நலமா?

அன்புள்ள சாருவுக்கு, தாங்கள் நலமா? ஜலதோஷம் குணமாகிவிட்டதா?

நேற்றிரவு தங்களின் ஒரு குறுநாவலுக்கு எழுதிய முன்னுரை கட்டுரையை வாசித்தேன். தாங்கள் குறிப்பிட்டது போல “நாற்பது ஆண்டு வாசிப்பின் சாரம்” என்பதின் கனத்தை என்னால் உணர முடிந்தது. தங்களுக்கு இக்கட்டுரையை எழுதி முடிக்க ஆறு மணி நேரம் ஆனதாக குறிப்பிட்டிருந்தீர்கள். வாசித்து புரிதலை அடைய எனக்கு மூன்று மணி நேரம் எடுத்தது, அவ்வளவு அடர்த்தியான கட்டுரை இது.

சிம்யூலேஷன் ஹைப்பர்-ரியாலிட்டியாக தோன்றுவதும், அதன் விளைவுகள் இலக்கியத்தில் ஒரு விதமான பாதிப்பையும், தமிழ்த் திரைப்படங்களில் ஒரு விதமான பாதிப்பையும் உண்டாக்குவதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. பிரதியில் வரும் பாத்திரங்களை எதார்த்ததோடு அடையாளப்படுத்துவது தவறானது என்று ஒரு உணர்வு எனக்கு முன்பிருந்து உண்டு, ஆனால் அதற்கான காரணத்தை நேற்றைய கட்டுரையின் பின்னரே அறிந்துகொள்ள முடிந்தது. சிதறுண்ட தன்னிலை பற்றிய புரிதலும் இப்படித்தான்; பின்நவீனத்துவத்தில் இது ஒரு கூற்று என்ற அறிவு மட்டுமே இருந்தது, இப்போது அதில் ஒரு தெளிவை உணர்கிறேன். மேலும் ஒரு வாசகனாக நான் கற்றுக்கொள்ள இதில் ஏராளமான குறிப்புகள் உள்ளன. மீண்டும் வாசிக்கையில் புதுப்புது விஷயங்களையும், அர்த்தங்களையும் அறிந்து கொள்ள முடியும் என்ற ஒரு உணர்வு உண்டாகிறது. எனவே புக்மார்க் செய்துகொண்டேன். பின்நவீனத்துவம் பற்றிய ஒரு முக்கியமான குறிப்பு இது.

முன்னுரை ஏற்படுத்திய தாக்கம் குறுநாவலின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது, ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

மிக்க நன்றி!

என்றும் அன்புடன்,

சந்திரன்

அன்புள்ள சந்திரன்,

ஜலதோஷம் சரியாக இன்னும் இரண்டு வாரம் எடுக்கும். எனக்கு நாலைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜலதோஷம் வரும். அதுவும் என் கவனமின்மையினால். வந்தால் சரியாக ஒரு மாதம் எடுக்கும். குறிப்பாக, தண்ணீர் மூலமாக வரும். சுத்தமில்லாத தண்ணீர் எனக்கு விஷம். அதனாலேயே நான் வெளியிடங்களில் கோக் குடித்து விடுவது. எத்தனை சில்லென்று இருந்தாலும் ஒன்றும் பண்ணாது. ஆனால் சுத்தமில்லாத தண்ணீர், ஐஸ் கட்டி ஆகியவற்றால் உடனே வரும் ஜலதோஷம். அதனால் நான் வெளியிடங்களில் ஐஸ் கட்டியே பயன்படுத்துவதில்லை. இது இந்தியாவில் மட்டும்தான். வேறு எந்த நாட்டிலும் ஐஸ் கட்டியினால் பிரச்சினை இல்லை. ஏனென்றால், இந்தியாவில் சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. உதாரணமாக, நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு வந்த புதிதில் தண்ணீர்த் தொட்டியை முதலில் சோதித்தோம். ஐந்து ஆண்டுகளாக சுத்தம் செய்யாத தொட்டி. இத்தனைக்கும் இந்தக் குடியிருப்பில் வாடகை மாதம் எழுபதாயிரம் ரூபாய்க்கும் மேலே. இதற்கே இந்த நிலை. உடனே நாங்களே ஏற்பாடு செய்து தொட்டியை சுத்தம் செய்தோம்.

