பொதுவாக மாணாக்கர்தான் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவார். ஆனால் சீனி சொல்லும் கதைகளைப் பார்த்தால் நானே அவரது வாழ்க்கையை எழுதி விடுவேன் போலிருக்கிறது. அப்படிப்பட்ட நம்ப முடியாத கதைகள். இதையெல்லாம் நீங்கள் நாவலாக எழுதலாமே என்பேன். “என் வாழ்க்கையைப் பற்றி நான் எழுதக் கூடாது என்று தீர்மானமான முடிவு எடுத்திருக்கிறேன், அதனால் நீங்கள் வேண்டுமானால் தாராளமாக எழுதிக் கொள்ளலாம்” என்று சொன்னார். பலமுறை சொல்லியிருக்கிறார். சீனியின் கதையை விட அவர் தந்தையின் கதை இன்னும் பல மடங்கு நம்ப முடியாதது. இத்தனைக்கும் அவர் ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர். ஒரே ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், நம்ப முடிகிறதா என்று பாருங்கள்.
அவர் (தந்தை) ஊர் மக்கள் அனைவரின் மரியாதைக்கும் உரிய ஆசிரியர். ரொம்பச் சின்ன ஊர் என்பதால் ஊர் மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்கும் ஆசான். கிட்டத்தட்ட ஒரு பீஷ்மர் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்குப் பிறந்த ஒரே மகனை – ஆதி திராவிடர் பள்ளியில் படிக்க வைக்கிறார். ஆசாமி ஸ்ரீவைஷ்ணவர். தென்கலை. இதுதான் கதையில் ரொம்ப முக்கியம். இத்தனைக்கும் சீனியின் இரண்டு தங்கைகளும் மருத்துவர்கள். அதிலும் மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்தவர்கள். ஆக, சீனியின் தந்தை நம்ப முடியாத மனிதரா இல்லையா? சீனியும் மோசமில்லை. தந்தை எட்டு அடி என்றால், மகன் பதினாறு அடி. கல்யாணத்தின் போது சாவுக்கு அடிக்கும் பறைக் கொட்டு அடித்துக் கல்யாணம் பண்ணினவர். ஐயோ, ஏதோ புரட்சிக் கல்யாணம் என்று கற்பனை செய்து விடாதீர்கள். வேதியர் மந்திரம் முழங்க நடந்த ஒரு பாரம்பரியமான அய்யங்கார்க் கல்யாணம்தான். பெண்ணும் அய்யங்கார்தான். ஆனாலும் ஒரு பக்கம் பறைக் கொட்டு ரகளை நடந்து கொண்டிருக்கிறது. மண்டபத்துக்கு வெளியே தீயை மூட்டி பறைக்கு சூடு ஏற்றிக் கொண்டிருந்தார்கள் இசைக் கலைஞர்கள், கைலியை அண்ட்ராயர் தெரிய வழித்துக் கட்டிக் கொண்டு, வாயில் துண்டு பீடியுடன்.
எல்லாம் முழு நாவலுக்குரிய சமாச்சாரங்கள். என் வாழ்வை நான் எழுத மாட்டேன் என்று சொல்லி விட்டார். அதே கருத்தில்தான் கடந்த பத்து வருடமாக இருக்கிறார். அதனால் அந்தக் கருத்து மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும் நான் சீக்கிரம் எழுதி விட வேண்டும்.
என் வாழ்வில் சீனி போன்ற ஒரு புத்திசாலியை நான் இதற்கு முன் ஒரே ஒருவரைத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த நபர் ரொம்பக் கெட்டவர். தன் புத்தியைக் கொண்டு அதிகாரத்தையும் பணத்தையும் புகழையும் ரொப்பப் பார்ப்பவர். அதில் கூட ஒன்றும் தப்பில்லை. அப்படி ரொப்புவதற்காக எந்த நீதி நியாயமும் பார்க்க மாட்டார் என்பதுதான் முக்கியம். தனக்கு ஆதாயம் என்றால் சிசுவின் பிணத்திலும் நடந்து செல்வார். அதி புத்திசாலியான அவரும் அய்யங்கார்தான் என்பதால் எனக்கு அய்யங்கார்கள் மீது ஒரு தனிப்பட்ட பிரியம் ஏற்பட்டு விட்டது.
