Bynge.in இல் வெளிவந்து கொண்டிருக்கும் அ-காலம் தொடர் ராஜேஷ் குமார் போன்ற கமர்ஷியல் ரைட்டிங் சூப்பர் ஸ்டார்களோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ராஜேஷ் குமாரின் வாசிப்பு எண்ணிக்கை பத்து லட்சம். என்னுடைய அ-காலம் தொடர் ஒரு லட்சத்தையாவது தொடும் என்று எதிர்பார்த்தேன். ம்ஹும். 92000. அடுத்த அத்தியாயத்தோடு முடியப் போவதால் இவ்வளவுதான் எண்ணிக்கை. ஆனால் இதுவே பெரிய சாதனைதான்.
அடுத்த மாதம் என்னுடைய ”நான்தான் ஔரங்கசீப்…” நாவல் தொடங்க இருக்கிறது. நான் என் வாழ்நாளில் அதிக சிரமப்பட்டு எழுதிக் கொண்டிருக்கும் நாவல் இதுதான். ஒரு பக்கம் தியாகராஜா. அந்த நாவலை எழுதுவது காற்றியில் கயிறு திரிப்பது மாதிரி இருக்கிறது. ஆதாரங்களே இல்லை. கிடைப்பதெல்லாம் கதாகாலட்சேபங்கள். ஔரங்கசீப்புக்கோ ஆதாரங்கள் மலைமலையாகக் கொட்டிக் கிடக்கிறது. எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியவில்லை. நாவலையும் பல்லாயிரம் பக்கங்களுக்கு எழுத முடியாது. யாரும் படிக்க மாட்டார்கள். ஐநூறு பக்கத்துக்குள் இருந்தால்தான் உசிதம். ஆனாலும் இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாது. என்ன இருந்தாலும் ஆயிரத்தைத் தாண்டக் கூடாது என்று இருக்கிறேன்.
ஒரு பக்கம் ஒரு எறும்பைக் கூட கொல்லாத, உஞ்ச விருத்தி செய்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்த ஒரு பிராமணன். இன்னொரு பக்கம், உலகத்தின் மிகப் பெரிய பணக்கார முஸ்லீம். உலகத்தின் மகா பெரிய சக்ரவர்த்தி. ஒருவருக்கு எப்போதும் ராம பஜனை. இன்னொருத்தருக்கு எப்போதும் போர், எப்போதும் ரத்தம். ஆனால் ரெண்டு பேருமே மிகுந்த கடவுள் பக்தி மிகுந்தவர்கள். பேரரசராக இருந்தாலும் தரையில் படுத்து உறங்கியவர் ஔரங்கசீப். இந்த இரண்டு தீவிரங்களுக்கு இடையே நாள் தோறும் உழன்று கொண்டிருக்கிறேன். ஔரங்கசீப்பின் முதல் எட்டு அத்தியாயங்களை ஒரு சில நண்பர்களுக்கு அனுப்பினேன். அராத்து ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து கருத்து சொல்லி இந்த நாவலின் உருவாக்கத்தில் எனக்குப் பெரும் துணை புரிகிறார். மணிபால் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் ஆய்வு மாணவர் (இம்மானுவல் காண்ட் பற்றி உயர் ஆய்வு செய்து வருகிறார்) எட்டு அத்தியாயங்களையும் படித்து விட்டு மிக உற்சாகமாக பதில் எழுதினார். இன்னொருவர் – இப்போதைக்குப் பெயர் வேண்டாம் – “I have a tough time closing it even when I’m almost asleep. I am begging my eyes to stay open for one more page” என்று பதில் எழுதினார்.
ஔரங்கசீப் என்ற ஒரு நிஜமான பாத்திரத்தை என் எழுத்தில் கொண்டு வருவது குறித்து உண்மையில் எனக்கு அதைரியமாகவும் அச்சமாகவுமே இருந்தது. வெறும் வரலாற்று நூலாக ஆகி விடக் கூடாது, புதினமாக இருக்க வேண்டும் என்ற சவால் எனக்கு முன்னே இருந்து கொண்டே இருக்கிறது. அரபி மொழி குறித்தும் இஸ்லாம் பற்றியும் என்னுடைய நூற்றுக்கணக்கான சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவர் இலங்கையில் வாழும் என் நண்பர் லஃபீஸ் ஷஹீத். சமயங்களில் ஃபார்ஸி மொழி குறித்தும் என் சந்தேகங்களுக்கான பதில்களை அவரது நண்பர்களிடமிருந்து கேட்டுச் சொல்வார். மணிபால் பல்கலைக்கழகத்தின் விவேக்கிடமும் பல சந்தேகங்கள் கேட்பேன். அவரும் வரலாற்று பேராசிரியர்களையும் ஃபார்ஸி மொழி மாணவர்களையும் அறிமுகப்படுத்துவார். அப்புறம் இருக்கிறது நூற்றுக்கணக்கான புத்தகங்கள்.
ஆனால் ஒரு விஷயம். இதுவரையில் எழுதப்பட்ட என் எல்லா நாவல்களை விடவும் ”நான்தான் ஔரங்கசீப்…” சுவாரசியமாக இருக்கும். தியாகராஜா அப்படி இருக்காது. தியாகராஜா எல்லோருக்குமான நாவல் அல்ல. அதை நான் மிக அடர்த்தியான மொழியில் எழுதி வருகிறேன். அதனால்தான் தொடராகக் கொடுக்கவில்லை. ஔரங்கசீப் நாவல் ஒரு அதகளம். அடிபொலி. பூந்து விளையாடியிருக்கிறேன். நீங்கள் ரசிப்பீர்கள். அதில் வரலாறும் இருக்கும். தத்துவமும் இருக்கும். கவிதையும் இருக்கும். (ஔரங்கசீப் ஒரு அற்புதமான கவிஞரும் கூட!) காதலும் இருக்கும். ஆம், ஔரங்கசீப்பின் நிறைவேறாக் காதல் ஒன்றும் இருக்கிறது.
எல்லாவற்றையும் அடுத்த மாதத்திலிருந்து bynge.in இல் வெளிவர இருக்கும் ”நான்தான் ஔரங்கசீப்…” என்ற நாவலில் காணலாம். இந்த நாவலுக்காக ஒரு அமர்க்களமான ஓவியத்தை வரைந்து கொடுத்த ரோஹினி மணிக்கு என் அன்பும் நன்றியும்.
இந்த நாவலிலாவது வாசிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறதா என்று பார்ப்போம்.