இந்திய அளவில் பதிப்பகங்கள் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றன. கொரோனா பாதி, யாரும் புத்தகம் படிப்பதில்லை என்ற காரணம் பாதி. என்னைக் கேட்டால், கொரோனா இல்லாதிருந்தால் கூட இப்படித்தான் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். குடிசைத் தொழில் மாதிரி நடத்தினாலே மாதம் ஒரு லட்சம் ரூபாய் தேவை. ஆனால் புத்தக விற்பனை அத்தனை இல்லை. பதிப்பாளருக்கு வேறு வருமானம் இருந்தால் இதை ஒரு ‘பேருக்காக’ நடத்தலாம். இது என் சொந்தக் கருத்து. இதற்காகப் பதிப்பாளர்கள் என் மீது பாய்ந்தால் எனக்கு ஒரு கவலையும் இல்லை. நான் எழுதுவதே பதிப்பாளர்களுக்கு ஆதரவாகத்தான் என்பது கூட தெரியாத சில மட்டிகள் என் மீது பாய்ந்தன. அதை விட்டு விடுவோம்.
தமிழ் இலக்கியத்தில் என் பெயர், என் இடம் பற்றி நான் உங்களுக்குசசொல்ல வேண்டியதில்லை. எக்ஸைல் நாவல் வெளிவந்து ஏழெட்டு ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது மூன்றாம் பதிப்பு வந்துள்ளது. முன்பு வந்த பதிப்புகளில் 2000 பிரதிகள் விற்றிருக்கும். இந்த ஏழெட்டு ஆண்டுகளில்தான் எனக்குப் புதிய வாசகர்கள் அதிகம். ஆக, இப்போது வந்தால் 1000 பிரதி குறைந்த பட்சம் விற்கும் என்று எண்ணி, மூன்றாம் பதிப்பாக இருப்பதால் கெட்டி அட்டை போடச் சொல்லலாம் என்று நினைத்தேன். பதிப்பகத்திடம் சொல்லவே எனக்குத் துணிச்சல் இல்லை. சொல்லவில்லை. ஏனென்றால், எனக்கு நிலைமை தெரியும். எத்தனை பிரதிகள் போட்டார்கள் என்று கேட்டேன். 200 என்று பதில் வந்தது. நொந்து போனேன். ஒரு ஆயிரமாவது போட வேண்டாமா என்று மனதில் தோன்றியது. வெளியே சொல்லவில்லை. இப்போதுதான் பதிப்பாளர் நினைப்பதே சரி என்று தெரிகிறது. 20 பிரதி விற்றிருக்கிறது. இந்த இருநூறே விற்குமா என்று தெரியவில்லை. பொதுவாக இந்த விஷயத்தையெல்லாம் பதிப்பாளர் அனுமதி இல்லாமல் நான் எழுதக் கூடாது. ஆனால் தமிழ்நாட்டில் எழுத்தாளனின் அவல நிலை பற்றி நான் எழுதியாக வேண்டும். இப்போதைய கொரோனாவைக் காரணம் காட்டாதீர்கள் தயவுசெய்து. அரசு ஊழியர்கள் மாதம் பதினைந்து நாள் போனால் போதும். ஆனால் சம்பளத்தில் பிடிப்பு இல்லை. முழுச் சம்பளம்தான். இன்று லக்கி பூனைக்கு மீன் வாங்கினேன். அயிரை. நாங்கள் காணாங்கெளுத்தி என்று சொல்வோம். நான்கு மீன். 600 ரூ. ஒரு கிலோ. இங்கே பட்டினப்பாக்கத்தில் இது அதிக பட்சம் 150 ரூபாய். கடையிலிருந்து ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்ததால் இந்த விலை. கொரோனா காரணமாக நான் வெளியே செல்ல முடியாததால் இது. எந்த இடத்தில் கொரோனா காரணமாக யாரும் எதுவும் வாங்காமல் இருக்கிறார்கள்? நான் சொல்வது, இலக்கியம் படிக்கக் கூடிய மத்தியதர வர்க்கத்தைப் பொறுத்தவரை.
இந்தச் சூழலில் ஒரு நண்பர் எனக்கு உங்கள் கையொப்பமிட்ட எக்ஸைல் அன்பளிப்பாகத் தாருங்கள் என்று மெஸேஜ் அனுப்பியிருக்கிறார். நண்பரே, இனி உங்களை எதற்காகவும் நான் தொடர்பு கொள்வதாக இல்லை. அவர் என் தளத்தில் படிக்கும் கட்டுரைகளுக்கு சந்தா கொடுக்க வேண்டும் என்று என்றைக்காவது யோசித்திருப்பாரா? நான் அவருக்குப் பரிந்துரை செய்த அகோரா புத்தகங்கள் இப்போது அவர் வாழ்வில் புதிய ஒளி காட்டியிருக்கிறது. அதற்கெல்லாம் நான் அவரிடம் காசு கேட்டேனா? என்ன வேடிக்கையான மனிதர்கள்!
இனி எக்ஸைல் பற்றி எதுவும் எழுத மாட்டேன். நான் ஔரங்கசீப் நாவலுக்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதை விட்டு விட்டு இதை எழுதக் காரணம், இப்போதுதான் பா. ராகவன் எக்ஸைலுக்கு எழுதிய மதிப்புரையைப் படித்தேன். அதை உங்களோடும் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது. எப்போதோ எழுதிய மதிப்புரை. இப்போதுதான் படிக்க நேர்ந்தது. அதில் அவரது நண்பர்கள் அவரிடம் எக்ஸைல் பற்றிச் சொன்ன ஒரு குற்றச்சாட்டு வருகிறது. என்னிடமும் அநேகம் பேர் அதைச் சொல்லியிருக்கிறார்கள். ”அதில் உள்ள பல விஷயங்கள் என் தளத்திலேயே இருக்கிறது. ஏற்கனவே எழுதியது.” ஏன் ஐயா, இது ஒரு குற்றச்சாட்டா? இது ஒரு குறையா? எஸ்.ரா. எழுதியதை ஒன்றும் எடுத்து நான் போட்டுக் கொள்ளவில்லையே? நான் எழுதியதைத்தானே எடுத்து நாவலில் போட்டேன்? அதில் என்ன தவறு? காமரூப கதைகள் நாவலையே நான் என் இணைய தளத்தில்தானே எழுதினேன்? பிறகுதானே அது புத்தகமாக வந்தது? இந்த நாவல் ஏற்கனவே தளத்தில் வந்துள்ளது என்றால் அது ஒரு குறையா? குற்றச்சாட்டா? என்ன இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது? நான் எதை வேண்டுமானாலும் நாவலில் சேர்ப்பேன். அது என் உரிமை. அது எந்த அளவு நாவலாக வந்திருக்கிறது என்று அல்லவா பார்க்க வேண்டும்? என்னைப் பொறுத்தவரை, எக்ஸைல் நாவலின் முதல் அத்தியாயம் (கேசவன் யானை), கடைசி அத்தியாயம் (ஃப்ளோரான் மீன்) – இரண்டுக்கும் இணையாக உலக இலக்கியத்தில் எழுதப்பட்டதில்லை. பீரியட்.
நான் எழுதியவற்றில் எனக்கு ஆகப் பிடித்த நாவல் எக்ஸைல். 1000 ரூ. விலையுள்ள நாவல் இப்போது 750க்குக் கிடைக்கிறது.
பா. ராகவனின் மதிப்புரை