இந்த இடத்தில் நான் புத்திசாலித்தனம் என்று சொல்வதை street smartness என்று மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. அதுவும் இருக்க வேண்டும். அதே சமயம் intellectஉம் முக்கியம். பொதுவாக எழுத்தாளர்களிடம் இந்த ஸ்ட்ரீட் ஸ்மார்ட்னெஸ் இருக்காது. மகா தத்திகளாக இருப்பார்கள். நானே அதற்கு ஒரு உதாரணம். நான் என்ன செய்தாலும் அதில் ஒரு தப்பு இருக்கும். அதாவது அவந்திகாவின் பார்வையில். நானே அடிக்கடி சொல்வேன், நான் மூச்சு விடுவதைத் தவிர மற்ற எல்லாமே உன்னைப் பொறுத்தவரை தப்புதாம்மா என்று. அதோடு அடங்கி விடுவாள். புத்திசாலியாக இருப்பவர்கள் எழுத்தாளர்களாகவோ – அவ்வளவு ஏன் – கொஞ்சமாவது சுரணையுணர்வு உள்ளவர்களாகவோ இருந்து நான் கண்டதில்லை. அது வேறு, இலக்கியமும் சுரணையுணர்வு வேறு என்றபடிதான் இருந்து வருகிறது. இதற்கு நான் கண்ட ஒரே விதிவிலக்கு, சீனிதான். எழுத்துக்கு எழுத்து. புத்திசாலித்தனத்துக்கு புத்திசாலித்தனம்.
அய்யங்கார் புராணத்தை அளந்து கொண்டிருந்தேன் இல்லையா? அதிலும் அவந்திகா புராணம். தினந்தோறும் அவள் பண்ணும் அக்குறும்புகளைப் பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் என் அய்யங்கார்ப் பிரியம் ஜாஸ்தியாகிக் கொண்டே போகிறது. இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்திலும் எனக்கான மீன் வேட்டையை நிறுத்த மாட்டேன் என்கிறாள். ஒருநாள் நண்டு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிறதும்மா என்றேன். எனக்கு நண்டு ரொம்ப இஷ்டம். அவளுடைய தோழி பழவேற்காட்டில் இருக்கிறார். அவர் அங்கே உள்ள ஏரியில் மீன் வாங்கப் போவாராம். (அப்போதுதான் எனக்குப் பழவேற்காட்டில் ஏரி இருப்பதே தெரியும்!) அவரிடம் சொல்லி ஐஸில் வைக்காத, அப்போதே பிடித்த மீனும் நண்டுமாக வாங்கச் சொல்லி, ஒரு ஆள் மூலமாகக் கொடுத்தனுப்பச் சொல்லி ஏற்பாடு செய்திருக்கிறாள் அவந்திகா. முந்தாநாள் கதை இது. மட்டுமல்லாமல், அவளைப் போல் மீன் குழம்பு, நண்டுக் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, கறிக் குழம்பு செய்ய ஒருத்தர் பிறந்துதான் வர வேண்டும். மதுரையே அவளிடம் பிச்சை வாங்கும். நான் சாப்பாட்டு விஷயத்தில் பெரிய பயங்கரவாதி என்பது என் நண்பர்களுக்குத் தெரியும். என்னிடம் பாராட்டு வாங்குவது ரொம்பக் கஷ்டம். ஒரு தோழியின் மாமியார் கொடுத்த சான்றிதழை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். ஆப்பம் தேங்காய்ப் பால். எனக்கு ரெண்டுமே உயிர். மாமியார்தான் அன்றைய சமையல். ஆப்பம் வந்தது. இன்னும் மூணு ஜென்மம் எடுத்தாலும் அப்படி ஒரு கொடூரக் கொலைகார ஆப்பத்தை நான் மறக்க மாட்டேன். வாந்தி வருகிறது. ஒவ்வொரு வாய்க்கும் வாந்தி. தோழியின் அம்மா என்றால் கூட தைரியமாகச் சொல்லி விடுவேன். தோழியின் மாமியார். அரை ஆப்பத்தைச் சாப்பிட்டு விட்டு மாமியார் கிச்சனுக்குள் சென்றதும் மீதி ஆப்பத்தை அப்படியே கொண்டு போய் கக்கூஸில் போட்டு விட்டேன். மாமியார் ஐயர் சமூகம். போன தலைமுறை. புரியாதா? (கோபத்தை உள்ளுக்குள் கொண்டு) சிரித்தபடியே என்னிடம் “உங்களுக்கெல்லாம் சமைத்துப் போட நம்மால் ஆகாதப்பா சாமி” என்றார்.
