பின்வரும் மதிப்புரை முகநூலில் செந்தில் நாதன் எழுதியது.
சாரு எழுதும் புதிய நாவல். சாருவிடம் இருக்கும் ஒரு தனிச்சிறப்பு எது என்று கேட்டால், இதற்கு இது தான் வரையறை என்று இந்த உலகம், இந்த சமூகம் சொல்லும் போது அதை உடைக்கும் வகையில் ஒன்றை அறிமுகபடுத்தும் செயல் என்று தான் சொல்ல வேண்டும்.
வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்றுக் கதைகள், வரலாற்று நாவல்கள் என்று வந்தால் ஒரே மாதிரியான முறையில் கதை சொல்லல் இருக்கும். கொஞ்சம் படித்தால் போதும், அதைத் தாண்டிச் செல்ல முடியாத நிலைக்கு வாசகர்களைத் தள்ளி விடுவார்கள். ஔரங்கசீப் என்று சொன்ன உடனே எனக்கு முதலில் தோன்றியது, வழக்கமான வரலாற்றுப் புத்தகம் ஒன்று தயாராகிறது, என்ன நடக்கவிருக்கிறது என்று பார்ப்போம் என்ற மனநிலையில்தான் இருந்தேன்.
Bynge செயலியில் நான்கு முன்கதை சுருக்கம் வெளியாகி உள்ளது. சாரு மீண்டும் தான் யார் என்று நிரூபித்து உள்ளார். ஔரங்கசீப் என்ற ஒரு மன்னன் பெயர் சொன்ன உடன் அவன் மோசமானவன் என்ற மனநிலையில்தான் எல்லோரும் இருக்கிறோம். அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று முன்கதையில் சொல்லாமல் சொல்லிவிட்டார். அடுத்ததாக ஔரங்கசீப் தன் கதையைத் தானே சொல்வது போல் நாவல் பயணிக்கிறது.
எழுத்தாளனுக்கும் , ஔரங்கசீப்புக்கும் நடக்கும் உரையாடல் போல நாவல் முன்கதை இருக்கிறது. வழக்கமான வரலாற்றுக் கதை போல இல்லாமல் நக்கலும், கிண்டலும் கதையில் ஏராளம். சாரு தனக்கே உரிய பாணியில் கதையைச் சொல்கிறார். நிச்சயம் ஔரங்கசீப் பற்றித் தெரியாத, படிக்காத விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் . அதேபோல தமிழகத்தின் சமகாலப் பிரச்சினைகளை கதையின் வழியே பேசுகிறார் ஆசிரியர்.
இது அனைவருக்கும் பிடித்த நாவலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Bynge செயலியில் அனைவரும் படிக்க முடியும்.
***
எதிர்பாராதது. நாவல் கடினமாக இருக்கிறது என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அப்படி இல்லை என்பது மகிழ்ச்சி. காயத்ரி இதுவரை என் எழுத்தைப் படித்து அதி உற்சாகமாகவெல்லாம் எதிர்வினை காட்டியது இல்லை. உச்ச பட்ச பாராட்டே “ம், நல்லா இருக்கு”. அவ்வளவுதான் வரும். இன்னொரு நண்பர் இருக்கிறார். அவருடைய உச்சபட்ச பாராட்டு, “ம். படிச்சிட்டேன்.” பெயர் சொல்லுவேன். ஆனால் என்னைத் திட்டி எழுதி விட்டீர்கள் என்பார். வேண்டாம். அவரை விட காயத்ரி பரவாயில்லை என்று எடுத்துக் கொள்வேன். அவளே நேற்று ஆகா ஓகோ என்று பாராட்டி விட்டதால் நாவல் நன்றாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
எல்லோரும் பொதுவாக அபிப்பிராயப்பட்டது என்னவென்றால், இதை முழுசாக ஒரே அமர்வில் படிக்க வேண்டும் என்பதுதான். உண்மை. ஆனால் என் வாழ்விலேயே நான் அதிக பட்ச வேகத்தில் எழுதிய நாவல் இதுதான். இதுவரை பத்தொன்பது அத்தியாயம் எழுதி அனுப்பி விட்டேன். ஐம்பது அனுப்பியிருந்தால் தினம் ஒன்று இரண்டு என்று வெளியிட்டு இருப்பார்கள். இதுதான் என்னால் முடிந்த அதிக பட்ச வேகம். இதற்கு மேல் ஆகாது. அதிகம் வாசிக்க வேண்டியிருக்கிறது.
எவ்வளவு வரும் என்று கேட்டார்கள். 1500 பக்கம் எழுதினால்தான் சுதந்திரமாக எழுத முடியும். அவ்வளவு விஷயம் இருக்கிறது. ஆனாலும் 750 பக்கம்தான் எழுதுவேன். அதுவே ஆங்கிலத்தில் 1000 பக்கம் வரும். ஆங்கிலத்தில் 500 பக்கத்துக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை. விக்ரம் சேட், பெருமாள் முருகன் என்றால் எத்தனை பக்கம் வேண்டுமானாலும் எழுதலாம். எனக்கு தனிப்பட்ட வாசகர் தொகை ஆங்கிலத்தில் கிடையாது. அதனால் இந்த 750 பக்கத்தையே ஆங்கிலத்தில் இரண்டாகப் பிரிக்க வேண்டியிருக்குமோ என யோசிக்கிறேன்.
இனிமேல் எல்லாம் தமிழில் மட்டும் எழுதி எந்தப் பயனும் இல்லை. பல நண்பர்கள் கேட்கிறார்கள், இதை விட வேறு என்ன வேண்டும் என்று. என்னை விடுங்கள், ஔரங்கசீப் என்பது நம் இந்திய மனதில் எத்தனை அழமாகப் பதிந்திருக்கும் பெயர்? அசோகர், அக்பர், ஷா ஜஹான் போன்ற பெயர்களும் அப்படியே. எல்லா பெயர்களையும் விட ஔரங்கசீப் முக்கியமான பெயர். ஏனென்றால், அதில் நாயகத்தன்மையை விட வில்லத்தனம் அதிகம். அவர் பெயரில் ஒரு நாவல் வருகிறது என்றால், அது பற்றிய செய்தி தினசரிகளில் வந்திருக்க வேண்டாமா? பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத குப்பைக் கூளம் மாதிரி ஒரு படம் வந்தால் அதன் பூஜைக்கு ஒரு செய்தி, பாடல் வெளியீட்டுக்கு ஒரு செய்தி, படம் டப்பாவுக்குள் போனதற்கு ஒரு செய்தி என்று பத்திரிகைகள்/ஊடகங்கள் அதகளம் பண்ணுகின்றன அல்லவா? ஆனால் ஔரங்கசீப்பின் கதையை ஒரு மூத்த எழுத்தாளர் எழுதினால் அது பற்றி நானேதான் மாய்ந்து மாய்ந்து ப்ரமோஷன் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பிஞ்ஜ் குழுவினரும் கடுமையாக ப்ரமோட் செய்கிறார்கள். அவர்கள் செய்வது தவிர, மற்றபடி ஊடகங்களில் ஔரங்கசீப் பற்றி ஒரு செய்தி இல்லை. ஆனால் மலையாளத்தில் இப்படி நடக்காது. இதற்குள் அந்த எழுத்தாளனின் பேட்டி பத்து சேனல்களில் வந்திருக்கும். இங்கே யாருக்குமே ஔரங்கசீப் கதை நாவலாக வரும் விஷயமே தெரிந்திருக்கவில்லை. யோசித்துப் பாருங்கள், ஒரு குமுதம் வாசகருக்கோ விகடன் வாசகருக்கோ ஔரங்கசீப் நாவலாக வருவது எப்படித் தெரியும்? அந்த வாசகருக்கு எப்படித் தெரியப்படுத்துவது? தெரியப்படுத்தினால் ஆயிரக்கணக்கில் படிப்பார்கள். ஒருவர் இதுவரை இலக்கியப் புத்தகம் ஒன்று கூடப் படித்திருக்கத் தேவையில்லை. ஆனால் அவர் சரித்திரத்தில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவராகவும், தமிழ் வாசிக்கத் தெரிந்தவராகவும் இருந்தால் நிச்சயம் ஔரங்கசீப்பைப் படிப்பார். இலக்கியமாக அவர் படிக்கும் முதல் நூலாகக் கூட அது இருக்கும். இப்படிப்பட்ட மனிதர்கள் தமிழ்நாட்டில் ஐந்து லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களில் ஆண்ட்ராய் அல்லது ஐஃபோன் வைத்திருப்பவர்கள் ஒரு லட்சம் பேர். இவர்களை ஔரங்கசீப்பைப் படிக்க வைக்க வேண்டும். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.
இவ்வளவையும் ஔரங்கசீப் என்பதால் மட்டுமே எழுதுகிறேன். தியாகராஜா நாவலுக்கு எழுத மாட்டேன். அது மிகவும் ஆழமானது. சங்கீதத்தோடு அல்லது என்னுடைய எழுத்தோடு பரிச்சயம் உள்ளவர்களுக்கு மட்டுமே அந்த நாவல் புரியும். மற்றவர்களுக்கு அது சுவையாக இராது. அதற்கு நான் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ள மாட்டேன். அது எங்கேயும் தொடராகவும் வராது. ஆனால் ஔரங்கசீப் அப்படி இல்லையே? ஒரு வெப்சீரீஸுக்கு உள்ள சுவாரசியம் கொண்டது அந்த நாவல்.
மற்றபடி இதுவரை படித்தவர்களின் எதிர்வினை பிரமாதமாக இருக்கிறது.