கேடு தரும் டாஸ்மாக் உணவகங்கள்

இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி பல முறை எழுதியிருந்தாலும் என்னோடு உடன் வரும் நண்பர்கள் மறந்து விடுவதால் மீண்டும் எழுதுகிறேன்.  உனக்கு எங்கே போயிற்று புத்தி என்று நீங்கள் என்னைக் கேட்டால், எனக்கு இந்த விஷயத்தில் புத்தி இல்லை என்ற பதில்தான் வரும்.  இவ்விஷயத்தில் நான் அதிகவனமாகவே இருந்தாலும் ஓரிரு முறை மறந்து விடுகிறேன்.  மறந்தால் என் வாழ்வில் பதினைந்து நாள் காலி.

இறையருள் பாதி, பாதி என்னுடைய அதி தீவிர உடல் பராமரிப்பு மற்றும் உணவுப் பழக்கங்களின் காரணமாக எனக்கு உடம்புக்கு வருவதில்லை.  இந்த எழுபத்து மூன்று வயதில் அங்கே வலி, இங்கே வலி, ஜலதோஷம், ஜுரம், என்றெல்லாம் நான் சொன்னதே இல்லை.  இது டாக்டர் பாஸ்கரனுக்குத் தெரியும். 

ஆனால் ஒரே ஒரு விஷயத்தை என் உடல் ஏற்பதில்லை.  அது சைவ உணவகம்.  டிஃபன் எல்லாம் சாப்பிடுவேன்.  ஆனால் சாப்பாடு சாப்பிட்டால் உடனே வயிற்று வலி அல்லது வயிற்றுப் போக்கு.  இல்லாவிட்டால் வேறு ஏதாவது உடல் உபாதை.  அதனால் நான் சைவ உணவகங்களுக்குச் செல்வதே இல்லை.  காலை உணவு என்றால் பிரச்சினை இல்லை.  எவ்வளவு மோசமான தோசை இட்லியாக இருந்தாலும் ஒத்துக் கொள்ளும்.

சமீபத்தில் பவானி சென்றிருந்தேன்.  அங்கேதான் நிர்குண் வசிக்கிறார்.  அவரை நாம் மனித குலத்தில் சேர்த்துக் கொள்ளலாகாது.  தொல்காப்பியர் ஆறு அறிவு உள்ளவர்களாக மனிதர், அசுரர், தேவர் ஆகியோரைச் சொல்கிறார்.  நாம் பகுத்தறிவுவாதிகளாக மாறின பிறகு இந்த அசுரர், தேவர் போன்ற மூடத்தனங்களை நம்புவதில்லை. தொல்காப்பியர் கிடக்கிறார் விடுங்கள் மூடநம்பிக்கையாளர். 

ஆனால் அசுரர் தேவரெல்லாம் உண்டெனில் நிர்குண் அசுரனோ அல்லது தேவனோதான்.  மனித உடம்பினால், மனித மனதினால் எதெல்லாம் ஆகாதோ அதெல்லாம் நிர்குணால் செய்ய இயலும் என்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன். 

பவானியில் இருந்தபோது நண்பர்களுடன் பண்ணாரியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தேன்.  வரும் வழியில் நண்பர்கள் என்னை ஒரு சைவ உணவகத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.  பார்த்ததுமே தோன்றியது, இது ஆகாது என்று.  அதனால் நான் எதுவும் சாப்பிடவில்லை, சூப் மட்டும் குடிக்கிறேன் என்றேன்.  சூப் இல்லை.  சரி, கொஞ்சமாகச் சாப்பிடுவோம் என்று ஒரு கவளம் சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் மோர் குடித்தேன்.

விஷம் குடித்தேன் என்று சொல்ல வேண்டும்.  மோரில் என்ன தண்ணீரைக் கலக்கினார்களோ?  இப்படித்தான் நான் எங்கேயுமே ஐஸ் கட்டி வாங்கிப் பயன்படுத்த மாட்டேன்.  என் சத்ருவே சுத்தமில்லாத தண்ணீர்தான். 

