மெதூஸாவின் மதுக்கோப்பை: மதிப்புரை: சிவசங்கரன்

மெதூஸாவின் மதுக்கோப்பை

சாரு நிவேதிதா

எழுத்து பிரசுரம்

இந்த நூலைப் பற்றி எங்கு தொடங்கி, எங்கு முடிக்க என்று நினைக்கையில் மனம் பதறி போகிறது. இது குறைவான பக்கங்கள் கொண்ட புத்தமானாலும், இது, பேசுகிற எழுத்தாளர்கள், நிகழ்வுகள், சம்பவங்களின் பட்டியல் மிக நீளமானது. சற்று, நிதானித்து மெதுவாக படித்தால் நன்றாய் சுவைக்கலாம்.சாரு நிவேதிதா என்ற மனிதன், எழுத்தாளனாக சக எழுத்தாளர்களைப் போல் அல்லாமல் புறக்கணிக்கப்படுவதை ஏன்? என்ற கேள்விக்கு உட்படுத்தியதற்கு ஒரு மூட்டை நிறைய பதில்களாக எனக்கு இப்புத்தகம் அமைகிறது.பிரஞ்சு இலக்கியத்தில் எனக்கு தெரிந்தவர்கள் கொஞ்சம் குறைவே. குறைவு எனக்கூறியது எண்ணிக்கை அடிப்படையில், இதில், இவர் பேசியிருப்பது எழுத்தாளர்கள் என்பதை தாண்டி அவர்களின் போராட்டம், வாழ்வியல் முறை, பித்த நிலை, தத்துவ வழிபாடு, கலை, காம வெளிப்பாடு என சகலத்தையும் பேசி வைத்திருக்கிறார்.எனக்கு இதிலிருந்து அகப்பட்ட எழுத்தாளர்களின் சிறு பட்டியல்,

Claude Levi-Strauss, Jean paul sartre, Roland Barthes, Louis Althussar, Jacques lean, Michel Focault, Jacques Derrida, Helene Cixous, Luce Irigaray, Georges Bataille, jean Luc goddard, Francois Truffaut, Abdellatif Laabi, Jamal Benomar, Jean Genet… இன்னும் கூட விரிகிறது, இப்பட்டியல்.

இதில் Abdellatif Laabi எழுதிய Rue du Retour நாவலின் கதையம்சம் அவ்வளவு கற்பனைத் திறம் மிக்கது. இது, குழந்தைகளுக்கான கதை என்று கூட சொல்ல தோன்றவில்லை. சூரிய ஒளியை விற்கும் மன்னன், சூரியனை நண்பனாக்கி கொள்ளும் சிறுமி, வினோதமான சிறையில் அடைக்கப்பட்டு தன் நண்பனின் ஓளியின்றி தவிக்கிறாள். செத்து மடிகிறாள். சூரியன்கள் என பல உருவாகி விட்டது. இதமான கதை போக்கு கொண்டு எதனை குழந்தைகளிடையே நாம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட சிறப்பான கதை. இதில் பலருடைய சிறையனுபவங்கள் நிறைய படிக்க முடிகிறது. ஏனெனில், எக்காலத்திலும் கலைஞனுக்கு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் இல்லை என்பதை இக்காலமும் கண்டு நம்மால் உணர முடிகிறது.

Jamal Benomar, Alees என்பவர்களுடைய சிறை அனுபவங்கள் என்னை உருக்குலைத்து போட்டன.

நான்கடி அகலம், ஒன்பதடி நீளம் கொண்டு 29செல்களில் கைதிகள் ஒவ்வொருவராய் ரத்த வாந்தி எடுத்து மலம் கழிக்க முடியாமல், சாப்பிடாமல், நாயும் கூட பட்டினியில் வெறி பிடித்து இறந்து நாற்றம் பிடித்து போயிருக்கிறது. கரப்பான் பூச்சிக்கு இரையான மனித உடல்கள் என்ற வரிகளெல்லாம் ஆழ்ந்த யோசனைக்கு வித்திட்டது. இது This Blinding Absence of Light என்ற புத்தகத்தில் இடம் பெறும் அலீஸ் என்பவரின் நினைவுக்குறிப்புகள். இவற்றை எல்லாம் படிக்கையில் மனிதன் உடை அணிந்து கொண்டு நடமாடும் மிருகமே என்று தான் தோன்றுகிறது. குறிப்பாக, எனக்குப் பிடித்த இந்த வரிகளை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்,”மனித பிராணியின் முழுமையான சுதந்திரம் என்பது மிகவும் பயங்கரமானது”- Alejandra Pizarnik கூறியது. மனிதனுக்கு முழு சுதந்திரம் என எல்லா வற்றையும் கொடுத்தாலும் கூட அவன் மிருகமாக தானிருப்பான். அதுவும், இந்த நவீன, சீரழியும் காலகட்டத்தில் சொல்ல தேவையில்லை.பிறகு, Jean Genet என்ற கலைஞனை, திருடனை, குடிகாரனை பற்றி பேசியது மிகச்சிறப்பு. ஆம், முதலில் இவர் ஒரு திருடன், ஆனால், இவர் எழுதிய இலக்கியத்தால் இவரும் மாறி, அரசாங்கமும் இவரை அங்கீகரித்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டியது. இவர் எழுத்தில் உள்ள பாலியல் தன்மையால் இவரும் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சார்த்தர் இவரை, “ஜெனேயைத் திருடன் என்று அடையாளம் காணாதீர்கள்; அவர் ஒரு ஞானி” எனக் கூறுகிறார். இதோடு சாரு எழுப்பியுள்ள கேள்வியை இங்கே முன் வைக்கிறேன், ” தமிழ் வாசகர்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் எழுத்தாளனை ஒரு வள்ளலார், தாயுமானவர் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கிறார்கள். எழுத்தாளன் என்பவன் மாரல் சயின்ஸ் டீச்சரா என்ன? நீங்களெல்லாம் என்ன வேண்டுமானாலும் அயோக்கியத்தனம் செய்வீர்கள். ஆனால், எழுத்தாளன் மட்டும் புதுமைப்பித்தனைப் போல, பாரதியைப் போல, கோபி கிருஷ்ணனைப் போல உத்தமர்களாக வாழ்ந்து பட்டினி கிடந்து, உங்களுக்கு நற்போதனைகளை போதிக்க வேண்டும்?

காமத்தைப் பற்றியான சரியான புரிதலை நாம் Georges Batailleவிடம் காணமுடிகிறது. காமம் வெறும் சதையோடு முடிவதில்லை, இதன் வழியிலும் கடவுளை தரிசிக்க கடவுளாக மாறிய அவர் உருவாக்கிய ஒரு பெண் கதாபாத்திரத்தை முன் வைத்து நிறைய எழுதியிருக்கிறார், சாரு. அவை அனைத்தும் விவாதிக்கப்படப் வேண்டியவை. சாரு இப்படி கூறியிருக்கிறார், “பாலியல் அனுபவத்தின் உள்ளீடாக ஓர் புனிதத்தன்மை இருந்துகொண்டே இருக்கிறது. அதை மொழியில் வெளிப்படுத்துவது சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனாலும் அந்த அசாத்தியத்தை வார்த்தைகளில் சாத்தியப்படுத்தி இருக்கிறார் பத்தாய். அம்மா, வேசி இருவருக்கும் நாம் கொடுக்கும் உடலளவிலான அடையாளங்கள் வெவ்வேறாக இருக்கிறது. இரண்டும் ஒரே உடலில் தான், ஒரே சதையில் தான் இருக்கிறது என்கிறார் பத்தாய். இன்னும் அறிவதற்கு இவருடைய Ma Mére என்ற புத்தகத்தை படிப்பதன் மூலம் நாம் Eroticism என்பதற்கான இவருடைய விடுதலை, ஆன்மீக கலந்த எண்ணங்களை அறியமுடியும்.

இன்னும் நிறைய பேசிக்கொண்டே இருக்கலாம், இப்புத்தகம் அவ்வளவு பேசுகிறது. கண்டிப்பாக வாங்கிப் படியுங்கள். எப்படிப் பார்த்தாலும் எல்லாமே இவற்றில் கதைகள், கதைகள், கதைகளே. அதுவும், நமக்கு பரிச்சசயமில்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர்களின் கதைகள்.

இதிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள், ” அந்தக் கடுமையான நிசப்த உலகில் ஒரு நாள் என்பது ஒரு வருடம். விளக்கு கிடையாது. வெளிச்சம் கிடையாது. புத்தகம் கிடையாது. எதுவுமே கிடையாது. நாள் பூராவும் உணவைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்போம். ஏனென்றால், உணவும் கிடையாது. எனவே நான் என் குடும்பத்தினருக்கு ஒவ்வொரு இரவும் ஒரு கதை கூற ஆரம்பித்தேன். அப்படியே பதினோரு ஆண்டுகள் கூறினேன். இந்தக் கதைகளினூடாகவே சிறையிலிருந்தும் தப்பிக்க வழி கிடைத்தது. – Malika Oufkir ( சிறையனுபவ வரிகள்)

மெதூஸாவின் மதுக்கோப்பை ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் கிடைக்கிறது.