அப்புறமாக தோழியிடம் என்ன விஷயம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். எனக்குத் தூக்கமே வரவில்லை. ஆப்பத்தை எப்படி ஒருவர் இத்தனைக் கொலை பாதகமாகச் செய்ய முடியும்? தோழி சொன்னாள், அது ஒண்ணும் இல்லப்பா, ஆப்ப மாவில் தோசை மாவைக் கலந்து விட்டாராம்.
அந்த ஆப்பத்தையும் தேங்காய்ப் பால் என்ற அந்த திரவத்தையும் பரப்பிரம்மத்தைப் போல் – சரியாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு அகோரி பாபாவைப் போல் சாப்பிட்டுக் கொண்டிருந்த தோழி ப்ளஸ் அவள் மகன் இருவரையும் நிற்க வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ண வேண்டும் போல் இருந்தது. அகோரிகளுக்கான முதல் பரீட்சையே அதுதானாம். கங்கையில் மிதக்கும் பிணத்தின் மாமிசத்தையும் சமயங்களில் நரகலையும் கூட சாப்பிட வேண்டுமாம். அரே பாப்ரே. என் வாழ்வில் இரண்டு அகோரிகளைப் பார்த்து விட்டேனடா!
ஏன் உன் மாமியார் புத்தி அப்படிப் போனது? இப்படியா ரெண்டு மாவையும் ஒண்ணா சேர்ப்பார்கள்?
ஆள் எண்ணிக்கை ஜாஸ்தியாகி விட்டதை சரிக்கட்டுவதற்காகச் செய்தாராம்.
அதற்கப்புறம் பல மாத காலம் நான் நடைப் பயிற்சி செய்யும் இடத்தையே மாற்றிக் கொண்டேன். அவர்கள் வீட்டுப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அப்படி சாப்பாட்டு விஷயத்தில் நான் ஒரு பயங்கரவாதி. அப்படிப்பட்ட நான்தான் சொல்கிறேன். அவந்திகா மாதிரி அசைவம் இந்த ஜென்மத்தில் நான் சாப்பிட்டதில்லை.
இத்தனைக்கும் வெறும் வாசனையை வைத்துக் கொண்டேதான் சமைக்கிறாள். அவள் அதி தீவிர சைவம்.
அப்புறம் இருக்கவே இருக்கிறார்கள் பத்ரி சேஷாத்ரி, சுந்தர் பிச்சை எல்லாம். இவர்களையெல்லாம் பார்த்துப் பார்த்துத்தான் அய்யங்கார்கள் மேல் ஒரு அபிமானம்.
ஆனால் இதை வெளியே சொன்னால் அய்யங்கார்களே அடிக்க வருகிறார்கள். குறிப்பாக, ராகவன். ஸ்ரீ ராகவன். எழுத்தாளரும் அடிக்கத்தான் வருவார் என்று நினைக்கிறேன். இங்கே வாருங்கள், எத்தனை மோடுமுட்டி அய்யங்கார் வேண்டும், காண்பிக்கிறேன் என்கிறார்கள். இருக்கலாம். ஆனால் உச்ச பட்சத்தில் சஞ்சாரம் செய்யும் கேஸெல்லாம் அய்யங்காராகவே இருக்கிறது, கணித ராமானுஜம் மாதிரி.
