காலையில் ஒரு மரண செய்தி. எப்போதுமே மனிதர்களின் மரண செய்திகள் பாதிப்பதில்லை என்பது போல இதுவும் பாதிக்கவில்லை. ஆனால் இறந்து போனவர் என் நண்பரின் நெருங்கிய நண்பர் என்பதால் எனக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் கம்மென்று இருந்தேன். மேலும், இறந்து போனவர் இள வயதுக்காரர். இன்னும் எத்தனையோ காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர். ஆனாலும் நான் செய்தியைக் கேள்விப்பட்டு ஒரு ஜடப் பொருளைப் போலவே இருந்தேன். என்னையே நினைத்து எனக்குக் கோபமாக இருந்தது. ஏன் இப்படி இருக்கிறோம்? ஆனாலும் வருத்தப்படுவது போல் நடிக்க முடியாது. அது யோக்கியமற்ற செயல். ஆனாலும் இத்தனை பேர் முகநூலில் RIP, ஆழ்ந்த இரங்கல் எல்லாம் போட்டு வருத்தப்படுவது போல் நமக்கு ஏன் துக்கம் பொங்க மாட்டேன் என்கிறது? நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் இறந்தால் அப்படியெல்லாம் துக்கம் பொங்காது என்கிறார்கள். தவறு. எனக்குத் தெரிந்தவர்களுக்கு அது நடந்தாலும் ஜடம் மாதிரிதான் இருக்கிறேன். எல்லாவற்றையும் விட மகா கொடுமை என்னவென்றால், பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நெருங்கிய நண்பன் எனக்கு ஃபோன் செய்து, உலகத்தின் துக்கத்தையெல்லாம் தொண்டையில் தேக்கி, “சுந்தர ராமசாமி இறந்து விட்டார்” என்று சொன்னபோது “ஓ…” என்று சொல்லி, சில நொடிகள் நிறுத்தி, அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியாமல், “சரி” என்றேன். சரிக்குப் பிறகு மூன்று புள்ளிகள் கூடப் போடவில்லை. சரியோடு சரி.
இன்று ராஜேஷ் வந்து என்னை பெட் ஷாப் அழைத்துப் போவதாகச் சொல்லியிருந்தார். நம் வீட்டு லக்கி ரொம்பவும் அராஜகப் பூனை. குறிப்பிட்ட உணவு வகைகளைத்தான் சாப்பிடும். எல்லாம் தீர்ந்து விட்டது. மைலாப்பூர் இஸபெல்லா மருத்துவமனைக்குப் பக்கத்தில் கருப்பையா பெட் ஷாப் என்று உண்டு. ராஜேஷும் நானும் போனோம். லிஸ்டைக் கொடுத்து சாமான்களை வாங்கிக் கொண்டோம். ட்யூனாவும் ஸால்மனும் இருக்கிறதா என்று கவனமாகப் பார்த்து வாங்கிக் கொண்டேன். அதுதான் லக்கியின் உணவு. அதோடு ஒரு எலி பொம்மையும் வாங்கிக் கொண்டேன். லக்கியின் விளையாட்டுப் பொருள்.
மௌனமாக இருக்க வேண்டும் என்று எல்லா மகான்களும் சொல்லியிருக்கிறார்கள். நெரூரில் சதாசிவ பிரம்மம் என்ற திகம்பரத் துறவி இருந்தார். தியாகராஜருக்குச் சற்று முந்தைய காலம். இளம் வயதில் லொட லொட என்று பேசிக் கொண்டே இருந்ததால் ஒருநாள் குரு ‘வாயை மூடு’ என்று சொன்னதால் தன் ஆயுட்காலம் முழுவதுமே ஒரு வார்த்தை பேசவில்லை சதாசிவ பிரம்மம். அவ்வளவெல்லாம் போக வேண்டாம். அநாவசியமாக யாரிடமும் பேசாமல் இருக்கலாம் அல்லவா? பொதுவாக முன்பின் தெரியாதவர்களிடம் நானாக எதுவும் பேசுவதில்லை. இன்று எனக்குப் போறாத காலம். தமிழ் தெரியாத ஒருவனிடம் பேசி விட்டேன். அதுவும் தமிழில். நேபாளி பையன். கருப்பையா பெட் ஷாப்பில் உதவியாளாக இருக்கிறான்.
கிளம்பும்போது அங்கேயிருந்த பெண்ணிடம் “இங்கே ஒரு அழகான பூனை இருக்குமே, அதுஎங்கே” என்று கேட்டேன். அந்தப் பெண் காதில் விழாதது போல் இருந்து விட்டாள். நன்றாகப் பேசக் கூடியவள் ஆயிற்றே என நினைத்தபடி அந்த நேபாளி பையனிடம் கேட்டேன். அவன் தமிழ் என்று நினைத்த ஏதோ ஒரு மொழியில் ஏதோ ஒரு பதில் சொன்னான். புரியவில்லை. பிறகு சைகையிலேயே சொன்னான்.
இந்த ஜென்மத்தில் என் உயிர் பிரியும் வரை மறக்காத சைகை. வாசலில் நின்ற ராஜேஷின் காரைக் காண்பித்தான். பிறகு சக்கரத்தைக் காண்பித்தான். பூனையைப் பல மாதிரி சைகையில் உருவகப்படுத்தினான். பிஷ்ஷ்யூக் பிஷ்ஷ்யூக் என்று சொல்லி ஜூஸ் பிழிவது போல் பிழிந்து காண்பித்தான்.