இப்போது ஒரு குறுநாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். இரண்டொரு நாட்களில் முடித்து நமது தளத்தில் பதிவேற்றுவேன். அதகளமாக இருக்கும். அன்பு நாவலின் தொடர்ச்சி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் கதை நீங்கள் சற்றும் எதிர்பாராததாக இருக்கும். அந்தக் குறுநாவலுக்கு ஒரு முன்னுரை எழுதினேன். 1100 வார்த்தைகள்தான். ஆனால் இதை எழுத எனக்கு ஒரு ஆறு மணி நேரம் எடுத்தது. நாற்பது ஆண்டு வாசிப்பின் சாரம் இது. குறுநாவலின் பெயரைச் சொன்னால் அதைப் பதிவேற்றம் செய்வதற்குத் தடங்கல் வரும். யாரும் இரண்டு முறை கேட்டால் மனம் இரங்கி விடுவேன். அதனால் அதன் தலைப்பையும் குறுநாவல் வரும்போதே படித்துக் கொள்ளுங்கள். யாரையும் எதற்காகவும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. அது பற்றியதே இந்த முன்னுரை.
இப்போதெல்லாம் ஓரிரு நெருங்கிய நண்பர்களைத் தவிர யாரும் சந்தா அல்லது நன்கொடை அனுப்புவதில்லை. நானும் அது பற்றி இங்கே எழுதுவதில்லை. இப்போது ஞாபகப்படுத்துகிறேன். இனி முன்னுரை:
கதையில் நுழைவதற்கு முன் சில பின்நவீனத்துவக் கோட்பாடுகளின் அறிமுகம்:
ஒரு பிரதி எழுதப்பட்டவுடனேயே அதை எழுதிய ஆசிரியருக்கோ அல்லது உண்மையான வாழ்க்கைக்கோ சொந்தமானதல்ல என்று ஆகி விடுகிறது.
அர்த்தம் என்பது மொழியின் அமைப்பு (structure), மற்றும் வாசகரின் அர்த்த உருவாக்கம் மற்றும் புரிந்து கொள்ளல் மூலமாக உருவாகிறது. பிரதியை எதார்த்த வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்பதன் மூலமாக அல்ல.
எனவே, ஒரு கற்பனையான கதாபாத்திரத்தை நிஜமான மனிதருடன் அடையாளப்படுத்துவது readerly projection தானே தவிர பிரதியின் உண்மை அல்ல. அப்படிப்பட்ட வாசக அத்துமீறலுக்கு பிரதியோ பிரதியை உருவாக்கிய எழுத்தாளரோ பொறுப்பாக முடியாது.
நாவல் வாழ்க்கையின் கண்ணாடி அல்ல; அது ஒரு மொழியியல் நிகழ்வு (linguistic event) மட்டுமே.
வாசகர்கள் கதாபாத்திரங்களை நிஜ மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினால், அவர்கள் ரொலாந் பார்த் சொல்வது போல படு சராசரி வாசகர்களே ஆவர்.
2. Simulation and Hyperreality (Jean Baudrillard)
பின்நவீனத்துவப் பிரதிகள் எதார்த்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை; பிரதிபலிப்பதும் இல்லை. அவை எதார்த்தத்தை simulate செய்கின்றன.
Simulation என்றால் என்ன?
Simulation என்பது எதார்த்தத்தை ‘இமிடேட்’ செய்வது மட்டுமல்ல—அது எதார்த்தத்தை முழுமையாக மாற்றி, அதற்குப் பதிலாக models அல்லது sign-களால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய எதார்த்தத்தை உருவாக்குகிறது.
அதுவே hyperreality: Simulation அல்லது simulacra (copies without an original) எதார்த்தத்தை விட அதிக எதார்த்தமாகத் (more real than real) தோன்றுகிறது. வாசகரின் பிரக்ஞைக்கு எதார்த்தத்தையும் simulation-ஐயும் வேறுபடுத்த முடியாமல் போய்விடுகிறது.
எதார்த்தம் பிரதியாக உருமாறும்போது வேறு சில மேஜிக்குகள் நடக்கின்றன. எதார்த்தத்துக்கு முகமூடி அணிவிக்கப்படுகிறது. எதார்த்தம் குலைக்கப்படுகிறது.