உடம்புக்கே வராத எனக்கு உடம்புக்கு வரும் என்றால், அது தண்ணீர் மூலமாகத்தான்.  அதனால்தான் நான் பெரும்பாலும் கோக்கையே குடித்து விடுகிறேன்.  ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்த குளிர்ந்த கோக் கூட எனக்கு ஒன்றும் செய்யாது.  ஆனால் தண்ணீர் குடித்தால் உடம்புக்கு வந்து விடும்.  ஏனென்றால், அது சுத்தமில்லாத தண்ணீராக இருக்கும். 

மறுநாளிலிருந்து ஜலதோஷம்.  ஜலதோஷம் வந்தால் எனக்கு சரியாக இரண்டு வாரம் எடுக்கும்.  மருந்து சாப்பிட்டாலும் இரண்டு வாரம்.  மருந்து சாப்பிடா விட்டாலும் இரண்டு வாரம்.  இப்போது ஒரு வாரம் ஆகியிருக்கிறது.  ஒரு வாரமாக நடைப்பயிற்சிக்குப் போக முடியவில்லை.  உடம்பு அடித்துப் போட்டது போல் வலிக்கிறது. 

எனவே நண்பர்களே, என்னை சைவ உணவகத்தின் பக்கம் மட்டும் அழைத்தே செல்லாதீர்கள்.  எவ்வளவு பாடாவதியான அசைவ உணவகமாக இருந்தாலும் இப்படி எனக்கு உடம்புக்கு வருவதில்லை என்பதையும் கவனித்திருக்கிறேன். 

இன்னொரு முக்கியமான விஷயம்.  எனக்கு பூர்ஷ்வா வாழ்க்கைதான் ஒத்து வருகிறது.  கொஞ்சம் அதை விட்டு இறங்கினாலும் உடம்பு பதம் பார்த்து விடுகிறது.  என்னாலெல்லாம் ரோட்டுக் கடைகளில் ஒரு வேளை கூட சாப்பிட முடியாது என்று நினைக்கிறேன்.  சாப்பிட்டால் வயிற்று நோய் வந்து புத்த பிரானுக்கு நடந்தது போல் நடந்து விடும்.  வயிறும் உடம்பும் பூர்ஷ்வா வாழ்க்கைக்கு ஒரு மாதிரி பழகி விட்டது.

ஆனால் கடலூர் சீனுவோடு நான் வட இந்தியா முழுக்கவும் ரயிலிலும் பஸ்ஸிலும் ஒட்டக வண்டிகளிலும் சுற்ற விரும்புகிறேன்.  வட இந்தியாவில் இப்படி ஏழை எளிய மக்களின் உணவு ஆரோக்கியக் கேட்டை விளைவிப்பதில்லை.  மூணு ரொட்டி, தொட்டுக் கொள்ள வெங்காயமும் பச்சை மிளகாயும், கொஞ்சம் ஊறுகாய் அல்லது அவித்த பருப்பு.  போதும், அமிர்தமாக இருக்கும்.  வட இந்தியா முழுவதும் இதைச் சாப்பிட்டுக் கொண்டே சுற்றி வரலாம்.  அதிலும் கடுகெண்ணெயில் தயாரித்த ஊறுகாய் என்றால் எனக்கு உயிர்.  எனவே நான் ஏழை எளிய மக்களின் எளிமையான உணவுக்கு எதிரி அல்ல.  தமிழ்நாட்டில் கிடைக்கும் எளிய உணவு விஷத்தன்மை கொண்டதாக இருக்கிறது. 

நான் சாப்பிட்ட சைவ உணவகத்தில் சாம்பார், ரசம் எல்லாம் கழுதை மூத்திரம் மாதிரி இருந்தது. 

