ஒரு கடிதமும் பதிலும்…

தமிழ் மொழி, இலக்கியம். பண்பாடு (1970-2020)

ஒரு மாற்றுக்குரல்

தமிழவனின்  ஆளுமையும், படைப்புகளும்

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு என்னும் தளங்களில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருப்பவர் கார்லோஸ் என்னும் இயற்பெயருடைய தமிழவன். தமிழகத்திற்கே வெளியே தமிழ் பயின்று தமிழகத்திற்கு வெளியே தமிழ் கற்பிக்கும் சூழல் ஏற்பட்டதால் தமிழ்ப்  படைப்புலகையும், கருத்துலகையும் உலகத் தரத்திற்கு உயர்த்திப் பார்க்கும் தேட்டம் அவருக்கு இருந்தது. இப்படி ஒரு முயற்சியில் துடிப்போடு இயங்கும் மலையாள, கன்னட இலக்கியச்சூழல்களை அருகிருந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததனால் அதை நோக்கிய ஒரு சொல்லாடலை உருவாக்குவதற்கும்,, அந்தச் சொல்லாடலை முன்னோக்கி எடுத்துச்செல்ல ஒரு குழுவை உருவாக்குவதற்கும் அவரது முயற்சி தொடர்ந்து இருந்து வந்தது.

காலனீயப்பாதிப்புக்கு ஆட்பட்ட, சுய விமர்சனமில்லாத பாரம்பரியப் பிடிப்புக் கொண்ட ஒரு சமூகத்தில் மொழியையும், இலக்கியத்தையும் மட்டுமே பேசிக்கொண்டிருப்பது போதாது என்பதால் அதற்கு வெளியே அரசியல் கோட்பாடுகள், சமூகவியல் நெறிகள் என்பவற்றைக் கைக்கொள்ள வேண்டியது தமிழவனுக்கு அவசியமாகத் தெரிந்தது. திராவிடவியலின் தி.மு.க. வழிப்பட்ட எழுத்துக்களையும், பண்டிதர்களிடம் அடைபட்டுப்போன இலக்கணத்தமிழ் பிரிவுகளையும் அவற்றிற்கு மாற்றான எழுத்து, கசடதபற  இதழ்கள் முன் வைத்த அழகியல் வகைகளையும் தாண்டிப்போக எடுத்த முயற்சி தான் படிகள் கலாச்சார இதழ். படிகள் தோன்றுவதற்கு முன்பாகவே பொதுவுடமைக் கட்சி சார்ந்த சொல்லாடல்களுடனும், புதுக்கவிதை உருவாக்க முயற்சித்த சொல்லாடலுடனும் ஒரு சுற்று வாதத்தை  தமிழவன் நடத்தி முடித்திருந்தார்

ஒரு சமூகவியல், கோட்பாட்டியல் இதழாக படிகள்  தந்த உற்சாகம் அதை ஒரு இயக்கமாக மாற்றுவதற்கான உத்வேகத்தைக் கொடுத்தது. அது ‘இலக்கு கலாச்சார இயக்க’ மாக மாறியது.  ஒரு வெற்றிகரமான இயக்கமாக ‘இலக்கு’  மாறவில்லையாயினும் அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின் அவசியத்தைத் தமிழ்க் கருத்துலகத்திற்கு  உணர்த்த முடிந்தது.   பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்கான ஒரு வழி என்பதனால் இங்கே இன்று என்ற ஒரு நடுவகைப் பத்திரிகையையும் முயற்சி செய்தார். அதுவும் அதைத் தொடர்ந்த பத்திரிகை முயற்சிகளும் தமிழவனின் மாறாத குரலையே எதிரொலித்தன. ஆரோக்கியமான பண்பாட்டுச் சூழல் ஏற்படவேண்டுமானால் மத்தியதரவர்க்கம் வணிக அரசியல், அரசியல் கலை என்னும் மாயைகளிடமிருந்து விடுதலை பெறவேண்டும். அதையே தனது எழுத்துக்கள் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் உணர்த்திக் கொண்டிருக்கிறார்.மொழி, இலக்கியம் என்பதைத்தாண்டி பண்பாட்டுக்கூறுகளைக் கொண்டிருக்கும்  திரைப்படம், நாடகம், நாட்டாரியம், ஓவியம் உள்ளிட்ட  எல்லாப் படைப்பு வெளிப்பாடுகளிலும் தமிழவன் அக்கறை கொண்டிருந்திருக்கிறார். தமிழின், தமிழரின் செழுமையான அடையாளங்களை அவர் ஒருபோதும் புறந்தள்ளியதில்லை. அதேசமயம் அவற்றை புதுக்கோணங்களில் பார்க்கவும் தயங்கியதில்லை.. இன்றும் மாறாத அவரது இந்தி எதிர்ப்புப் போக்கும், திருப்பாவையை ஒரு புதிய கோணத்தில் பார்க்க முயற்சித்ததையும் இங்கு சுட்டலாம். தமிழவனின் படைப்புலகம் சமரசமில்லாதது.  எதிர்வினைகளைப் பற்றிக் கவலைப்படாதது. தனது நோக்கில் தனது சமூகத்தின் மரபுகளையும், அதன் தற்கால ஸ்திதியையும் ஒரு தனித்த மொழியில் பரிசீலனை செய்வது.. இதைத்தான் எஸ். சண்முகம் ‘கதை மொழி’ என்று சொன்னார்.