எதார்த்தத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அது ஒரு ஹைப்பர் ரியாலிட்டியாக மாறி விடுகிறது.
உதாரணங்கள்:
டிஸ்னிலேண்ட் என்பது கற்பனை எனத் தோன்றினாலும், அமெரிக்காவின் ஹைப்பர்ரியல் ஆகிறது—ஏனெனில் அது ஸிமுலேஷனாக இருந்தாலும், மக்கள் நம்பக்கூடிய எதார்த்தமாகத் தோன்றுகிறது.
வளைகுடா யுத்தம் நடந்த போது ஜான் போத்ரியாரின் (Jean Baudrillard) பிரபலமான கூற்று): “The Gulf War did not take place” — போர் நடந்தது உண்மைதான், ஆனால் அது ஊடகங்களின் images, TV screens, simulations மூலம் நமக்கு அளிக்கப்பட்டது—அதனால் அது ஒரு ஹைப்பர்ரியல் சம்பவம் ஆனது, நேரடி எதார்த்தமாக அல்ல.
சமூக ஊடகங்கள், விளம்பரங்கள், வர்ச்சுவல் ரியாலிட்டி, பிரபலங்கள் போன்றவை எல்லாம் நகல்களின் நகல்கள் ஆகின்றன. ஒரிஜினல் ரியாலிட்டியிலிருந்து துண்டிக்கப்பட்டு, தங்களுக்குள் refer செய்து கொள்கின்றன. ரியாலிட்டியைத் தேடினால் “desert of the real” (Matrix திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது) தான் கிடைக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், போத்ரியாரின் ஸிமுலேஷன் என்பது குறியீடுகள் (signs), மாதிரிகள் (models), ஊடகம், டெக்னாலஜி மூலம் எதார்த்தத்தை replace செய்கிறது—அதனால் உருவாகும் ஹைப்பர் ரியாலிட்டியில் simulationதான் பிரதானம் ஆகிறது, ஒரிஜினல் ரியாலிட்டி இல்லாமல் போய்விடுகிறது. நாம் இப்போது simulation-இல் வாழ்கிறோம், அதுவே நமது எதார்த்தம் ஆகிவிட்டது.
ஆகவே, புனைவு என்பது ஹைப்பர் ரியாலிட்டி உலகில் இயங்குகிறது—அங்கு தென்படும் குறியீடுகள் (Signs) வேறு குறியீடுகளையே குறிக்கின்றன, எதார்த்த உலகின் ஒரிஜினல்களை அல்ல.
அதாவது, அன்பு நாவலில் வைதேகி என்ற பாத்திரத்தை நீங்கள் என் மனைவி அவந்திகா என்று நினைத்துக்கொண்டாலும், அது origin இல்லாத simulation தான்.
ஒரே மாதிரி தெரிவது (Resemblance) என்பது விளைவு மட்டுமே, ஆதாரம் அல்ல.
கதாபாத்திரம் வாழ்க்கையிலிருந்து பிரதி செய்யப்படவில்லை; வாழ்க்கைதான் கதாபாத்திரத்தைப் போல் தோன்றுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எதார்த்த வாழ்விலிருந்து மாதிரிகளைத் தேடும் வாசகர்கள் பின்நவீனத்துவப் புனைவின் ontological status-ஐ தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.
3. ஜூலியா க்றிஸ்தவா கூறும் இண்டர் டெக்ஸ்சுவாலிட்டி
எந்தக் கதாபாத்திரமும் ஒரே source-லிருந்து வருவதில்லை. கதாபாத்திரங்கள் என்பவை நமக்கு முந்தைய பிரதிகள், கட்டுக்கதைகள், கலாச்சாரக் குறியீடுகள் (cultural codes), சொல்லாடல்கள் (discourses) ஆகியவற்றின் தொகுப்புதான்.
‘எதார்த்தம்’ என்று தோன்றுவது ஞாபகங்களின் மோதல்தானே தவிர வாழ்ந்து பெற்ற அனுபவம் அல்ல.
வாசகரின் சொந்த கலாச்சார அறிவும், கலாச்சார ஞாபகங்களும்தான் எதார்த்தத்தின் illusion-ஐ முழுமைப்படுத்துகிறது.
எனவே, ஒரு கதாபாத்திரத்தை நிஜமான மனிதருடன் அடையாளப்படுத்துவது அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கிய பன்முகப்பட்ட பிரதிகளின் மரபை (plural textual genealogy) அழித்துவிடுகிறது.
4. சிதறுண்ட தன்னிலை (Fragmented subjectivity)
பின்நவீனத்துவம் எதையும் நிலைபெற்றதாகக் கருதுவதில்லை. அதேபோல் ஒருமுகப்பட்ட தன்னிலை என்ற கருத்தையும் நிராகரிக்கிறது.
கதாபாத்திரங்கள் சிதறுண்டு கிடக்கின்றன. முரண்படுகின்றன. ஒரே மாதிரி இருப்பதில்லை.
எதார்த்த வாழ்விலும் கூட singular அல்லது fixedஆக எந்த மனிதரும் இருப்பதில்லை. எனவே சிதறல் இல்லாத, ஒருமுகப்படுத்தப்பட்ட கதாபாத்திரமோ, மனிதரோ சாத்தியமில்லை.
ஒரு பாத்திரம் பல தன்னிலைகளின் சிதறல்களைக் கொண்டிருக்கலாம் – கற்பனையான சிதறல்கள் உட்பட.
ஒரு கதாபாத்திரத்தை – உதாரணமாக, அன்பு நாவலில் வரும் வைதேகியை நிஜமான பெண் தான் என்று சொல்வது அரதப் பழசான மாடர்னிஸ்ட் மற்றும் essentialist self-ஐ முன்னிலைப்படுத்துவதாகும். பின்நவீனத்துவம் அந்தப் பார்வையை உடைத்து நொறுக்குகிறது.
5. பின்நவீனத்துவத்தில் வாசகரின் கடமை
பின்நவீனத்துவப் பிரதி தன் வாசகரிடம் அறம் சார்ந்த கடமையைக் (Ethical responsibility) கோருகிறது.
புத்தக விழா நடந்த பதினான்கு நாட்களிலும் இரண்டு தினங்களைத் தவிர அவந்திகா என்னோடு வந்தாள். அப்போது அன்பு நாவலைப் படித்த சில வாசகர்கள் அவந்திகாவை வைதேகியோடு அடையாளப்படுத்தியதை கவனித்தேன். ஒரு வாசகி அவந்திகாவிடமே வந்து அன்பு நாவல் பற்றி விவாதித்தார். அவந்திகாதான் ஆரம்பித்தாள் என்றாலும் வாசகி “தன் அம்மாவும் இப்படித்தான் அன்பு என்ற பெயரில் டார்ச்சர் செய்கிறார்கள்” என்று சொல்லி ஒரு அடையாளப்படுத்தலை வெளிப்படுத்தியிருக்கிறார். அவந்திகா ஆரம்பித்தாலும் “பிரதி என்பது வாழ்க்கையின் கண்ணாடி அல்ல” என்று சாரு அடிக்கடி சொல்வார் என்று அந்த வாசகி சொல்லியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் ஒரு கதாபாத்திரத்தை நிஜ மனிதரோடு அடையாளப்படுத்துவது வாசகரின் கீழான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. அதாவது, அது ஒரு voyeuristic impulse. லைவ் ஷோ பார்க்கும் விருப்பம் அல்லது அடுத்த வீட்டுப் படுக்கையறையை எட்டிப் பார்க்கும் ஆர்வம்.
அப்படிப்பட்ட வாசிப்பு இலக்கியத்தின் அழகியலுடனும் இலக்கியத்தின் தத்துவ அடிப்படைகளுடனும் கொள்ள வேண்டிய engagementக்குப் பதிலாக இலக்கியத்தைக் கிசுகிசு தரத்துக்குத் தாழ்த்துகிறது.
ஊடகங்களும் சினிமாவும் அரசியலும் மற்றபடி வாழ்வின் சகல தரப்பும் மனிதர்களிடம் ”எட்டிப் பார்க்கும்” ஆர்வத்தைத் தூண்டி விட்டிருப்பதால்தான் இலக்கிய வாசகர்களும் கூட இலக்கியப் பிரதிகளை கிசுகிசுக்களாகவும், நிஜ வாழ்வின் பிரதிபலிப்பாகவும் காணும் அவலம் நேர்ந்திருக்கிறது.
6. வாழ்க்கையும் இலக்கியப் பிரதியும்
வாழ்க்கை குழப்பமாகவும், சிதறுண்டபடியும், ஒரு அமைப்புக்குள் சிக்காததாகவும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் பிரதி என்பது எழுத்தாளரால் கட்டமைக்கப்படுகிறது. செப்பனிடப்படுகிறது. ஒரு அமைப்புக்குள் கொண்டு வரப் படுகிறது. ஒவ்வொரு வார்த்தை குறித்தும் எழுத்தாளருக்கு ஒரு நோக்கம் இருக்கிறது.
அனுபவத்திலிருந்து எடுத்தாலும், புனைவெழுத்து என்பது வாழ்க்கையை ஒரு வடிவத்துக்குள் கொண்டு வருகிறது.
அனுபவம் மொழியினால் அழிக்கப்பட்டு, மீண்டும் கட்டமைக்கப்பட்டு அதன் பின்பே பிரதியாக மாறுகிறது.
என்னுடைய ஒரு கதாபாத்திரம் ஒரு நிஜமான மனிதரைப் போல் தெரிந்தால் அதற்கு என் பதில்:
Resemblance does not prove reference; it only proves the power of fiction.”
இப்போது உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். இலக்கியப் பிரதி என்பது ஒரு ஹைப்பர் ரியாலிட்டி. அதாவது, ஸிமுலேஷன். குறியீடுகள், படிமங்கள், மாதிரிகள். Signs, images, models. இவை எதார்த்தத்தை முழுமையாக மாற்றி விடுகின்றன. அதாவது, ஒரிஜினல் ரியாலிட்டி இல்லாமல் வெறும் நகல்கள் மட்டுமே உலவும் உலகு. ஆக, ஒரு நாவல் அல்லது ஒரு பின்நவீனத்துவப் புனைவு ஒரு ஸிமுலாக்ரம்தான். குறியீடுகளால் ஆனது. முந்தைய பிரதிகள், கட்டுக்கதைகள், கலாச்சாரக் குறியீடுகளால் ஆனதே தவிர நேரடியான எதார்த்த வாழ்வு அல்ல. இதனால் ஹைப்பர் ரியாலிட்டி உருவாகிறது. புனைவின் உலகு நேரடி வாழ்வை விட சீரானதாக, அழுத்தமானதாக, வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
ஆக, ஹைப்பர் ரியாலிட்டியாக உருவாக்கப்படும் பின்நவீனத்துவ எழுத்தைப் பாராட்டும் நாம் வெகுஜன ஊடகத்தில் – உதாரணமாக, சினிமாவில் – ஹைப்பர் ரியாலிட்டியாக உருவாக்கப்பட்ட ஒரு ஹீரோவின் திரைப்படுதா பிம்பத்தையும், அவர் அரசியலில் நுழைவதையும் ஏன் எதிர்க்கிறோம்?
1. இலக்கியத்திலும் வெகுஜன ஊடகத்திலும் தோன்றும் ஹைப்பர் ரியாலிட்டியின் வேறுபாடு
நாவல் என்பதை வாசகர்கள் ஒரு கலையாகக் கருதி அதனுடன் உறவு கொள்கிறார்கள். அது ஒரு எழுத்தாளரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிந்தே இந்த ’எங்கேஜ்மெண்ட்’ நடக்கிறது. இப்படி நடப்பதாலேயே ஸிமுலேஷனின் தன்மை வெளிப்படுத்தப்பட்டு விடுகிறது.
ஆனால் தமிழ் சினிமாவில் ஹைப்பர் ரியல் ஹீரோ ஊழலை ஒழிக்கப் புறப்படும்போது அதன் பிரம்மாண்டத்தின் மூலமும், திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுவதன் மூலமும் ஹைப்பர் ரியலிட்டி என்பது ஹைப்பர் ரியாலிட்டி என்ற தன்மையை இழந்து ரியாலிட்டியாக பார்வையாளர் மனதில் நம்ப வைக்கப்படுகிறது. ஒரு சிறு எறும்பு டைனோசர் அளவுக்கு விஸ்வரூபம் தரப்படுவதாக இது பார்வையாளரிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. ஹீரோ ஐநூறு பேரை அடித்து நொறுக்கும் காட்சி ஒரு உதாரணம். ஹைப்பர் ரியாலிட்டி எதார்த்தத்தை வெற்றி கொண்டு விடுகிறது. இதைத்தான் ஜான் போத்ரியார் Desert of the real என்கிறார். இங்கே நடப்பது ஒரு ஏமாற்று வித்தை.
