பூஜா ஹெக்டேயும் கலாச்சார மேட்டிமை வாதமும் (கட்டுரை வடிவிலான சிறுகதை)

Image

Madras Elite Club என்று ஒரு க்ளப் உள்ளது.  பணக்காரராகவோ அதிகாரம் உள்ளவராகவோ சினிமா துறையைச் சேர்ந்தவராகவோ இருப்பதால் மட்டும் இதில் உறுப்பினராகி விடலாம் என்று நினைத்தால் முடியாது.  ஒரு வருட காலம் எலீட் க்ளப் பக்கம் போய்க் கொண்டிருந்தால் உங்கள் நடையுடை பாவனைகளை அவதானித்து, பிறகு உறுப்பினருக்கான காத்திருப்போர் பட்டியலில் சேர்ப்பார்கள்.  முக்கியமான விஷயம், மத அடையாளங்களை அணிந்திருக்கக் கூடாது.  சீக்கியர்களின் தலைப்பாகைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.  அது கூட ரொம்பப் பெரிதாக இருக்கக் கூடாது.  தாடிக்கு அனுமதி உண்டு.  ஆனால் ஒஸாமா பின் லாடன் மாதிரி இருக்கக் கூடாது.  பொதுவாக, பார்த்தவுடனேயே நீங்கள் ஒரு elite என்று தெரிய வேண்டும்.  உங்களுடைய பொருளாதார நிலை பற்றி அவர்கள் கவலைப்படுவது கிடையாது.  க்ளப்பில் ஒரு ஓவியர் உறுப்பினராக இருக்கிறார்.  ஆட்டோவில்தான் வந்து இறங்குவார்.  அதனால் நீங்கள் ஒரு தாலுகா ஆஃபீஸ் குமாஸ்தாவாகக் கூட இருக்கலாம்.  நடை உடை பாவனைதான் முக்கியம்.  மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, அதிர்ந்து பேசக் கூடாது.  நான் அந்த க்ளப்பில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறேன்.  என்னுடைய பல பணக்கார நண்பர்களுக்கு அங்கே இடம் கிடைக்காமல் இன்னமும் காத்திருப்போராகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். 

ஒருமுறை என்னுடைய ஒரு பணக்கார நண்பர் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருந்தார் என்று உள்ளே அனுமதிக்கப்படவில்லை.  ஒருமுறை ஒரு நண்பர் pointed shoe போட்டு வரவில்லை என்பதற்காக அனுமதி மறுக்கப்பட்டார்.  ஷூவிலும் பாய்ண்டட் ஷூதான் போட வேண்டும்.  இன்னொரு முறை என் நண்பர் ஒருவர் காஃபி ஆர்டர் கொடுத்து விட்டு “ஷுகர் கம்மி” என்று சொன்னார்.  சிப்பந்தி மிகவும் பணிவாக “ஷுகர் தனியாகக் கொடுக்கப்படும் சார்” என்றார்.  என்னோடு வந்திருந்தவர் பெரும் செல்வந்தர்.  ஆனால் நட்சத்திர விடுதிகளுக்குச் சென்றிராதவர் போலும்.  சரவண பவனில் சொல்கிறாற்போல் சொல்லி விட்டார்.  காஃபி முன்னூறு ரூபாய் விலை இருந்தாலே அந்த ஸ்தலங்களில் ஷுகர் கம்மி என்று வாயைக் காண்பிக்கக் கூடாது.  அதற்கென்று விலையைப் பார்த்து விட்டா ஆர்டர் பண்ண முடியும் என்றும் கேட்கக் கூடாது.  இதெல்லாம் பொதுவாக நம் சுரணையுணர்விலேயே வந்து விட வேண்டும். இடத்தைப் பார்த்தால் தெரியாதா?  பார்க் ஷெரட்டனில் காஃபி நூறு ரூபாயா இருக்கும்? 

என் நண்பர் ஒருவர் – செல்வந்தர்தான் – என்னையும் அந்த க்ளப்பில் சேர்த்து விடுங்கள் என்றார்.  எடுத்த எடுப்பில் முடியாது என்று மறுத்து விட்டேன்.  ”என்ன சாரு இது அநியாயம்?  முயற்சியே பண்ணாமல் இப்படி நிர்த்தாட்சண்யமாகச் சொல்கிறீர்கள்?  என்னிடம் என்ன இல்லை சொல்லுங்கள்?” என்றார். 

”எலீட் மனநிலை உங்களுக்குக் கொஞ்சமும் கிடையாது” என்றேன்.

“ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?”

