சார்பட்டா பரம்பரை

நேற்று சார்பட்டா பரம்பரை பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் விரிவாக எழுத நேரமில்லை. இன்னொரு காரணம், கருந்தேள் ராஜேஷ் போன்ற நண்பர்கள் எழுதுவதே என் அபிப்பிராயத்தை ஒத்திருப்பதால் எதற்கு நேர விரயம் என்று நினைக்கிறேன். காலா, கபாலி என்ற இரண்டு பாவங்களை ரஞ்சித் இந்தப் படத்தின் மூலம் கழுவி விட்டார் என்று ஒரு நண்பர் முகநூலில் எழுதியிருந்தார். எனக்குமே அப்படித்தான் தோன்றியது. மெட்ராஸ் என்ற படம் எவ்வளவு சுவாரசியமாக இருந்ததோ அதே சுவாரசியம் சார்பட்டாவிலும். சொல்லப் போனால் அதை விட அதிகமாக. இன்னும் கூட ஒன்றிரண்டு முறை பார்க்கலாம். இதில் nuances அதிகம்.

டாடியாக நடித்திருக்கும் ஜான் விஜயின் நடிப்பைப் பார்ப்பது அத்தனை உற்சாகம். எம்.ஆர். ராதாவையே திரும்பப் பார்ப்பது போல் இருந்தது. அதேபோல் டான்ஸிங் ரோஸாக நடித்திருக்கும் ஷபீரை வைத்து ரஞ்சித் இன்னொரு முழுப்படம் பண்ண வேண்டும். அவர் ஒரு நாயகன். முழுமையான நடிகன்.

ஆர்யாவுக்கு நான் கடவுள் மாதிரி சார்பட்டா. ஒரே ஒரு விஷயத்தில் ரஞ்சித் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஏதோ பிரிட்டஷ் இளவரசன் போல் தோற்றம் கொண்டிருக்கும் ஆர்யாவின் நிறத்தைக் கொஞ்சமாகவது வட சென்னைக்குத் தகுந்தாற்போல் மாற்றியிருக்கலாம். சாயம் அடித்து அல்ல என்பது ரஞ்சித்துக்குத் தெரியும். ஒரு வாரம் வெயிலில் காய்ந்தால் தோல் கருத்து விடும். அந்தக் காலத்து பிராமண கம்யூனிஸ்டுகள் தங்கள் தோல் நிறத்தை மாற்றிக் கொள்ள இந்த யுக்தியைப் பயன்படுத்திக் கொண்டதை நான் அறிவேன். படத்தில் ஆர்யாவின் மேட்டுக்குடித் தோற்றம் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. அவரது குத்துச் சண்டைக்காக ஏழு மாதம் உயிரை விட்டுப் பயிற்சி செய்தது போல் ஒரே ஒரு வாரம் வெய்யிலில் நின்றிருந்தால் தோல் மாறியிருக்கும். மெட்ராஸ் படத்திலும் கார்த்தி இப்படித்தான் தோற்றம் கொடுத்தார். ஆனால் மெட்ராஸில் அது ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமாகத் தோன்றவில்லை. ஆனால் சார்பட்டா வடசென்னை வாழ்வின் ஒரு கீற்றை அதன் எதார்த்தத்துடன் கொடுக்க எத்தனித்திருப்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஒரு சுவாரசியமான, கொஞ்சம் கூட அலுப்புத்தட்டாத பொழுதுபோக்குப் படம் சார்பட்டா. எந்த அளவுக்கு என்றால், ஒரு பாடல் காட்சியில் பச்சைக் கலர் சட்டை அணிந்து ஒருவர் ஆடுகிறார். மூன்று நிமிடத்தில் அது ஒரு முப்பது நொடி இருக்கலாம். அது தமிழ்ப்பிரபா என்று தெரியாமல் இருந்தால் கூட, அது யார்யா அந்தப் பச்சைக் கலர் சட்ட, அந்த ஆட்டம் போடுறான் என்று பார்வையாளர்கள் கேட்பார்கள். தமிழ்ப் பிரபா தான் ஒரு நிஜமான வடசென்னைக்காரன் என்று நிரூபித்திருக்கிறார், முப்பது நொடியில்.

இப்படி ஒவ்வொரு பாத்திரத்துக்கும் தனித்துவம் இருக்க வேண்டும் என்று செதுக்கியிருப்பதற்காக பா. ரஞ்சித்துக்குப் பாராட்டுகள்.

சந்தோஷ் நாராயணன். அவரைத் தவிர இது போன்ற படங்களுக்கு இப்படி இசை அமைக்கக் கூடியவர்கள் தமிழில் இல்லை. இந்தக் கதைக்கு இப்படித்தான் இசை இருக்க வேண்டும்.