இதுதான் இலக்கியத்தின் ஹைப்பர் ரியாலிட்டிக்கும் வெகுஜன ஊடகங்களின் ஹைப்பர் ரியாலிட்டிக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம்.
2. இலக்கியத்தில் ஹைப்பர் ரியாலிட்டியை ஏன் சிலாகிக்க வேண்டும்?
பின்நவீனத்துவப் பிரதிகள் ரியாலிட்டியை எப்படிக் கட்டமைக்கின்றன, எப்படி வெளிப்படுத்துகின்றன, ஹைப்பர் ரியாலிட்டியைப் பயன்படுத்தி எப்படி ரியாலிட்டியைக் குலைத்துப் போடுகின்றன என்பதால்தான் இலக்கியத்தில் ஹைப்பர் ரியாலிட்டியை நாம் சிலாகிக்க வேண்டும். உதாரணமாக, ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸின் “Tlön, Uqbar, Orbis Tertius” அல்லது “The Circular Ruins” போன்ற பின்நவீனத்துவக் கதைகள் ஹைப்பர் ரியாலிட்டியைப் பயன்படுத்தி ரியாலிட்டியைத் தோலுரிக்கின்றன. நமது தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தனின் கதைகள் ஹைப்பர் ரியாலிட்டி மூலம் அதிகார அமைப்பைக் கட்டுடைப்பு செய்கின்றன.
வெகுஜன சினிமா போல் அல்லாமல் இலக்கியத்தில் ஹைப்பர் ரியாலிட்டி விமர்சனப் பார்வையை ஊக்குவிக்கிறது. சினிமாவில் பார்வையாளருக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால் பின்நவீனத்துவப் பிரதிகள் வாசகரையும் பிரதியோடு இணைந்து கொள்ளுமாறு கோருகிறது.
முக்கியமாக, இலக்கியப் பிரதியின் தத்துவப் பின்புலனோடு வாசகர் இணைந்து கொள்வதன் மூலம் சமூகரீதியான துயரத்தையும் தனிமையையும் எதிர்க்கும் கருவியாக பின்நவீனத்துவப் பிரதி மாறுகிறது.
3. சமூகத் துயரத்தை எதிர்கொள்ளுதல்
ஹைப்பர் ரியாலிட்டியை ரியாலிட்டியாகப் பார்ப்பது பெரும் சமூகச் சீரழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இதில் சிக்கும் ஒரு மனிதன் சமூகத்திலிருந்து அந்நியமாகி, மாயையைத் துரத்திக்கொண்டு ஓடுகிறான். இதில் நிஜமான அனுபவமும் காணாமல் போகிறது. ஒரு சினிமா ஹீரோ ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் ரசிகர்கள் விசில் அடித்துப் பரவசம் அடைவதை உதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால் இலக்கியத்தில் ஒரு அனுபவத்தை சிலாகிப்பது என்பது அதற்கு ஆதரவு அளிப்பதாக அல்லாமல், கைதட்டி ஆரவாரிப்பதாக அல்லாமல், அதை லென்ஸாகப் பயன்படுத்தி ஸிமுலேஷனைக் கட்டுடைப்பு செய்து, அதோடு உறவு கொள்வதன் மூலம் இங்கே இலக்கிய ரசனை என்பது நம்முடைய ஆளுமையை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள உதவுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், இலக்கியத்தில் ஹைப்பர் ரியாலிட்டியை சிலாகிப்பதன் மூலம் சமூகத் துயரத்திலிருந்து விடுபடுகிறோம். ஸிமுலேஷன்களால் நிரம்பிய உலகில் நாம் பயணிப்பதற்கு நமக்குப் பயிற்சி அளிக்கிறது. எல்லா எதார்த்தங்களும் புனைவுகளே என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai