புத்தக விழா குறிப்புகள் – 10


என் ஞாபக மறதி வினோதமாகப் போய்க்கொண்டிருக்கிறது.  அந்த நண்பர் எனக்கு வணக்கம் சொன்னார். புத்தக விழா வளாகத்துக்கு வெளியே காஃபி கடை.  சமீபத்தில்தானே இவரைச் சந்தித்தோம்?  மிகவும் நெருக்கமானவர் ஆயிற்றே?  வழக்கம் போல் பெயர் மறந்து விட்டது.  கூச்சப்படாமல் பெயர் கேட்டேன்.  சரோ லாமா.  அடச்சே, இரண்டு தினங்களுக்கு முன்னால்தான் இதே உரையாடல் நடந்திருந்தது.  அவர் கொடுத்த எலந்தப்பழமும் அப்போதுதான் ஞாபகம் வந்தது.  இனிமேல் அடுத்த புத்தக விழாவில் பார்த்தால் மறக்காது என்று நம்புகிறேன்.

அவரைத் தொடர்ந்து Gaddyயைப் பார்த்தேன்.  அவர் பெயரைத் தமிழில் எழுதினால் கெட்ட அர்த்தம் வரும்.  ஆங்கிலத்தில்தான் எழுத முடியும்.  மூன்று முறைதான் சந்தித்திருப்பேன்.  இப்போது அவர் என்னைச் சந்திப்பதில்லை.  காரணமும் தெரியவில்லை.  சிரித்தபடி பணிவான குரலில், மிகவும் இளைத்திருக்கிறீர்கள் என்றார்.   இது இந்தப் புத்தக விழாவில் பலரும் சொல்வதுதான்.  சொல்லாமல் இருக்க முடியாது.  இளைத்துத்தான் போயிருக்கிறேன்.  எலும்புருக்கி நோய், சர்க்கரை வியாதி, வயது போன்ற காரணங்கள் எதுவும் இல்லை.  சாப்பாடு குறைந்து விட்டது.  குறிப்பாக மீன் உணவு. மீன் வாங்கினால் பத்து பூனைகளும் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விடுகின்றன.  அவைகளுக்கும் கொடுத்தால் வீடு பூராவும் வைத்துச் சாப்பிட்டு வீடு பூராவும் மீன் மணம்.   அவந்திகாவுக்குத்தான் சிரமம் ஆகி விடுகிறது.  அதனால் மீனே வாங்குவதில்லை.  ஸ்விக்கி மூலம் வாங்கிச் சாப்பிடும் மீன் குழம்பு படு கேவலமாக இருக்கிறது.  ஆனானப்பட்ட சவேரா மால்குடியில் கூட கறிக்குழம்பு அளவுக்கு மீன் குழம்பு இல்லை.  போரூரில் உள்ள வைரம் உணவகத்தில் பிரமாதமாக சமைக்கிறார்கள்.  ருசி அள்ளுகிறது.  ஆனால் ஸ்விக்கி சேவை இல்லை.  போய்தான் சாப்பிட வேண்டும்.  இல்லாவிட்டால் பார்சல் வாங்கி வரலாம். 

இதன் காரணமாக இளைத்திருக்கலாம்.  அல்லது, தினமும் பத்தாயிரம் அடி நடக்கிறேன்.  அது காரணமாக இருக்கலாம்.  ஏன் அப்படி நடக்கிறேன்? தெரியவில்லை.

ஆனால் Gaddy அடுத்து சொன்னதுதான் பயங்கரம்.  என்னடா இது, இந்தப் புத்தக விழாவில் யாரும் அது குறித்து வாய் திறக்கவில்லையே என்று பார்த்தேன்.  இவர் திறந்து விட்டார்.  இளைத்திருப்பது பற்றிக் கேட்டு விட்டு, உங்கள் எனர்ஜி லெவலும் கொஞ்சம் குறைந்தாற்போல் தெரிகிறது என்றார்.

கோபம் வரவில்லை.  என் எனர்ஜியை நிரூபிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.  நான் இப்போது கட்டை பிரம்மச்சாரி.  அதனால் ”அந்த” விதமாக நிரூபிக்க முடியாது.  பெட்டியோவை நண்பர் படித்தாரா என்று தெரியவில்லை.  எனர்ஜி குறைந்த ஒருத்தன் பெட்டியோவைப் போல் ஒரு நாவலை எழுத முடியுமா?  ஒன்றரை போத்தல் ஒயின் சாப்பிட்டு விட்டு நிதானமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன்.  மாலை ஏழு மணிக்கு சம்மணம் இட்டு அமர்ந்தால் காலை நான்கு மணி வரை காலை நீட்டாமல் உடம்பை நெளிக்காமல் கல் சிலைபோல் உரையாடுகிறேன்.  இன்னமும் நான் நடந்தால் சக்தி போன்ற இருபத்தைந்து வயது இளைஞர்கள் “என்ன சாரு, உங்களோடு நடந்தால் ஓடி வர வேண்டியிருக்கிறது?” என்று கேட்கிறார்கள்.  அப்படியும் எனர்ஜி குறைந்து தெரிகிறேன் என்றால், என்ன செய்யலாம்?  ஒரே வழிதான் இருக்கிறது.  Gaddy ஒரு மனநல மருத்துவரைத்தான் போய்ப் பார்க்க வேண்டும்.