உயிர்மை மூலமாக என் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஆண்டு தோறும் ஆறு அல்லது ஏழு புதிய புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. கடைசியில் பத்து பத்து புத்தகங்கள் வந்தன. ஆண்டு தோறும். இதன் ரகசியம் என்னவென்றால், நான் இணையத்தில் எழுதுவதையெல்லாம் சப்ஜெக்ட் வாரியாகத் தொகுத்து, பிழை திருத்தம் செய்து புத்தகமாக வெளியிடுவார் மனுஷ்ய புத்திரன். உயிர்மையிலிருந்து வெளியே வந்த பிறகு அந்தக் காரியம் நின்று விட்டது.
பின்னர், நண்பர் ஸ்ரீராம் ஆண்டு தோறும் புத்தகங்களை சப்ஜெக்ட் வாரியாகத் தொகுத்து பிழை திருத்தம் செய்து அனுப்பிக்கொண்டிருக்கிறார். இப்போது இருபத்தைந்து புத்தகங்கள் சேர்ந்து விட்டன. இப்போதுதான் இரண்டாவது நூலை செப்பனிட்டுக்கொண்டிருக்கிறேன். அதில் ஒரு இடத்தில் “என் குருதியில் ஓடும் ரத்தத்தில்” என்று வருகிறது. அவர் அதை உடலில் என்று மாற்றியிருக்கிறார். ஒரு நூல் இருநூற்றைம்பது பக்கம். இருபத்தைந்து நூல்கள். எப்படி வாசித்திருக்க வேண்டும்? எப்படித் திருத்தியிருக்க வேண்டும்?
இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தது என் பாக்கியம்.
ஸ்ரீராமுக்கு அன்பும் ஆசீர்வாதமும்.