சமீபத்தில் ஒரு சம்பவம். எனக்கு ஒரு சர்வதேச நிறுவனத்திலிருந்து பணம் வர வேண்டும். அதற்கு அவர்கள் ஒரு இன்வாய்ஸ் அனுப்பியிருந்தார்கள். அதைப் பூர்த்தி செய்து அனுப்பினால் பணம் என் கணக்கில் சேர்ந்து விடும். எல்லாவற்றையும் – என் பெயர், அக்கவுண்ட் நம்பர் உட்பட அவர்களே பூர்த்தி செய்து விட்டார்கள். Invoice submission என்று இருந்தது. புத்தியைப் பயன்படுத்தி அதை அழுத்தினேன். ஒரு பக்கம் திறந்தது. எல்லா விவரமும் சரியாக இருந்தது. நானே என் புத்திசாலித்தனத்தை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன். ஒரே ஒரு கட்டம் மட்டும் பூர்த்தி செய்யப்படாமல் இன்வாய்ஸ் நம்பர் கேட்டது. தெரியவில்லை. அது தெரிந்தால்தான் அனுப்ப முடியும். சீனிக்கு அனுப்பி வைத்தேன். அவர் இது போன்ற குழப்பங்களை என்னோடு டீம் வியூவரில் வந்து நொடிகளில் தீர்த்து வைப்பது வழக்கம்.
பிறகு ஸ்ரீராமைக் கேட்டேன். கேட்டது இருபதாம் தேதி. இன்வாய்ஸை அனுப்பக் கடைசி நாள் இருபத்து இரண்டு என்று அந்த நிறுவனத்திலிருந்து போன் போட்டுச் சொல்லியிருந்தார்கள். எனக்கு எதையுமே கடைசி நாள் வரை வைத்துக் கொண்டிருக்கப் பிடிக்காது. முதலிலேயே அனுப்பி விட வேண்டும். அது ஒரு நோய் மாதிரி எனக்கு. ஸ்ரீராமுக்கும் புரியவில்லை. அந்த நிறுவனத்தில் என் நண்பர் ஒருவர் பணி புரிகிறார். அவரைக் கேட்டேன். அவருக்கும் புரியவில்லை. அந்த நிறுவன அதிகாரி ஸ்வேதாவை அழைத்துச் சொன்னேன். ”இன்று கொஞ்சம் பிஸி. நாளை அழையுங்கள், சொல்கிறேன்” என்றார்.
”இல்லை, அது இல்லை பிரச்சினை. நாளை நீங்கள் விளக்கினாலும் எனக்குப் புரியாது. எனக்கு இது போன்ற தொழில்நுட்ப விஷயங்களெல்லாம் புரிவதில்லை. என் நண்பர் டாக்டர் ஸ்ரீராம் நாளை உங்களுக்கு போன் செய்வார். அவரிடம் சொல்லுங்கள். அவர்தான் என் கணக்கு வழக்கெல்லாம் கவனித்துக் கொள்கிறார்.”
ஸ்ரீராமிடம் விஷயத்தை விளக்கி ஸ்வேதாவைத் தொடர்பு கொண்டால் அவர் சொல்வார் என்று சொன்னேன். இதற்குள் சீனி அந்த இன்வாய்ஸ் விஷயத்தை கவனிக்கலாமா என்று கேட்டார். “வேண்டாம் சீனி, ஸ்ரீராம் கவனிக்கிறார்” என்றேன்.
மறுநாள் மாலை வரை ஸ்ரீராமுக்கு மருத்துவமனை வேலை. ஐந்து மணிக்கு ஸ்ரீராமுக்கு ஃபோன் போட்டேன். எடுக்க முடியாத சூழல் போல. மெஸேஜ் வந்தது. ”ஸ்வேதாவுக்கு ஃபோன் பண்ணினேன். எடுக்கவில்லை.”
இப்படி ஒரு பதிலா? உடனே ஸ்வேதாவுக்குச் சற்றே கோபமாக ஒரு மெஸேஜ் தட்டினேன். ஸ்ரீராம் போன் பண்ணவில்லை என்று ஸ்வேதாவிடமிருந்து பதில். எல்லாமே தகவல் பரிமாற்றக் குழப்பம். ஸ்ரீராம் போன் பண்ணினது இந்த அம்மணிக்குத் தெரியவில்லை. ஸ்ரீராமாவது இன்னொரு ‘கால்’ அடித்திருக்கலாம். அவருக்கு என்ன பிரச்சினையோ? கொரோனா காலத்தில் மருத்துவமனையில் பணி புரிவதே ஒரு கொடுமை.
அப்போதுதான் ஸ்ரீராமிடம் இந்த வேலையை ஒப்படைத்திருக்கக் கூடாது என்ற யோசனை ஓடியது. யாரிடம் எந்தெந்த உதவியைக் கேட்பது என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். நான் எழுதிக் கொண்டிருக்கும் ஔரங்கசீப் நாவலில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்று சீனியிடம் மட்டும்தான் கேட்க முடியும். அவரிடம் போய் ஒரு கிலோ காலா மீன் ஆர்டர் பண்ணுங்கள் என்று மெஸேஜ் அனுப்பினால் அவர் அந்த மெஸேஜைப் படிக்கவே பன்னிரண்டு மணி நேரம் ஆகும். அதற்கென்று எனக்கு ஒரு அன்னபூரணி இருக்கிறாள். அதேபோல் எனக்கு ராஸ லீலா முதல் பதிப்பு எப்போது வந்தது என்று அவசரமாகத் தெரிய வேண்டும். என்னிடம் புத்தகம் இல்லை. இதை நான் காயத்ரியிடம் கேட்க முடியுமா? காரியம் கெட்டு விடும். எப்படிக் கெடும் என்று சொன்னால் அவளிடம் கேட்க கூடியதை இன்னும் ஆறு தினங்களுக்குக் கேட்க முடியாது. அவளுக்குக் கோபம் வந்தால் ஆறு தினங்கள் மௌனம் காப்பாள். ஆனால் அவளிடம் கேட்கக் கூடியது ஏராளம் உண்டு. மொழிபெயர்ப்பு, ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷில் சந்தேகம். ஸ்ரீராமிடம் கேட்டேன். மருத்துவமனையில்தான் இருந்தார். ராஸ லீலா முதல் பதிப்பு 2006 என்றார். கண்ணிமைக்கும் நேரம்.
அப்புறம்தான் ஸ்ரீராம் மெதுவாகச் சொன்னார். ஸ்வேதாவுக்கு அவர் ஒன்றரை மணி நேரம் முயற்சி செய்திருக்கிறார். கிடைக்கவில்லை. அவ்வளவு நேரம் ஸ்வேதாவின் ஃபோன் எங்கேஜ்டாக இருந்திருக்கிறது. ராகவனுக்கு ஃபோன் போட்டு விஷயத்தை விளக்கினேன். ஸ்வேதாவின் உயர் அதிகாரி ஆங் சாங்கைத் தொடர்பு கொள்ளுங்கள், காரியம் சித்திக்கும் என்றார். ஆங் சாங்குக்கு மெஸேஜ் தட்டினேன். உடனே பதில் வந்தது. யார் சொன்னது, கடைசித் தேதி அது இது என்று. ஒரு கடைசித் தேதியும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் இன்வாய்ஸை அனுப்புங்கள். இதோ கொஞ்ச நேரத்தில் ஸ்வேதா உங்களைத் தொடர்பு கொள்வார். இது ஆங் சாங்.
கொஞ்ச நேரத்தில் ஸ்வேதா ஸ்ரீராமுக்கு ஃபோன் செய்து ஒரு ஃபோன் கூட செய்ய முடியாமல் அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகள் கழுத்தை நெறிப்பதன் பாடுகளைப் பற்றி ஒரு பாட்டம் அழுதிருக்கிறார்.
என் வாழ்வில் ஆறு மணி நேரம் காணாமல் போயிற்று. இதற்கு அந்தப் பணம் ஈடா என்று யோசித்தேன். சீனி ஃபோனில் வந்தார். இரவு மணி பதினொன்று. எல்லாவற்றையும் சொன்னேன். ”ஏங்க, இதுக்குத்தானே சொன்னேன், நான் பண்ணித் தரேன்னுட்டு?” என்று கடிந்து கொண்டார்.
ஏன் நான் சீனியிடம் கேட்கவில்லை? எல்லாவற்றுக்குமா ஒருத்தரையே டார்ச்சர் பண்ணிக் கொண்டிருப்பது என்ற நல்லெண்ணம்தான். டீவ் வியூவரில் வந்தார். இன்வாய்ஸ் நம்பரில் ஒன்று எனப் போடுங்கள் என்றார். போட்டேன். இன்வாய்ஸ் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது என்று வந்தது. சப்மிட் என்ற பட்டனைத் தட்டினேன். சக்ஸஸ் என்று வந்தது.
அடப் பாவி. சீனி, இன்வாய்ஸ் நம்பர் ஒன்று என்று உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டேன்.
அந்தப் படிவத்தின் கீழே இன்வாய்ஸ் நம்பர் என்று போட்டிருக்கிறதா?
அட, ஆமாம்.
அதில் ஏதாவது நம்பர் தெரிகிறதா?
அட, ஆமாம். ஒன்று!
அதுதான் இன்வாய்ஸ் நம்பர். கம்பெனி அமெரிக்கர்களுடையது. இன்வாய்ஸ் சப்மிஷனை எத்தனை சுலபமாக்க முடியுமோ அத்தனை சுலபமாக்கியிருக்கிறான். ஆனால் இந்தியர்களுக்கு அது புரியவில்லை. நான் என் அலுவலகத்தில் இது மாதிரி பத்தாயிரம் கேஸ் பார்த்திருக்கிறேன். எரர் என்று வரும். என் அஸிஸ்டெண்ட் வந்து எரர் காட்டுது சார் என்பான். அந்தப் பக்கத்திலேயே எரரை எப்படி சரி செய்வது என்று குழந்தைக்குச் சொல்வது போல் சொல்லியிருப்பான். அதை முயற்சியே செய்யாமல் என்னிடம் கொண்டு வந்து நொட்டுவான்கள்.
நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது சீனியின் புத்திசாலித்தனத்தின் மீது எனக்கு இருந்த பிரமிப்பு மேலும் அதிகரித்து விட்டது.
அமேஸான் பென் டு பப்ளிஷ் போட்டி முடிவு விழா. நான் நடுவர்களில் ஒருவன். ரேபிட் ஃபயர் கேள்வி விளையாட்டு ஆரம்பித்தது. முதல் நடுவரைக் கேட்டு விட்டார்கள்.
இதை நாம் எழுதியிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்த புத்தகம் எது?
நீங்கள் எழுத நினைக்கும் வாழ்க்கை வரலாறு யாருடையது?
உங்கள் வாழ்க்கை வரலாற்றுக்கு வைக்கக் கூடிய தலைப்பு என்ன?
மற்ற இரண்டு கேள்விகளும் ஜுஜுபி. ஊதித் தள்ளி விடலாம். உங்கள் வீடு தீப்பற்றிக் கொண்டால் எந்தப் புத்தகத்தை எடுத்துக் கொள்வீர்கள்? இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரை.
முதல் நடுவரிடம் கேட்டாயிற்று. அடுத்த நடுவரிடம் இந்தக் கேள்வி பதில் ஐந்து நிமிடம் ஓடும். அதற்குள் சீனியிடம் கேட்டு ஆலோசித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
எல்லாம் வர்ச்சுவல் நிகழ்வு என்பதால் கேமராவிலிருந்து தள்ளி வந்து சீனிக்கு போன் போட்டேன். நல்லவேளை எடுத்தார். முதலில் கேமராவிலிருந்து விலகுங்கள் என்றேன். நான் கேமராவிலேயே இல்லை என்றார். முதல் கேள்விக்கு மிலோராத் பாவிச் எழுதிய டிக்ஷனரி ஆஃப் கஸார்ஸ். வேண்டாம் என்றார் சீனி. இது உங்களுக்குப் பிடித்த புத்தகம்தான் என்றாலும் இந்தப் புத்தகம் பற்றி யாருக்குமே எதுவும் தெரியாது. உங்களுக்கும் விளக்குவதற்கெல்லாம் நீண்ட நேரம் கிடையாது. ஒரு நிமிடம்தான் கணக்கு. அதனால் எல்லோருக்கும் தெரிந்த, எல்லோரும் கனெக்ட் பண்ணிக் கொள்ளக் கூடிய, உங்களுக்கும் மிகவும் பிடித்த ஸோர்பா தெ க்ரீக் சொன்னால் நன்றாக இருக்கும். இதற்குத்தான் சீனி. நான் அவரிடம் ஸோர்பா பற்றி நூறு முறை பேசியிருப்பேன். ஆனால் தக்க சமயத்தில் ஞாபகம் வரவில்லை.
