்ல காலம் வரும் போது உன் பாக்கெட்டிலிருந்து கிளப்பிய 2000 ரூபாய்க்கும் வட்டி போட்டுக் கொடுத்து விடுகிறேன்.
உன்னோடு சம்வாதம் செய்ய உத்தமத் தமிழ் எழுத்தாளன் தான் லாயக்கு. எடுத்த எடுப்பிலேயே டேய் தேவ்டியா பயலே என்று திட்டி விட்டு விவாதத்துக்கு வேறு கூப்பிடுகிறாயே, நியாயமா? இதை விட டேய் தேவ்டியாப் பசங்களா என்று உன் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே நண்பா? ஆனால் நீ போட்டுக் கொண்டிருக்கும் கோட்டு சூட்டு வேஷம் அதுக்குப் பொருத்தமாக இருக்காது? அதனால்தான் கூகிள் பசங்களா என்று கிண்டலடிக்கிறாய்? சரி போ… நன்றாக இரு.
கடைசியாக ஒரு விஷயம் நண்பா…
நீ உன்னுடைய வாழ்வில் எல்லாவற்றையும் சாதித்து விட்டாய்… வீடு கட்டியது, குழந்தைகள் பெற்றது, குழந்தைகளை நம்பர் ஒன் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பது, கோடி கோடியாய் சம்பாதிப்பது, எல்லா சாதனையும் முடிந்து விட்டது உனக்கு. ஆனால் நானோ இன்னும் ஆரம்பிக்கவே இல்லை ஆட்டத்தை. இன்று கூட சாயி பாபா கோவிலில் நின்று, ”ஏழு ஆண்டுகளாக உங்களைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறேனே என் கண்ணீர் தெரியவில்லையா பாபா, எப்போது தான் ராஸ லீலா நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஒருவரை அனுப்பப் போகிறீர்கள்?” என்று கேட்டு அழுது விட்டு வந்தேன்.
நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை நண்பா… வாழ்க்கையில் நீ நினைத்தவற்றையெல்லாம் – அன்பான மனைவி, ஆண் மகன்கள், கல்வி, வீடு, சொத்து, சூத்து – எல்லாவற்றையும் சாதித்து முடித்து விட்டு யாரடா கிடைப்பான் குண்டியைக் கிழிக்கலாம் என்று அலைந்து கொண்டிருக்கிறாய்… நான் ஒரு பிச்சைக்காரன். இனிமேல் தான் ஆரம்பிக்கவே வேண்டும். அதுவும் கடவுள் மனம் இரங்கி ஒரு மொழிபெயர்ப்பாளரை அனுப்பினால். அதனால் உன்னோடு எல்லாம் மல்லுக்கு நிற்க எனக்கு நேரமோ பலமோ இல்லை. என்னை மன்னித்து விட்டு விடு. உன் பெயரைக் குறிப்பிட்டதற்காக உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
Comments are closed.