உள்ளே நுழையும்போதே வர்ஷா “இங்கே வேண்டாமே, வேறு நல்ல இடமாகப் போகலாமே?” என்றார்.  ஆனால் வேறொரு தோழி, “இங்கே நான் வந்திருக்கிறேன், நன்றாக இருக்கும்” என்றார். 

திரும்பவும் சொல்கிறேன், தமிழ்நாட்டில் இது போன்ற எளிமையான உணவகங்களில் மிக மட்டமான, உடம்புக்கு ஆகவே ஆகாத உணவைத்தான் கொடுக்கிறார்கள்.  இம்மாதிரி உணவகங்கள் நம் டாஸ்மாக் மாதிரி.  பாருங்கள், எனக்கு உடம்புக்கே வராது.  ஜுரம் வந்தே ஒரு நாலு வருடம் இருக்கும்.  நாலோ ஐந்தோ ஆறோ.  அப்படிப்பட்ட எனக்கு அந்த எளிய உணவகத்தில் குடித்த மோரினால் ஜலதோஷம் வந்து விட்டது.  லிட்டர் லிட்டராக சளி கொட்டுகிறது.  மூக்கோ ஜலதாரையாக மாறி விட்டது.  உடம்பெல்லாம் வலிக்கிறது.  தாயோளிகள், கண்ட கச்சடாத் தண்ணீரை ஊற்றி மோர் கலந்திருக்கிறான்கள்.

நடந்த ஊர் என்ன தெரியுமா?  சத்தியமங்கலம்.  அடக் கடவுளே, சத்தியமங்கலம் போன்ற ஒரு பெரிய ஊரிலா ஒரு பெரிய, நல்ல உணவகம் இல்லாமல் போகும்? 

என்னை உடன் அழைத்துச் செல்லும்போது என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  எனக்கு உடம்புக்கே வந்ததில்லை.  குழாயில் வரும் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்தால் என் வாழ்வில் பதினைந்து நாள் காலி.  

ஈரோட்டில் ஒரு நகைக்கடைக்குப் போனேன்.  காஃபி சாப்பிடுகிறீர்களா என்றார்கள்.  அது எனக்குக் காஃபி நேரம்.  மடத்தனமாக சரி என்று சொல்லி விட்டேன்.  கடவுளே, பாயாசம் கூட அத்தனை இனிப்பாக இருக்காது.  வாந்தி வந்து விட்டது.  என்ன நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று காஃபியை ஒரு மடக்கோடு அப்படியே வைத்து விட்டேன்.  இம்மாதிரியே என்னால் எப்போதும் கவனமாக இருக்க முடியவில்லை.  மோர் விஷயத்தில் ஏமாந்து விட்டேன். 

இதையெல்லாம் தவிர்க்க ஒரே வழி, எளிய உணவகங்களில் சாப்பாடு வேண்டாம்.  அவை டாஸ்மாக்கின் வேறோர் வடிவம்.  இன்னொன்று, சைவ உணவகங்கள் வேண்டாம்.  அவை வயிற்றைக் கெடுக்கும் கேந்திரங்கள்.  இது அனைத்தும் தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருந்தும்.  கர்னாடகா, கேரளா எல்லாம் சொர்க்கம்.  கேரளத்தின் மலைக்கிராமம் ஒன்றில் முப்பது ரூபாய்க்கு அட்டகாசமான மீன் குழம்பு சாப்பாடு கிடைக்கும்.  நட்சத்திர ஓட்டல்களில் கூட அத்தனை ரகம் இருக்காது. 

பின்குறிப்பு: இந்த இடத்தில்தான் சீனியின் தேவையை உணர்கிறேன். அவராக இருந்தால் பார்த்த மாத்திரத்தில் பட்டென்று சொல்லியிருப்பார், இந்த உணவகம் சாருவுக்கு ஒத்துக் கொள்ளாது என்று. என் கூட வந்த ராஜா என்னை விட சோப்ளாங்கி. வாயே திறக்க மாட்டார். அவருக்கே ஒரு ஆலோசகர் தேவை. அவர் எங்கே மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்ல?