என் வாழ்வில் கல்லூரி நாட்களின் இறுதியில்தான் சாரு எனக்கு அறிமுகமானார். ஆனால் அவரை யாரும் எனக்குப் பரிந்துரைத்ததில்லை. வாழ்வில் ஏதோ ஒரு அற்புதம் நிகழ்ந்தது போல அவருடைய யூடியூப் உரைகளை நான் கேட்க நேர்ந்தது. அப்போது இருந்த என் மனநிலை இது: உலகம் இலுமினாட்டிகளால் ஆளப்படுகிறது; அதன் தாக்கம்தான் ”என்ன, உலகம் இப்படிக் கெட்டுப்போய்க் கிடக்கிறது” என்று தோன்றியதெல்லாம். மனதில் என்னென்னவோ குழப்பங்கள்… ஆனால் அந்தச் சூழ்நிலையில் என்னுடைய நிலை எனக்கே பரிதாபமாகத்தான் இருந்தது. நான் படிக்கிறேனா இருக்கிறேனா என்றே தெரியாத தந்தை.. தங்களுடைய வாழ்க்கை இப்படி வீணாகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டிருக்கும் அக்காக்கள்… எங்கே கல்லூரி விடுமுறை விட்டால் வீட்டுக்கு வந்து விடுவானோ என்று நினைக்கும் அப்பாவின் மனைவி… இந்த நிலைமையில்தான் நான் என்னோடு சேர்த்து உலகத்தைப் பற்றியும் வருத்தம் கொண்டு இருந்தேன்.
சமீபத்தில் இந்து நாளிதழில் வந்த ‘நாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்- யுவால் நோவா ஹராரி’
என்ற கட்டுரையின் மூலமாக கடைசியாக அந்த இலுமினாட்டிகள் பற்றிய குழப்பம் தீர்ந்தது. இதனிடையில் உங்களுடைய முகநூலில் இருந்து அறிமுகமான பா. ராகவனின் புத்தகங்களில் இருந்து உலக நாடுகள் பற்றிய அறிமுகமும் கிடைத்தது. சரி, விஷயத்துக்கு வருவோம். அந்த யூட்யூப் வீடியோக்களைப் பார்த்து தொடர்ச்சியாக நான் உங்களின் ஸீரோ டிகிரி புத்தகத்தை வாங்கி வாசித்து முடித்த பின் பெண் எவ்வளவு அடிமையாக இருக்கிறாள், ஏன் ஆண்கள் இவ்வளவு மனிதாபிமானமற்று இருக்கிறார்கள் என்று மட்டும் நினைத்துக் கொண்டேனே தவிர, அந்த நூலின் கருவை என்னால் வாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்போது எனக்கு இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத காலம்.
இலக்கிய அறிமுகம் ஸ்ருதி யூடியூப் சேனல் முகமாகத்தான் எனக்கு கிடைத்தது. அதற்காக அந்த யூடியூப் சேனலுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து உங்களுடைய நாடோடியின் நாட்குறிப்பு, கடவுளும் நானும், கடவுளும் சைத்தானும், தீராக்காதலி, அறம் பொருள் இன்பம், கெட்டவார்த்தை போன்ற கட்டுரைத் தொகுதிகளைப் படித்து முடித்தேன். அதன் தொடர்ச்சியாக உங்களின் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும், ராஸ லீலா, தேகம், காமரூப கதைகளை வாசித்தேன். மிகவும் கொண்டாட்டமாக இருந்தது.
ஆனால் உங்களால் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு இணையாக அப்போதிருந்து சில துன்பங்களையும் சேர்த்து அனுபவித்து வருகிறேன். வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பதால் ஏற்படும் மன உளைச்சல்கள்தான் அவை. நீங்கள் சித்தரிக்கும் வாழ்க்கையைப் போலவேதான் என் வாழ்வில் நானும் 80% சதவீதம் அனுபவித்திருக்கிறேன். ஊரின் ஒதுக்குப் புறம், கருவக்காடு, ரயில் தண்டவாளம், இரவு நேரம், இத்தியாதி இத்தியாதி….. கழிப்பறை கட்ட வீட்டுக்குள் சண்டை நடக்கும். 16.7.2021 இன்றுவரை கழிப்பறை கட்டுவது வீண் செலவு தான் என்று நினைக்கிறார்கள். குறைந்தபட்சம் என்னுடைய கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று முடிவு செய்தேன்.
அடுத்து
உங்கள் எழுத்தின் தாக்கம் மிகவும் அதிகமாகி விட்டது. சமீபத்தில் ‘த கிரேட் இந்தியன் கிட்சென்’ என்கிற படம் பார்த்த ஆர்வத்தில் எனக்கு என்னுடைய உடைகளை நானே துவைத்து கொள்வது என்று முடிவு செய்தேன். ஆரம்பத்தில் என் துணிகளை மட்டும் தனியாக எடுத்துத் துவைத்துக் கொண்டேன். ஆனாலும் அதனை என்னால் தொடர முடியவில்லை. நான் எடுத்து வைக்கும் துணிகளை எனக்கு முன்பே துவைத்து விடுவார்கள். இன்னும் அதனை சில பெண்கள் அவர்களின் உரிமையாகப் பார்க்கிறார்கள். ஆனால் துணிகளைத் துவைத்த பின் ஏன் வசை பாடுகிறார்கள் என்று தெரியவில்லை. (அவர்களுக்கு இந்தப் பையனுக்கு 26 வருஷமா எல்லாம் நான்தான் செய்தேன் என்று என் உறவுக்காரர்கள் இடமும் பெருமை சொல்லவும் இருக்கலாம்) தெரியவில்லை அவர்களை யார் கேட்பது.. யாரால் கேட்க முடியும்? கேட்டால் பிரச்சனையாகிவிடும்.
சரி, அடுத்த கட்டத்திற்கு வருவோம். சமையல். ஏன் நம்மால் மற்றவர்களுக்குக் கஷ்டம் என்று நானே தோசை சுட்டு சாப்பிட ஆரம்பித்தேன். அதனால் ஏகப்பட்ட பிரச்சினையாகி விட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்தவர்களின் உரிமையில் மற்றும் நேரத்தில் தலையிடாமல் இருப்பது என முடிவு செய்தேன். ஆனால் அவர்களோ என் நேரத்திலும் என் முடிவுகளில் வந்து விளையாடி விட்டுச் செல்கிறார்கள் இன்னும் இத்தியாதி இத்தியாதி.
ஆனாலும் இப்படி இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் அறிமுகப்படுத்திய இசை அனைத்தும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் உங்கள் ப்ளாகில் நீங்கள் ஷேர் செய்த ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்களின் கட்டுரை சொன்ன குலாம் அலியின் கசல் தான் இப்போது என் அறையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. சமீபமாக உங்களின் எக்ஸைல் நாவலைப் வாசித்தேன். என்ன சொல்லட்டும் சொல்லுங்கள்… “கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்”
அதில் உங்களின் சபரிமலை பயணத்தின் பற்றிய குறிப்பும் அனுபவம் மற்றும் குருசாமி இளங்கோவின் கதை, 108 சரணகோஷம் என அனைத்தும் சபரிமலை செல்ல வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி தூண்டிவிட்டது, மனதுக்குத் தோன்றும் போதெல்லாம் அந்த 108 சரணகோஷம் தெரியும் அரை முழுவதும் ஒலிக்க சொல்லி வருகிறேன்… உங்களின் எழுத்தின் மூலமாக உங்களுடைய சிந்தனையின் வாரிசாக மாறிக் கொண்டிருக்கும் உங்கள் வாசகன்.
அன்புடன்,
கலையரசன்
அன்புள்ள கலையரசன்,
உங்கள் கடிதத்தைப் பார்த்தால் நீங்கள் இன்னமும் மற்றவர்களைச் சார்ந்தே வாழ நேர்ந்திருக்கிறது என்று தெரிகிறது. மற்றவர்களைச் சார்ந்து வாழும்போது நம்முடைய மதிப்பீடுகளைக் கொண்டு வாழ்வது கடினம். முதலில் பொருளாதார சுதந்திரம்தான் அடிப்படை. அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம். லௌகீக ரீதியாக இன்னும் உங்களை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் விருப்பப்படி வாழ முடியும்.
என் ஆசீர்வாதமும் அன்பும்
சாரு