அடுத்த கேள்வி. மகாத்மா காந்தி என்றேன். நான் எழுத விரும்பும் வாழ்க்கைச் சரித்திரம். ரொம்ப மோசமான தேர்வு என்றார். உங்களுக்கு காந்தி பிடிக்கும். தெரியும். ஆனால் காந்தியின் சரிதத்தை யார் வேண்டுமானாலும் எழுதலாமே? சாரு மட்டுமே எழுதக் கூடிய ஒருவர் இருக்கிறார். என்னிடம் ஒரு ஐநூறு முறை சொல்லியிருப்பீர்கள்.
தெரியவில்லை. மறந்து விட்டேன்.
விக்தோர் ஹாரா. தன் இசைக்காகவே பினோசெத்தால் கொல்லப்பட்ட கலைஞன். சாந்த்தியாகோ நகரில் உங்கள் வழிகாட்டிக்கே அவரைப் பற்றித் தெரியாமல் நீங்கள்தானே அவரை அழைத்துச் சென்றதாகச் சொன்னீர்கள். அவர் கதையைத்தான் உங்களைத் தவிர வேறு யாராலும் எழுத முடியாது.
மூன்றாவது கேள்விக்கு எனக்கே பதில் தெரியும். எக்ஸைல். ஏற்கனவே வைத்தாகி விட்டது.
நான்காவது கேள்வி?
அது ஜுஜுபி. நானே சொல்லி விடுவேன்.
அது என்ன கேள்வி என்று சொல்லுங்கள். அதையும் பேசி விடுவோம். இன்னும் ரெண்டு நிமிடம் இருக்கிறது.
வேண்டாம் சீனி. அதை ஊதித் தள்ளி விடுவேன்.
நான்காவது கேள்விக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன்பு ம.வீ.ரா. தொகுத்த மஹாபாரதம் தமிழ் மொழிபெயர்ப்பு என்றேன். வீடு பற்றி எரியும் போது நம் பக்கத்துத் தெரு டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கக் கூடிய ஒரு புத்தகத்தைப் போயா காப்பாற்றி எடுத்துக் கொண்டு வர முடியும்? எங்குமே கிடைக்காத புத்தகமாக அல்லவா இருக்க வேண்டும்? முதலில் வந்த நடுவர் அந்தக் கேள்வியையே சரியாக வாங்கிக் கொள்ளாமல் அவருக்குப் பிடித்த புத்தகம் ஒன்றின் தலைப்பைச் சொன்னார். ஏதோ ரஸ்கின் பாண்ட் புத்தகம். அதை ஒரு சொடுக்கு சொடுக்கினால் கிண்டிலில் அடுத்த நிமிடம் படித்து விடலாம். ஒருவேளை ரஸ்கின் பாண்ட் தன் கைப்பட எழுதின கையெழுத்துப் பிரதி என்றால் அதைக் காப்பாற்றலாம். மற்றபடி கிண்டிலில் கிடைக்கும் புத்தகத்தையா உயிரைப் பணயம் வைத்து எரியும் தீயிலிருந்து காப்பாற்றுவது?
நிகழ்ச்சி முடிந்து சீனியிடம் பேசினேன். சொதப்பி விட்டீர்களே சாரு என்றார். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அந்த நிகழ்ச்சியையே ஹைஜாக் பண்ணிக் கொண்டு போயிருப்பது போல் ஒரு பதிலைச் சொல்லியிருக்கலாமே?
என்ன பதில்?
உங்களின் கிண்டில் டிவைஸ்.
ஆ… ஆ… ஆ… வீடு பற்றி எரியும்போது நான் காப்பாற்ற என் கிண்டில் டிவைஸை விட வேறு ஒரு விலை மதிக்க முடியாத புத்தகம் ஏதாவது இருக்க முடியுமா? என்னுடைய 32 GB கிண்டிலில் பதினைந்தாயிரம் புத்தகங்கள் உள்ளன என்று ஜம்பம் அடித்துக் கொண்டிருப்பேனே? எத்தனை பெரிய வைரச் சுரங்கம் அது? இந்த பதிலை மட்டும் சொல்லியிருந்தால் அந்தக் கிண்டில் நிறுவனத்தினருக்கு எப்படி இருந்திருக்கும்?
இனியொருமுறை இப்படி ஒரு வாய்ப்பு வரப் போவதில்லை.
***
சந்தா/நன்கொடை அனுப்ப ஞாபகப்படுத்துகிறேன்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai