ஒரு வேண்டுகோளும் ஒரு பிரார்த்தனையும்…

மாயமான் வேட்டை என்ற என் சிறுகதைத் தொகுதி ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் வெளியாகியிருக்கிறது. எப்போதும் போல் பேராதரவு கொடுத்து வாங்குவீர்கள் என நம்புகிறேன். என் ஆசை எப்படியும் அறுபது பிரதிகளாவது விற்று விட வேண்டும் என்பதுதான். அப்படி அறுபது பிரதிகள் விற்று விட்டால் திருப்பதி வேங்கடவனுக்கு முடி காணிக்கை செலுத்தலாம் என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன். புத்தக விழாவில் நான் என் புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் கவனித்தேன். நூறு பேர் புத்தகம் வாங்கினார்கள் என்றால் அதில் தொண்ணூற்று ஒன்பது பேர் வலிக்காமல் கொலை செய்வது எப்படி என்றோ அந்த மாதிரி ஒரு தலைப்பிலோ வந்த புத்தகத்தையே வாங்கிச் சென்று கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றிருக்கும் என்று தோன்றுகிறது. தப்பே இல்லை. இலக்கிய நூல்கள் ஒரு அறுபது பிரதிகளாவது விற்றால் எழுத்தாளர்களாகிய நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் இல்லையா? இப்போதெல்லாம் எனக்குக் கூட தோன்றுகிறது, ’யாருக்கும் தெரியாமல் கொலை செய்வது எப்படி?’, ‘தற்கொலை செய்து கொள்வதற்கு எளிய வழிகள்’, ‘அடுத்தவன் சொத்தை அடித்துப் பிடுங்குவது எப்படி?’, ‘பட்டிமன்றங்களில் பேசுவது எப்படி?’ ‘காதலித்துக் கை விடுவது எப்படி?’ போன்ற “எப்படி?” தலைப்புகளில் புத்தகங்கள் எழுதலாமா என்று. அடுத்த புத்தக விழாவுக்குள் இதற்கான ஏற்பாடுகளில் இறங்க வேண்டும். அதற்குள் மாயமான் வேட்டை சிறுகதைத் தொகுப்பை எப்போதும் போல் பேராதரவு நல்கி அறுபது பிரதி வாங்கி விடுங்கள்.

ஒன்றைச் சொல்லி விடுகிறேன். மற்ற எழுத்தாளர்களின் கதைகள் நன்றாக இருக்கலாம். நன்றாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் என் கதைகளை நான் என்னையும், என்னைச் சுற்றியுள்ளவர்களையும் பலி கொடுத்தே எழுதுகிறேன். அதனால் எனக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

புத்தகத்தை வாங்குவதற்கான விவரம்:

https://tinyurl.com/Mayyaman-Vettai