“அம்பது சொல்லலாம்.  ஒன்றே ஒன்று இப்போதைக்கு…  நீங்களும் நானும் முப்பது வருட நட்பு.  ஆனால் நாம் இருவரும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போய்க் கொண்டது கிடையாது.  இல்லையா?  அப்படி இருக்கும்போது சென்ற ஆண்டு நீங்கள் கட்டிய புது வீட்டுக்கு அழைத்தீர்கள்.  நாம் நம்முடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறோம்.  அது எங்காவது மண்டபத்தில் நடக்கும்.  ஆனால் வீட்டுக்கு வந்ததில்லை, போனதில்லை.  புது வீட்டு விசேஷத்துக்கும் நான் வரவில்லை.  அதனால் தனியாக ஒருநாள் காலை உணவுக்கு அழைத்தீர்கள்.  சாப்பிட்டதும் எனக்குத் தேநீர் கொடுத்தீர்கள்.  எனக்குத் தேநீரே பிடிக்காது.  நீங்கள் கேட்கவே இல்லை.”

”நீங்கள் சொல்லியிருக்கலாமே சாரு?”

“பார்த்தீர்களா, மீண்டும் தோல்வி அடைகிறீர்கள்.  நான் சொல்வதை இப்போதும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.  ஒரு வீட்டுக்கு விருந்தினராகப் போய் விட்டு நான் எப்படிக் கேட்டு வாங்கிச் சாப்பிட முடியும்?  காஃபி கொடுக்காதது தப்பு இல்லை.  என்னிடம் கேட்காமல் டீ கொடுத்ததுதான் தப்பு.  அதிலும் பயங்கரமான சர்க்கரை.  பானகம் மாதிரி இருந்தது.  இதனால்தான் நான் எந்த நண்பர்களின், சொந்தக்காரர்களின் வீடுகளுக்கும் செல்வதில்லை.”

இதெல்லாம் எனக்கு இன்று காலையில் ஒரு தோழி ஒரு மலையாள நடிகை பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது ஞாபகம் வந்தது.  தோழி சொன்னாள், அவள் ஒரு பேரழகி என்று.  நான் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை என்பதால் ஒன்றும் பேச முடியவில்லை.  ஆனால் தோழி அதோடு நிறுத்தவில்லை.  பூஜா ஹெக்டே பற்றியும் ஒப்பிட்டு அந்தப் பூஜா ஹெக்டே இந்த மலையாள நடிகையின் கால் தூசு பெற மாட்டாள் என்றாள்.  இடுப்பு வரை தொங்கும் முடி என்றும் சொன்னாள்.  எனக்கு இடுப்பு என்றதும் அவளுடைய அடுத்த வார்த்தையைக் கேட்பதற்குள் வேறு ஏதேதோ எண்ணங்கள் ஆக்ரமிக்க ஆரம்பித்து விட்டன.  இப்போதெல்லாம் பெண்கள் சேலை கட்டுவது அரிதாகி விட்டதால் இடுப்பு என்ற சமாச்சாரமே இல்லாமல் ஆகி விட்டதாக எனக்கு ஓர் எண்ணம்.  ஏனென்றால், வெறும் ஜட்டி பிராவோடு பார்த்தால் இடுப்பில் எந்த அழகும் இல்லை.  புடைவை கட்டி, இடுப்பு தெரிந்தால்தான் அழகு.  இப்போது பொதுவாக சுடிதார், கவுன், ட்ரெஸ், ஜீன்ஸ்-டீ ஷர்ட் என்று வந்து விட்ட பிறகு இடுப்பு என்பதே obsolete ஆகி விட்டது அல்லவா?  தோழி அதோடு நிறுத்தவில்லை.  ஷாருக்கும் அப்படித்தான் அபிப்பிராயப்படுகிறார் என்றாள். எப்படி, இடுப்பு என்பதே இல்லாமல் ஆகி விட்டது என்றா?  சீ, அந்த மலையாள நடிகைக்கு முன்னால் பூஜா ஹெக்டே ஒன்றுமே இல்லை என்று. ஓ, இந்தக் கதைக்காக ஷாருக்கின் பெயரை மாற்றியிருக்கிறேன் என்பதால் உங்களுக்கு ஷாருக் என்றால் யார் என்று புரியாது இல்லையா?  ஷாருக் பற்றிய சுருக்கமான அறிமுகம்:  ஷாருக் பற்றி எனக்குமே அதிகம் தெரியாது.  அவரது நாவல்களை நான் இன்னும் படித்ததில்லை.  ஆனால் முகநூலில் அவரது பதிவுகள் பெரும்பாலும் எலீட் க்ளப்புக்கு நேர் எதிராக இயக்கம் காட்டுபவர் எனப் புரிய வைக்கிறது.   ”கமல்தான் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகன், இதை ஏற்காதவன் கண்ணில்லாதவன்.  ஜெயமோகனே உலகின் தலை சிறந்த எழுத்தாளன்” என்பது போன்ற தெளிவான சிந்தனைகளை தினந்தோறும் முகநூலில் ஏற்றுபவ ஷாருக்.  இப்படி எந்த விஷயத்தைப் பற்றியும் தீர்க்கமாகவும் தெளிவாகவும் சிந்திப்பவர்களை எலீட் க்ளப் ஏற்காது.  அப்டியா இப்டியா என்ற மதில் மேல் பூனைகளை மட்டுமே உறுப்பினராக ஏற்கும்.    

நடைப் பயிற்சியை சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து  கூகிளில் தேடினேன்.  கொஞ்ச நேரம் தோழி சொன்ன கேரள நடிகையின் பெயர் என்ன என்று யோசித்தேன்.  மலையாள நடிகைகள் என்று போட்டுப் பார்த்தேன்.  மியா ஜார்ஜ், மடோன்னா செபாஸ்டியன் என்று ஏதேதோ பெயர்கள் வந்தன.  திரும்பவும் விடாமல் தேடியதில் சித்தாரா என்று ஒரு பெயர்.  ஆ, இந்தப் பெயர்தான் சொன்னாள் தோழி.  ஆனால் புகைப்படத்தில் வந்தது ஒரு பழைய நடிகை. ஓ, முன்பு சித்தாரா என்ற பெயரில் ஒரு நடிகை இருந்திருக்க வேண்டும்.  இந்தப் பெண்மணியையா பேரழகி என்றாள் நம் தோழி?  இந்தப் பெண்மணியோடு ஒப்பிட்டாலா பூஜா ஹெக்டே ஒன்றுமேயில்லை என்று சொன்னார் ஷாருக்?  ம்ஹும்.  நாம் தேடியதில்தான் ஏதோ தவறு இருக்க வேண்டும்.  அப்போதுதான் ஞாபகம் வந்தது, சித்தாராவுக்கு முன்னதாக வேறு ஏதோ சொன்னாளே?  ஆ, ஞாபகம் வந்து விட்டது.  அனு சித்தாரா.  

அடப் பாவி.  எலீட் க்ளப்புக்குள் என் தோழியோடு இதுவரை சென்றதில்லை.  அதற்கு ஏதும் சந்தர்ப்பம் அமையவில்லை.  இனிமேல் எப்போதும் முடியாது என்று தோன்றி விட்டது.  இதெல்லாம் அழகா?  இதற்குப் பெயர் அழகா?  இதில் பூஜா ஹெக்டே அனு சித்தாராவின் கால் தூசு பெற மாட்டாளாம்.  நல்லது.  வல்லீர்கள் நீங்களாகவே இருந்து கொள்ளுங்கள். 

சாரதிக்கு உடனடியாக ஒரு போன் போட வேண்டும்.  போன் போட்டால் எடுக்க மாட்டான்.  வாய்ஸ் மெஸேஜாக அனுப்பி விட வேண்டியதுதான்.  அவனுக்கு நிச்சயம் எலீட் க்ளப்பில் இடம் உண்டு என்ற நற்செய்தியை அவனுக்கு எப்படியாவது சொல்லி விடுங்கள்.  என்ன, உள்ளே வரும்போது நெற்றியில் துலங்கும் அடையாளத்தை மட்டும் கொஞ்சம் அழித்து விட வேண்டும்.  மற்றபடி எலீட் க்ளப்புக்கு ஃபிட்டான ஆள் சாரதிதான்.

எப்படி என்கிறீர்களா? பூஜா ஹெக்டேதான் அழகின் இலக்கணம்.  அவளுக்கு அடுத்தபடிதான் மற்றவர்கள்.  இப்படிச் சொல்வதே எலீட் க்ளப்பின் விதிக்கு எதிரானதுதான்.  ஆனால் விதிக்கு விலக்கு உண்டுதானே?  நம் பூஜா ஹெக்டே விதி, விலக்கு எல்லாவற்றையும் தாண்டியவள்.  என் கவி நண்பன் ஷங்கர ராம சுப்ரமணியன் தமிழ் இந்து தினசரியில் கவிப் பேரரசுவின் பிறந்த நாள் அன்று அறிவித்தான், ஒரு யுக சந்திப்பில்தான் இப்படிப்பட்ட கவிஞர்கள் தோன்றுகிறார்கள் என.  அதேபோல் நான் ஒரு குன்றின் மீது ஏறி நின்று சொல்கிறேன், எலீட் க்ளப் நண்பர்களே, ஒரு யுக சந்திப்பில்தான் உலகப் பேரழகி தோன்றுகிறாள்.  இந்த யுகத்தில் அவள் பெயர் பூஜா ஹெக்டே.