இன்று என் நண்பர் பா. வெங்கடேசனின் புத்தகமான கதையும் புனைவும் தபாலில் வந்தது. புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல். வெங்கடேசனோடு த. ராஜன் உரையாடியிருக்கிறார். இப்படிப்பட்ட உரையாடல்கள் நூல்கள் தமிழில் வெகு அபூர்வம். சுந்தர ராமசாமியோடு சிலர் உரையாடியிருக்கிறார்கள். நூலாக வந்துள்ளன. மௌனியோடு பலரும் உரையாடியிருக்கிறார்கள். நூல் வந்ததா எனத் தெரியவில்லை. படிகள், நிறப்பிரிகை போன்ற பத்திரிகைகள் வந்த காலகட்டத்தில் அப்பத்திரிகைகள் பல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றன. புத்தகங்கள் உண்டா எனத் தெரியவில்லை. வெங்கடேசன் ஒரு புனைவிலக்கியவாதி என்பது மட்டும் அல்லாது நான் மதிக்கும் ஒரு கோட்பாட்டாளர். கோட்பாட்டாளர்கள் தமிழில் அரிது. தமிழவன், அ. மார்க்ஸ் போன்ற பெயர்கள் நினைவு வருகின்றன. கோட்பாட்டாளரே புனைவிலக்கியத்திலும் இயங்குவது மிக மிக அரிது. அபிலாஷைச் சொல்லலாம் என்றால் ஒரு அடி ஏறினால் ஏழு அடி சறுக்குகிறார். சமீபத்தில் அவர் எழுதியிருந்த ஒரு பதிவைக் கண்டு மிகவும் நொந்து போனேன். புத்திஜீவி என்பவன் ஒரு சே குவேரா மாதிரி. புத்திஜீவி என்பவன் ஒரு ரமண மகரிஷி மாதிரி. அவனுக்கு உறவு பந்தம் பாசம் என்பதெல்லாம் துச்சம். எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு மிதித்து விட்டுத்தான் அவன் சமூகவெளியில் நிற்க வேண்டும். அந்த உணர்வுகளைத் தாண்ட முடியவில்லை என்றால் ஸீரோ டிகிரி மாதிரி ஒரு நாவல் எழுதலாம். அதற்கே என் நண்பர் “பார் மகளே பார் மாதிரி இருந்தது” என்றார். நல்லவேளை, அப்படி ஆகியிருக்க வேண்டியது, என் பின்நவீனத்துவ அறிதல் முறையால் அந்த விபத்திலிருந்து தப்பியது.
வெங்கடேசன் தாமரையிலையில் நீர் மாதிரி வாழ்பவர். நடுத்தர வர்க்கம்தான். குடும்பம்தான். ஆனால் அதையெல்லாம் தன் அடையாளமாகக் கொள்ளாதவர். நான் அடிக்கடி சொல்வதுண்டு, என் வாழ்நாளில் நான் பொறாமை கொண்ட நாவல் பாகீரதியின் மதியம் நாவல்தான்.
கதையும் புனைவும் நூல் பற்றி நான் விரிவாக எழுதுவேன். இன்றுதான் தபாலில் வந்தது. அற்புதமான தயாரிப்பு. 150 பக்கங்கள். 250 ரூ. எதிர் வெளியீடு.
இதை யார் பார்சல் செய்தார்கள் என்று தெரியவில்லை. எந்த அளவு இறுக்கமாகக் கட்ட முடியுமோ அந்த அளவுக்கு இறுக்கமாகக் கட்டியிருந்தார்கள். பத்து நிமிடம் போராடிக் கிழித்தேன். கத்தரிக்கோலைப் போடவே இடமில்லாவிட்டால் நீங்கள் எங்கிருந்து கிழிப்பீர்கள்? Hard bound புத்தகம் வேறு. கத்தரிக்கோலைச் செருகி வெட்டி எடுக்கவே முடியாமல் திண்டாடி கடைசியில் ஒருவழியாகப் பிரித்தால் முன் அட்டையில் கத்தரிக்கோல் பட்டுக் கிழிந்து விட்டது. வேறு வழியே இல்லை. எதிர் மட்டும் இல்லை. க்ரியா அனுப்பும் ஒவ்வொரு புத்தகமும் இப்படித்தான் வருகிறது. ஸீரோ டிகிரியிலும்தான் புத்தகம் அனுப்புகிறார்கள். பிரமாதமாக வருகிறது. ஏனய்யா, ஒரு புத்தகத்தை எப்படிக் கட்டி அனுப்புவது என்று கூடத் தெரியாமலா பதிப்பகங்களில் ஆட்கள் வேலை செய்கிறார்கள்? இது எனக்கு வெங்கடேசனே அனுப்பிய பிரதி. முதல் பக்கத்திலேயே என் கத்தரிக்கோல் வேலையைக் காட்டி விட்டது. எத்தனை அருமையான புத்தகம் இப்படிக் கிழிந்து… நானே இன்னொரு புத்தகம்தான் ஆர்டர் பண்ண வேண்டும். ஆனால் அதையும் இப்படித்தானே பிரிக்கவே முடியாமல் அனுப்புவார்கள்?
இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் யாராவது?