அன்பு சாரு சார்,
வணக்கம் நலமா? தாங்கள் பல இடங்களில் கட்டாயம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று அகோராவை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தீர்கள். முதன் முதலாக நீங்கள் தமிழ்ச் சூழலில் அகோராவைப் பற்றி அறிமுகப்படுத்துகிறீர்கள். புத்தாண்டுக் குறிப்பில் மிகவும் சிலாகித்து எழுதியிருந்தீர்கள். அப்போதிலிருந்து இந்தப் புத்தகத்தை எப்படியாவது படித்துவிட வேண்டுமென்ற ஆவல் தொற்றிக்கொண்டது. கடந்த மாதம்தான் எனக்கு திருமணம் நடந்தது. திருமணப் பரிசாக நண்பர்களிடமிருந்து அகோராவைப் பெற்றேன். நிச்சயமாக அனைத்து புத்தகங்களுக்கும் சிகரம் என்று கூறலாம். இந்தப் புத்தகத்தைப் படித்ததற்கு முன்பாக இருந்த நான் வேறு, இந்தப் புத்தகத்தைப் படித்ததற்குப் பின்பு இருப்பவன் வேறு. நான் ஒரு ஆன்மீக வழியில் இருக்கிறேன். எனக்கான குருவைப் பின்பற்றுகிறேன். என் குருவிடம் இருந்து தொடர்ந்து அறிதல்களைப் பெற்று வருகிறேன். குருவிடம் இருந்து எனக்குக் கிடைத்த பல அறிதல்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் நன்றாக உதவியது. மேலும் Mr. M அவர்கள் எழுதிய Apprenticed to Himalayan Masters என்ற நூல் என் குரு பரிந்துரையின் பேரில் வாசித்தேன். இதுவும் அகோராவில் வரும் சில இடங்களை நன்றாகப் புரிந்துகொள்ள உதவியது. அகோரா மூன்று பாகங்களில் இரண்டு பாகங்களைப் படித்துவிட்டேன். மூன்றாவது பாகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். முழுவதுமாகப் படித்துவிட்டு நான் அடையும் அனுபவத்தை, பேரின்பத்தை உங்களுக்குப் பகிரலாம் என்றிருந்தேன். ஆனால் ‘நான்தான் ஔரங்கசீப்’ படித்ததும் உடனே கடிதம் எழுதிவிட வேண்டும் என்று எழுதுகிறேன்.
நாவலின் முதல் இரண்டு அத்தியாயங்கள் நேற்றும், இன்றும் மிக அபாரமாக இருந்தன. முதல் அத்தியாயத்தில் அக்பர் பற்றி வரும்போது என் மனம் நேரடியாக அகோராவிற்குத்தான் சென்றது. விமலானந்தர் அக்பராக மாறும் காட்சியை நினைத்தபடிதான் வாசித்தேன். ஒருவேளை அகோரா பற்றி இதில் வருமோ என்றும் நினைத்தேன். நீங்கள் சொன்னால் நம்புவீர்களா என்று தெரியாது. அகோராவில் அக்பர் பற்றிக் குறிப்பிட்ட காட்சியை நான் நினைத்தது போன்றே முதல் அத்தியாயத்தில், அதுவும் தமிழில் வந்ததும் ஆச்சர்யபட்டு கத்தியேவிட்டேன். அகோராவைப் படித்தவர்களால் மட்டுமே நான்தான் ஔரங்கசீப்பை மிக அணுக்கமாக அகோராவுடன் ஊடும்பாவுமாக இணைத்துப் படிக்கும் இன்பத்தைப் பெற முடியும். இந்த நாவலில் விமலானந்தர் உடல் மேல் ஔரங்கசீப் வருகிறார். இதில் ஔரங்கசீப் கூறுவதெல்லாம் விமலானந்தர் கூறுவதுதான். ஒருவிதத்தில் உங்கள் நாவலின் நாயகன் விமலானந்தரும்தான். அவரே குறிப்பிட்டது போன்று உங்களுக்கும் விமலானந்தருக்குமான ஏதோ ஒரு நல்ல கர்மாதான் நீங்கள் அவரைக் கண்டடைந்து கதாநாயகனாக மாற்ற உதவியிருக்கிறது. அதை வாசிக்கும் பேறும் என் போன்ற தமிழ் வாசகர்கள் அடைந்துள்ளனர். மற்ற வாசகர்கள் ஔரங்கசீப்பின் கதையை வாசிக்கிறார்கள்; ஆனால் நானோ ஊடே விமலானந்தரின் கதையையும் உங்கள் வழியே சேர்த்து வாசிக்கிறேன். காலமும் ஊழும் உங்கள் வழியே இத்தகைய பெரும் படைப்பை அளித்தமைக்கு விமலானந்தரையும் அவரின் முழுமுதல் சக்தியாக விளங்கும் பெருங்கருணை கொண்ட ஸ்மஷன் தாராவையும் இந்தப் பொழுது தொழுகிறேன். இத்தகைய மகத்தான படைப்பிற்காக மிக்க நன்றி சார். என்னளவில் மிக மிக முக்கியமான புத்தகமாக இதைக் கருதுகிறேன். நாவலின் செல்திசைய ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
அகோராவைப் பற்றி மேலும் மேலும் பேசவேண்டும், எழுதவேண்டும். புத்தகத்தை முழுதாகப் படித்ததும் உங்களுடன் உரையாட விரும்புகிறேன். அகோரா போன்ற பெரும் படைப்பை அறிமுகப்படுத்தியதற்காக மிக்க நன்றி சார். ஒருவேளை உங்கள் எழுத்துகள் வழியே அகோராவை வந்தடையத்தான் உங்களை வாசித்தேனோ என்றே கருதுகிறேன். பெரும் பேறு பெற்றவனானேன். இப்பெரும் புதையலை அறிமுகப்படுத்திய தங்களை என்றும் நினைவில்கொள்வேன்.
அன்பும் நன்றியும்,
ரா. பாலசுந்தர்
அன்புள்ள பாலசுந்தர்,
நாவலின் திசையில் செல்லச் செல்ல உங்களின் கருத்து மாறலாம். விமலானந்தர் கடவுள் தன்மை கொண்டவர். ஔரங்கசீப் ஒரு மார்க்கத்தைத் தீவிரமாக நம்பியவர். அந்த மார்க்கமே சகல மார்க்கங்களிலும் உச்சமானது என்ற நம்பிக்கையில் வாழ்ந்தவர். ஆனால் மற்றவர்களைப் போல் அல்லாது பேரரசராக இருந்தாலும் ஒரு உண்மையான முஸ்லீமாக வாழ முற்பட்டவர். சூஃபிகளின் மீதும் அவருக்குப் பெரும் மதிப்பு இருந்தது. சிலை வணக்கத்தை வெறுத்தவர் என்றாலும் பிராமணர்கள் மீது பெரும் பிரமிப்பு கொண்டிருந்தார். நாவலில் போகப் போக நான் அவதானம் செய்த, என்னால் உருவாக்கப்பட்ட, நான் அறிந்த ஔரங்கசீப் வருவார்.
அகோரா தொகுதிகளைப் படித்த பிறகு நானும் பழைய ஆளாக இல்லை. என் நம்பிக்கைகளும் மதிப்பீடுகளும் மாறி விட்டன. எப்போது வேண்டுமானாலும் பேசலாம். ஃபோனில் அழையுங்கள்.
சாரு