நமனை அஞ்சோம் என்ற கட்டுரைத் தொகுப்புக்கு அடுத்த படியாக, இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை என்ற சிறுகதைத் தொகுப்பு தயாராகி வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் என்னுடைய பத்து புத்தகங்கள் ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ளன. இப்போது ”மொழி” என்ற தலைப்பில் அமைந்த என் கட்டுரைத் தொகுப்பை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் பிச்சைக்காரனின் ஒரு கடிதமும் அதற்கான என் பதிலும் உள்ளன. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஹாய் சாரு..
பைபிள் படித்து கொண்டு இருந்தேன். அப்போது கண்ணில் பட்ட ஒரு வாசகம் என்னை சற்று யோசிக்க வைத்தது.
அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும்,
சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
(1. கொரிந்தியர்.13:4-7)
இதைப் படிக்கும்போது எனக்கு உங்கள் நினைவுதான் வந்தது.அனைவரையும் நம்பும் குணம் அபூர்வமானது. குழந்தைகளிடம் மட்டுமே இதைக் காண முடியும். இந்த குணத்தைப் பயன்படுத்தி குழந்தையை ஏமாற்ற முடியும்தான். ஆனால் அப்படி ஒரு குழந்தையை ஏமாற்றி விட்டால், வாழ்நாள் முழுக்க நம்மை நம் மனசாட்சி மன்னிக்காது.
உங்களுடன் நேரில் பார்த்துப் பழகினால்தான், நீங்கள் எவ்வளவு நல்லவர்என்பதும், குழந்தை மனம் கொண்டவர் என்பதும் புரியும். அப்படித் தெரிய வரும்போது, அதற்கு முன் உங்களைப் பற்றித் தவறாக நினைத்ததற்காக ஒருவர் மனசாட்சியே அவரை வருத்தும்.
தவறான செய்திகளின் அடிப்படையிலும், பத்திரிகைகள் வழியாகவும் மட்டுமே உங்களைத் தவறாகப் புரிந்து கொள்பவர்கள், ஒரு காலகட்டத்தில் உண்மையை அறிந்து வருந்துவது உறுதி. (நான் அப்படி வருந்தி இருக்கிறேன்.)
உங்கள் நூல் ஒன்றை படித்துவிட்டு, அது பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என சொல்வது வேறு. ஆனால் , தனிப்பட்ட முறையில் வசை பாடுவது பெரும் தவறு. ஆகவேதான் உண்மை நிலையை என் பார்வையில் http://pichaikaaran.blogspot.com/2011/01/blog-post_15.html எழுதினேன்.
ஓஷோ, ஜே கே போன்றோர் தத்துவ தளத்தில் சொன்ன விஷயங்களை, நீங்கள் இலக்கியத் தளத்தில் சொல்வதாக என் எண்ணம்.
“காதல் என்பது பொசஸிவ்னெஸோ காமமோ இல்லை. காமத்தை அடக்கக் கூடாது ; புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்…” என்பது போன்ற பல விஷயங்களை என்னால் உதாரணமாக காட்ட முடியும்..
சிந்தனையில் மட்டும் அல்ல; செயலிலும் கூட பல உன்னத இடங்களைத் தொட்டுச் செல்பவர் நீங்கள். இந்த அடிப்படையில்தான் உங்களை ஓர் எழுத்தாளர் என்பதை விட தத்துவவாதி என்று உங்களிடமே சொன்னேன்.
நீங்கள் அதை மறுத்துப் பேசினீர்கள். இலக்கியத்தில் உங்களுக்கு இருக்கும் ஆர்வமும், வெறியும் தெரிந்த விஷயம்தானே? (இப்போது மறுக்க மாட்டேன் பிச்சை, இப்போது என்னை தத்துவம் சார்ந்தவனாகவே உணர்கிறேன் – சாரு)
நான் கேட்க விரும்புவது, ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றோர் புத்தகங்கள் படித்து இருக்கிறீர்களா?
பிச்சைக்காரன்.
நண்பரின் இந்தப் புரிதலில் சில இடங்களில் நான் முரண்படுகிறேன். ஒருவரின் எழுத்தை ரசிப்பதற்கு அவரோடு பழகியிருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. கஸான்ஸாகிஸோடு நாம் பழகியிருக்கிறோமா என்ன?
ஓஷோ, ஜே.கே. ஆகியோரை நான் ஒரு வாக்கியம் கூடப் படித்ததில்லை. ஓஷோவை அங்கே இங்கே புரட்டும் போது என்னையே வேறோரு ரூபத்தில் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல் தோன்றும். பயந்து போய் மேலே படிக்காமல் வைத்து விடுவேன். நீங்களே யோசித்துப் பாருங்கள். நீங்கள் கண்ணாடியைப் பார்க்கிறீர்கள். ஆனால் உங்கள் உருவத்துக்குப் பதிலாக ஓஷோவின் ரூபம் தெரிகிறது. உங்களுக்கு பயம்தானே வரும்?
ஜனவரி 19, 2011