இப்படித்தான் குளிர்சாதனப்பெட்டியும். எங்கள் வீட்டு ஃப்ரிஜ்ஜிலிருந்து எதை எடுத்துக் குடித்தாலும் ஒன்றும் செய்யாது. ஆனால் வெளியிடங்களில் போய் எடுத்துக் குடித்தால் முடிந்தது கதை. காரணம், ஃப்ரிஜ்ஜை பல மாதங்களாக, பல ஆண்டுகளாக சுத்தம் செய்திருக்க மாட்டார்கள். பல வீடுகளில் ஃப்ரிஜ்ஜை சுத்தம் செய்ய வேண்டும் என்பதே தெரிந்திருக்காது. அம்மாதிரி ஃப்ரிஜ்ஜிலிருந்து எதை எடுத்துக் குடித்தாலும் ஜலதோஷம் நிச்சயம். இவ்விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கும் நான் சத்தியமங்கலத்தில் கவனமின்றி இருந்து விட்டேன்.

இந்த நிலையில் நாளை காலை பெங்களூருக்குப் பறக்க வேண்டும். சாமியார் கேஸுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். தவறினால் வீட்டுக்குக் கர்னாடகா போலீஸ் வந்து விடும்.

குறுநாவல் சற்றே பெரிதாக நீண்டு கொண்டிருக்கிறது. நூறு பக்கங்கள் வரும் போல் தெரிகிறது. அதனால் பெட்டியோவை வெளியிட்டது போல் என் எஃப் டியாக அல்லாமல் எளிமையாக அந்த்தோனின் ஆர்த்தோ நாடகத்தை வெளியிட்டது போல பிடிஎஃப்பாகக் கொடுக்கலாம் என நினைக்கிறேன். பிறகுதான் புத்தகமாக வெளிவரும். விலை என்று எதுவும் நிர்ணயம் இல்லை. நன்கொடைதான். பெட்டியோவை இரண்டு நண்பர்கள் தலா ஒரு லட்சத்து இருபதாயிரம் கொடுத்து வாங்கினார்கள். சிலர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு. பலர் பத்தாயிரம் ரூபாய்க்கு. சுமார் பத்து லட்சம் கிடைத்தது. ஜப்பான் பயணத்துக்கும் மொழிபெயர்ப்புச் செலவுக்கும் அந்தப் பணம் உதவியது. இப்போது என் எஃப் டியில் இல்லை. அதற்கு ஏகப்பட்ட காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. ஆள் இல்லை. பிடிஎஃப் என்றால் நண்பர் ராஜா வெங்கடேஷே அனுப்பி விடுவார்.

நாவலை முடித்தவுடன் தெரிவிக்கிறேன். ஏற்கனவே நன்கொடை அல்லது சந்தா அனுப்பியவர்கள் நாவலுக்காகத் தனியாக அனுப்ப வேண்டாம். ஒன்றிரண்டு பேர்தான் என்பதால் எனக்கே அவர்கள் பெயர் தெரியும். நாவலை அனுப்பி வைப்பேன். மற்றவர்கள் நாவலுக்கான நன்கொடையை அனுப்பலாம். நாவல் புத்தக வடிவில் வருவதற்கு ஓரிரு மாதங்கள் எடுக்கும். நன்கொடை அனுப்பியவர்களுக்கு அச்சு வடிவத்திலான நூல் அனுப்பி வைக்கப்படும். எனவே நன்கொடை அனுப்பும்போது முகவரியையும் அனுப்பி வைத்தால் நலம்.

சாரு

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai