புத்தக விழா குறிப்புகள் – 11


புத்தக விழா இன்று இறுதி நாள்.  இந்தப் புத்தக விழா எனக்கு மிகவும் இனிமையாகக் கழிந்தது. பல நூறு புத்தகங்களில் கையெழுத்திட்டேன்.  இன்னமும் ஸீரோ டிகிரி நாவலை ஏதோ நேற்றுதான் வெளிவந்தது போல் வாங்கிக்கொண்டிருந்தார்கள்.   ஆனால் என் மிக முக்கியமான படைப்பான அந்த்தோனின் ஆர்த்தோ நாடகத்தை ஒருவரும் வாங்கி நான் பார்க்கவில்லை.  இலக்கியத்துக்குப் புறம்பான ஏதோ ஒரு புத்தகத்தை கிட்டத்தட்ட எல்லோருமே வாங்கிக் கொண்டு போனதை பார்த்தேன்.  இதுவரை வாழ்க்கையில் அப்படி ஒரு காட்சியைக் கண்டதில்லை.  ஒரு இருபதாயிரம் பிரதி விற்றிருக்கும் என்று தோன்றியது.  வலிக்காமல் கொலை செய்வது எப்படி என்பது போல் ஒரு தலைப்பு.  ஆனால் இப்படி ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று ஆயிரக்கணக்கான பேருக்கு எப்படித் தெரியும் என்பதுதான் எனக்குப் பெரும் புதிராகவே இருக்கிறது.  இன்று இது பற்றி யாரையாவது விவரம் அறிந்தவர்களைக் கேட்க வேண்டும். 

ஒரு சிறுமியைப் பார்த்தேன்.  ஏழெட்டு வயது இருக்கும்.  தமிழ் சினிமாவில் வரும் குழந்தைகளெல்லாம் நூறு வயதுக் கிழவிகளைப் போல் பேசும் அல்லவா, அந்த மாதிரி ஏதோ தத்துப்பித்தென்று உளறிக்கொண்டிருந்தது.  சுற்றி இருந்த முண்டங்கள் ஏதோ காணாது கண்டது போல் அந்த அதிகப்பிரசங்கி சிறுமியை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார்கள்.  அடக்கமோ, பணிவோ எதுவுமே இல்லாமல் வளர்க்கப்பட்ட ஒரு வருங்கால ஃபெமினிஸ்ட்.

இந்தியாவில் குழந்தைகளும் சரியில்லை.  வயதானவர்களோ அதை விட மோசம்.  என் பரிச்சயக்காரர் ஒருத்தர் அந்தச் சிறுமியின் கன்னத்தைத் தொட்டுக் கிள்ளினார்.  பிறகு சிறுமியின் கன்னத்தைத் தடவித் தடவிக் கொஞ்சினார்.  நண்பர் ஒரு வெகுளி.  கல்மிஷமே இல்லாதவர்.  ஆனால் இப்படிப்பட்ட செய்கை இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் குற்றச்செயலாகக் கருதப்படும் என்பது பல வெளிநாடுகளில் சுற்றிய அனுபவம் கொண்ட அந்த நண்பருக்குத் தெரியவில்லை.  எனக்கு அவரது செயல் அருவருப்பை ஊட்டியது. 

இரண்டு சம்பவங்கள் என் ஞாபகத்தில் வந்தன.  ஒன்று:  இப்படித்தான் ஒரு நெருங்கிய நண்பரோடு நடந்து கொண்டிருந்தேன்.  எதிரே ஒரு தம்பதி.  அவர்களின் மூன்று வயதுக் குழந்தை ஒன்று.  அழகான சிறுமி.  அவர்கள் யார் என்றே எங்களுக்குத் தெரியாது.  ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு போனார்கள்.  என் நண்பர் அந்தச் சிறுமியின் கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சி ஸோ ஸ்வீட் என்றார்.  நண்பரும் அப்பழுக்கற்ற தூய்மையான மனம் படைத்தவர்.  ஆனால் அந்தத் தம்பதியின் ஆங்கிலம் அவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த தமிழர்கள் என்று காண்பித்தது.  நண்பர் அந்தச் சிறுமியின் கன்னத்தைத் தொட்டதுமே அவர்கள் கடுமையான குரலில் கத்த ஆரம்பித்து விட்டார்கள். 

எனக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது.  ஆச்சரியம் என்னவென்றால், என் நண்பர் அடிக்கடி அமெரிக்கா சென்று வருபவர். 

இதைப் போலவேதான் யாருடைய செல்லப் பிராணியைக் கொஞ்ச வேண்டும் என்றாலும் அவர்களின் முன் அனுமதி இல்லாமல் தொடுவது குற்றச் செயலே.  பெரும்பாலும் நாம் கேட்டாலும் அனுமதி கிடைக்காது.

இன்னொரு சம்பவம்.  என் வாசகர் ஒருவர் அமெரிக்காவில் வசித்தவர் நிரந்தரமாக தமிழ்நாட்டுக்கு வந்தார்.  அவருடைய தந்தை இறுதிக் காலத்தில் இருந்ததால் அப்போது அவர் அருகில் இருக்க வேண்டும் என்பது என் நண்பரின் முடிவு.  மகனோடும் மனைவியோடும் கிளம்பி வந்து விட்டார்.  மகன் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டான்.  ஏழாம் வகுப்பு.  வருடத்தில் ஓரிரு தினங்கள் மட்டுமே இந்தியா வந்து சென்றவன்.  அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன்.  சொர்க்கத்திலிருந்து நரகத்தில் தூக்கி எறிந்தது போல் இருந்தது பள்ளிக்கூடமும் தமிழ்ச் சமூகமும்.  குறிப்பாக பள்ளிக்கூடம் வதைக்கூடம்.  ஜாலியாக ஓவியம் வரைந்து கொண்டும், கவிதைகள் எழுதிக் கொண்டும்  இருந்தவனின் முதுகில் ஒரு மூட்டை புத்தகங்கள்.  பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கிறது அங்கிள் என்றான்.  அடுத்த ஆண்டே தனியாக அமெரிக்கா போய் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொள்வதில் உறுதியாக இருந்தான்.    யாரைப் பார்த்தாலும் என்ன படிக்கிறாய், எத்தனை மதிப்பெண் என்றே கேட்டு உயிரை வாங்குகிறார்கள் என்றான்.  எல்லாவற்றையும் விடக் கொடுமை, யாரைப் பார்த்தாலும் கன்னத்தைக் கிள்ளுகிறார்கள்.  அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அங்கே வந்த கிழம் ஒன்று அவன் கன்னத்தைக் கிள்ளி “என்னடா செல்லம், நன்றாகப் படிக்கிறாயா?” என்று கேட்டது.

பையன் என்னைப் பார்த்தான்.

சமீபத்தில் நான் பார்த்த ரீல்ஸ் ஒன்றில், ஒரு தமிழ்த் தாய் ஒரு ஐரோப்பிய மங்கையைத் தொட்டுத் தொட்டுப் பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.  ரீல்ஸை மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.  ம்ஹும்.  கன்னத்தைக் கிள்ளவில்லை.  ஆசுவாசமாக இருந்தது. 

இன்று மாலை நாலரையிலிருந்து எட்டரை வரை ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எஃப் 19