தமிழவனின் இலக்கியப் பங்களிப்பையும், பண்பாட்டுச் செயல்பாடுகளையும் பரிசீலிக்கும்போது  அது ஒரு காலகட்டத்திய பரிசீலனையாக இருக்கும். நீங்கள் தமிழவனின் படைப்புகளில் ஈடுபாடு கொண்டிருப்பவராக இருந்தால், தமிழ் மொழி, இலக்கிய, பண்பாட்டுத்தளங்களில் அவரது செயல்பாடுகளை கவனித்துக்கொண்டிருப்பவராக இருந்தால் அது குறித்த ஒரு கட்டுரை தரும்படி கேட்டுக்கொள்கிறோம். கட்டுரை ஐந்து பக்கங்களிலிருந்து பத்து பக்கங்கள் வரை வரலாம். காத்திரமான விவாதங்களை எழுப்பும் கட்டுரைகளுக்கு பக்க வரையறை இல்லை. கணிணியில் தட்டச்சு செய்து அனுப்பினால் நல்லது.

தொகுப்பாசிரியர் ப.சகதேவன் (பழனி.கிருஷ்ணசாமி}    Krishnaswamip@yahoo.com

சாரு நிவேதிதாவின் பதில்:

my dearest krishnaswami


அம்பானி மாதிரி ஒரு பணக்காரரைக் கற்பனை செய்து கொள்வோம்.  அவருடைய பிள்ளை சாரு நிவேதிதா.  ஆனால் பதினெட்டு வயதில் அம்பானியால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு விட்டான் சாரு.  சாருவிடம் பரம் பைசா கிடையாது.  அவனே கூலி வேலை செய்து அவனே தன் காலில் நின்று உலகத்தாரால் புறக்கணிக்கப்பட்டு, தூஷணை செய்யப்பட்டு, காறி உமிழப்பட்டு 68 வயதில் ஏதோ எப்படியோ தன் காலில் நின்று கொண்டிருக்கிறான்.  அம்பானியின் நண்பர் பெயர் ப. கிருஷ்ணசாமி.  கிருஷ்ணசாமியை சாருவுக்கு ரொம்பப் பிடிக்கும்.  கிருஷ்ணசாமி படிகள் பத்திரிகையில் எழுதிய கோணல் அகராதி சாரு நிவேதிதாவுக்கு ஒரு பைபிள்.  சாருவிடம் ரொம்பப் பேர் – பெரிய சினிமா டைரக்டர்கள் “சாரு, நான் காலேஜ் மாணவனாக இருந்தபோது நீங்கள் எழுதிய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்’ நாவல்தான் எனக்கு பைபிள் மாதிரி, திரும்பத் திரும்ப நூறு முறையாவது படித்திருப்பேன்’ என்று சொல்வார்கள்.  ஆனால் தமிழ் இந்து பேட்டியில் என்னை உருவாக்கியது ஜெயமோகன், எஸ்.ரா. இருவரின் எழுத்துகள்” என்று பேட்டி கொடுப்பார்கள்.  இப்படி ஒருமுறை பேட்டி கொடுத்த டைரக்டருக்கு சாரு போன் பண்ணியே கேட்டு விட்டான்.  என்னிடம் இப்படி இப்படி நூறு தடவையாவது சொல்லியிருப்பீர்களே, இப்போது இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று.  உடனே அந்த டைரக்டர் “நீங்கள் என் பெயரை எங்கேயாவது சொல்லியிருக்கிறீர்களா?” என்று கேட்டார்.  உடனே சாரு போன் இணைப்பைத் துண்டித்து விட்டான்.  ஏனென்றால், அவன் அவரைப் பற்றி நாலைந்து கட்டுரைகளாவது எழுதியிருப்பான்.  அம்மாதிரி பம்மாத்துப் பண்ணுபவன் அல்ல சாரு.  இங்கே இன்றுவில் வெளிவந்த கோணல் அகராதி பற்றியும் கிருஷ்ணசாமி பற்றியும் அவன் எத்தனையோ கட்டுரைகளில் எழுதியிருக்கிறான்.  அவன் ரொம்பவும் வெளிப்படையானவன்.  இப்போது சாருவுக்கு மிகவும் பிடித்த கிருஷ்ணசாமி “உங்கள் தந்தை அம்பானி பற்றி ஒரு கட்டுரை தாருங்கள்” என்று சாருவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.


என்ன கட்டுரை தருவது?  சாருவின் எழுத்தை இலக்கியவாதிகள் அத்தனை பேரும் காறிக் காறித் துப்பிய போது அம்பானி சாஹித்ய அகாதமியின் தலைவராக இருந்ததையா?  கேரளத்தில் சுமார் 200 கல்விக் கூடங்களில் சாரு ஒரு பத்தாண்டு காலத்தில் மாதம் ஒரு முறை இரண்டு முறை என்று பயணம் செய்து போய் இலக்கிய உரை ஆற்றிக் கொண்டிருந்த போது அம்பானி பெங்களூரின் க்றைஸ்ட் காலேஜில் பேராசிரியராக இருந்தும் சாருவை அழைத்து ஒரு இலக்கிய உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யாத கதையையா?  சாருவின் மகன் வயதுப் பையனான அபிலாஷ் சந்திரன் என்பவர் க்றைஸ்ட் கல்லூரியில் – இப்போது அது பல்கலைக்கழகம் – ஆங்கிலத் துறைப் பேராசிரியராக இருந்தும் தன் சகாக்களிடம் சொல்லி சாருவை அழைத்து மாணவர்களிடையே உரையாற்ற வைத்த கதையையா?  அப்போது சாருவின் வயது 68.  இரண்டு முறை ஹார்ட் அட்டாக்கில் உயிர் பிழைத்திருந்தான்.  சாருவின் எழுத்து சரோஜாதேவி கதை மாதிரி இருக்கிறது என்று சொல்லி இலக்கியவாதிகள் அத்தனை பேரும் – அத்தனை பதிப்பகங்களும் வெளியிடுவதற்கு மறுத்தபோது – மறுத்த பதிப்பாளர்களின் பெயரைச் சொன்னால் அவன் மீது இப்போது அவதூறு வழக்கு போடுவார்கள் – இப்போது பிரபலமாக இருக்கும் அத்தனை பதிப்பகங்களும் மறுத்தன (அப்போது உயிர்மை இல்லை, பிறகு கடைசிக் கட்டத்தில் உயிர்மை பதிப்பித்தது)- அவனே அவன் புத்தகங்களை பொண்டாட்டி தாலியையும் வளையலையும் மோதிரத்தையும் அடகு வைத்து, விற்று பதிப்பித்து அவனே எல்லோருக்கும் ஓசியில் விநியோகித்து – ஒவ்வொருவரும் சீ குப்பை சீ மலம் என்றும் காறித் துப்பியபோது அம்பானி சாகித்ய அகாதமியின் உறுப்பினராகவோ தலைவராகவோ அல்லது அதிகாரத்தின் ஒரு தூணாகவோ இருந்தார்.  எல்லாமே போகட்டும்.  அவன் எழுத்து பற்றி ஒரு வார்த்தை எழுதியதில்லை. 
ஆனால் சமகால இலக்கியத்தில் சாருவுக்கு நேர் எதிர்த் துருவத்தில் நின்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜெயமோகன் என்பவரே சாரு நிவேதிதாவின் எழுத்து அத்தனையையும் பற்றி மிகக் காத்திரமாக “பிறழ்வெழுத்து” என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார்.  இன்னொருவர், சாருவுக்கு மகன் வயது கொண்ட அபிலாஷ் சந்திரன் எழுதிய அற்புதமான கட்டுரை.  இந்த இரண்டு கட்டுரைகளைத் தவிர கிடைக்கும் மற்றதெல்லாம் சாருவின் எழுத்தை மலம் என்று மதிப்பீடு செய்பவைதான்.  இந்த மல விமர்சனம் செய்தவர்களில் சுஜாதாவும் அடக்கம்.  கடந்த நூறு ஆண்டுகளில் எழுதப்பட்ட தமிழ் நாவல்களில் உச்சம் விஷ்ணுபுரம் என்று எழுதியது அசோகமித்திரன்.  எங்கே எழுதினார்?  ஹிண்டு ஆங்கில தினசரியில்.  எனக்கு அசோகமித்திரனும் ஒரு ஆசான்.  அவர் சாரு எழுதுவது இலக்கியத்தில் சேர்த்தி இல்லை என்று எழுதினார்.
ஆனால் எனக்கு ரொலான் பார்த்தைச் சொல்லிக் கொடுத்த, ஃபூக்கோவைக் கற்பித்த என் தந்தை தமிழவன் என்னைக் காப்பாற்றத் தன் சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை.  இன்று வரை.  யார் என்னைக் கொண்டாடி இருக்க வேண்டுமோ, யார் என்னை அரவணைத்திருக்க வேண்டுமோ அவர்கள் தங்களது மௌனத்தின் மூலம் (கள்ள மௌனம் என்று எழுத என் இளகிய மனம் இடம் கொடுக்கவில்லை) என்னை உதாசீனப்படுத்தினார்கள்.  கார்லோஸ் எனப்படும் தமிழவன் தான் அதில் முதல்.  சுஜாதாவாவது மலம் என்றார்.  தமிழவன் வாயே திறக்கவில்லை.  இன்று வரை.  நாகார்ச்சுனனாவது எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனுக்கு ஒரு முன்னுரை கொடுத்தார்.  கர்னாடக முரசுவும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற என் சிறுகதைத் தொகுதியைத் தானே தட்டச்சு செய்து (தட்டச்சு செய்வதற்குக் கூட எனக்கு யாரும் முன் வரவில்லை) தானே காசு செலவு செய்து வெளியிட்டார்.  அந்தத் தொகுப்பில் அவர் கதையும் ஒன்று உண்டு.  ஸில்வியாவின் கதைகள் நான்கு உண்டு.  ஆனால் என் தந்தை தமிழவன் அப்போதும் வாயே திறக்கவில்லை.  இன்று வரை திறக்கவில்லை.  ஜமாலன் எழுதினார்.  ஃபேன்ஸி பனியன் நாவல் பற்றி ஒரு காத்திரமான கட்டுரையை எழுதினார்.  என் அன்புக்குரிய சகாவான எஸ். சண்முகமும் இதுவரை சாரு பற்றி ஒரு வார்த்தை எழுதியதில்லை.  ஏனென்றால், இவர்கள்தான் சாரு குறிப்பிடும் தத்துவவாதிகளைப் பயின்றவர்கள்.  
ஜெயமோகனின் ஆசான்கள் அவரை போஷித்தார்கள்.  அவரை இந்தியா முழுவதும் அறியச் செய்தார்கள்.  சாருவின் ஆசான்கள், சாருவின் நண்பர்கள் அனைவரும் அவனை ஒதுக்கித் தள்ளினீர்கள்.  கிருஷ்ணசாமி உட்பட.  சாருவையும் கவனித்தவன் ஜெயமோகன் தான்.  


மற்றபடி படிகள்தான் என் ரத்தம்.  அதிலிருந்துதான் நான் உருவானேன்.  இங்கே இன்று பத்திரிகையை பாண்டிச்சேரியில் நானும் ரவிக்குமாரும் (விடுதலைச் சிறுத்தைகள்) தெருத் தெருவாகப் போய் கடைகளில் போட்டு விற்க முயற்சித்தோம்.  ஒரு ஆண்டுக் காலம்.  


மிகுந்த வருத்தத்துடன்

சாரு நிவேதிதா