ஒரு நெருங்கிய நண்பர். வசதியானவர். ஜோடிப்புறா பிடிஎஃப் அனுப்பவா என்று கேட்டேன். பதில் இல்லை. பிடிஎஃப்-இல் வாங்கினால் ஒரு ஐயாயிரம் கிடைக்குமே என்று ஆர்வப்பட்டேன். தனவந்தரின் பண உதவி மார்ச்சிலிருந்து நின்று போனதால் பணம் என்ற விஷயம் இதுவரையில் இல்லாமல் முதல் முறையாக என் சிந்தனையில் குறுக்கிட்டுக் கொண்டு வருகிறது. நெருங்கிய நண்பர் பதில் அனுப்பாமல் போனதோடு அந்த விஷயத்தை மறந்து விட்டேன்.
ஜோடிப்புறா அச்சு நூலாக வந்தது. எண்பது பிரதிகள் விற்றது. அந்த எண்பது என்ற எண்ணிக்கை பெரும் மன உளைச்சலைத் தந்தது. யாருக்காக எழுதுகிறோம், எதற்காக எழுதுகிறோம் என்றெல்லாம் பல கேள்விகள் மோத ஆரம்பித்தன.
என்னுடைய வாட்ஸப்பில் ஒரு நூறு பேர் உண்டு. நூறு பேருமே நெருங்கிய நண்பர்கள்தான். அவர்களில் ஒரு நாற்பது பேரை ஃபோனில் தொடர்பு கொண்டு ஜோடிப்புறா வாங்கினீர்களா என்று கேட்டேன். நாற்பது பேருமே வாங்கியிருந்தார்கள். சில ந்ல்ல ஆத்மாக்கள் புத்தகத்தின் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்கள். அடடா என்று ஆதங்கப்பட்டேன். அதற்கு மேல் நண்பர்களைத் தொடர்பு கொண்டு கேட்பதை நிறுத்தினேன். கேட்டிருந்தால் மேலும் நாற்பது பேர் வாங்கி விட்டதாகச் சொல்வார்கள். ஆக, விற்பனையான எண்பது பிரதிகளுமே என் நண்பர்களால் வாங்கப்பட்டதுதான் என்று புரிந்தது.

நேற்று என் நெருங்கிய நண்பரின் பெயரைச் சொல்லி “அவர் ஜோடிப்புறாவை வாங்கினாரா?” என்று வர்ஷாவிடம் கேட்டேன். எண்பது பேரில் அவர் பெயர் இல்லை என்றதும் எனக்குக் கொஞ்சம் சூடு ஏறியது. நண்பருக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன்.
அது ஒரு பதினைந்து நிமிடப் பேச்சு. அந்த வாய்ஸ் மெஸேஜில் உள்ள திவ்யப் பிரபந்த வார்த்தைகளை நீக்கி விட்டு, அதன் சுருக்கத்தை இங்கே தருகிறேன்.
எனது நெருக்கமான நண்பராக இருக்கும் நீங்கள் கூட வாங்கவில்லையானால் வேறு யார் வாங்குவார்? ஒன்பது கோடி பேரில் எண்பது பேர் வாங்கினால் நான் என்ன பண்ணட்டும்? எங்கள் வீட்டிலிருந்து கல்லெறி தூரத்தில்தான் அடையார் பாலம் உள்ளது. அதில் ஏறிக் குதித்துத்தான் ஒரு கர்னாடகப் பாடகியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். நேற்று சினிமா தயாரிப்பாளர் ராஜனும் அதே பாலத்தில் ஏறி நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். அன்னாரின் வயது எண்பத்தைந்து. நதியில் குதித்துச் சாவதுதான் தற்கொலையிகேயே மிகவும் கொடியது..
பல தமிழ் எழுத்தாளர்கள் பசி பட்டினியில் செத்திருக்கிறார்கள். புதுமைப்பித்தன் ஒரு முக்கிய உதாரணம். மருத்துவச் செலவுக்கும் உணவுக்கும் பணம் கொடுங்கள் என்று கடிதமே எழுதினார். அவரால் எழுத முடியாமல் ஒரு நண்பரிடம் சொல்லி எழுதப் பண்ணினார். கடிதம் எழுதிய மறுநாளே செத்தும் போனார். சாகும் போது அவர் வயது 42. சாகிற வயதா அது?
சாகாமல் என்ன ஐயா பண்ணுவார்? என்னுடைய நெருங்கிய நண்பரே புத்தகம் வாங்காமல் போகிறார் என்றால் என் பெயரையே அறியாத தமிழ்க் கூட்டம் எங்கேயிருந்து என் புத்தகத்தை வாங்கும்?
என் பதினைந்து நிமிட வாய்ஸ் மெஸேஜுக்கு நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவர் சொல்கிறார்: என் வாழ்க்கை நிலை மோசமாக இருக்கிறது. ஒரு ஸைக்கோ மாதிரி அலைந்து கொண்டிருக்கிறேன்.
என்னய்யா இது? உங்கள் மனைவிக்கு ராமபிரான் மாதிரி இருக்கிறீர். உங்கள் மகளுக்கு Atticus Finch மாதிரி இருக்கிறீர். (To kill a mocking bird நாவலில் வரும் உன்னதத் தந்தை) அலுவலகம் சென்று வருகிறீர். இந்தியாவின் தலைசிறந்த இருபத்தைந்து விஞ்ஞானிகளில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறீர். ஆனால் சாருவிடம் வந்தால் மட்டும் ஸைக்கோ ஆகி விடுகிறீர்? என்ன நியாயம் ஐயா இது? பொதுவாக என்னோடு பழகும் பெண்கள்தானே அப்படி ஆவதைப் பார்த்திருக்கிறேன்? இப்போது இது என்ன புதுக்கதையாக இருக்கிறது? என்னோடு பழகும் ஆண்களும் ஸைக்கோ ஆகி விட்டால் என் கதி என்ன ஆவது?
அதுவும் எப்போது? பிச்சைக் காசு, ஒரு அறுநூறு ரூபாய் கொடுத்து புத்தகத்தை வாங்கும் என்றால் ஸைக்கோ ஆகி விடுகிறீர்!!!
நண்பர்களே, இதை வாசிக்கும் நீங்கள் இதை ஒரு பிரச்சினையாகக் கருத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒன்பது கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு மொழியில் ஒரு நாவல் எண்பது பிரதிகள்தான் விற்கிறது என்றால் அது ஒரு சமூக அவமானம் இல்லையா? அதிலும் ஜோடிப்புறாவின் விலை ஆயிரம் என்று வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட தயாரிப்பு. ஆனால் 660 ரூபாய்தான் விலை வைக்கப்பட்டிருக்கிறது. அதை வாங்க ஆள் இல்லை.
கீழே சுரேஷ் ப்ரதீப் எழுதியிருக்கும் இரண்டு மதிப்புரைகளைத் தருகிறேன்.
https://www.facebook.com/share/p/1BCE7FnzBz/
நாவல் பிரதிகளை வாங்க:
G- Pay (7339680708)
அல்லது வங்கிக் கணக்கு எண் :A/c No: 25840200001634
IFSC CODE: FDRL0002584
ACCOUNT NAME: RAASA LEELA PATHIPPAGAM