மிகப் பெரிய படிப்பாளியும், ஆய்வாளரும், கவிஞருமாகிய என் நண்பர் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். இன்னொரு அவதூறும் செய்திருக்கிறார். அதாவது, தருணின் தயவு இருந்தால்தான் என் நாவலை ஆங்கிலத்தில் வெளியிட முடியும் என்பதால்தான் தருணை ஆதரித்து எழுதுகிறேனாம். படித்தவன் கெட்டவனாக இருந்தால் இப்படித்தான் யோசிக்கத் தோன்றும். ஏன்யா, என் புத்தகம் ஆங்கிலத்தில் வருவதற்காக இவ்வளவு பெரிய தியாகமா செய்வேன்? தருணின் இரண்டு மகள்களும், மனைவியும், தருணின் வயதான அம்மாவும் இரண்டு மாதமாக கோவாவில் தங்கி, செவ்வாய்க் கிழமையும் வெள்ளிக்கிழமையும் கால் மணி நேரம் சந்தித்து அவருக்கு மிகப் பெரிய தார்மீக ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள். மனைவியைக் கூட விட்டுத் தள்ளுங்கள். அந்தப் பெண் குழந்தைகள் ஏன் தன் தகப்பனுக்கு இவ்வளவு பெரிய ஆதரவைத் தருகிறார்கள்? அப்பன் என்பதாலா? இல்லை. அந்த அளவுக்கு முட்டாள் இல்லை, அந்தப் பெண்கள். என்ன நடந்தது என்று தெரியும் அவர்களுக்கு. அதுதான் காரணம். இந்தியா பூராவும் தருணை அடித்துக் கொண்டிருக்கும் போது நான் மட்டுமே அவரை ஆதரித்து ஏஷியன் ஏஜில் எழுதினேன். அதற்கு நான் எவ்வளவு வசைகளை எதிர்கொண்டிருக்க வேண்டும்? என் நூல் ஆங்கிலத்தில் வருவதற்கு இவ்வளவு பெரிய விலை கொடுக்கும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல; ஒரு குற்றவாளியை ஆதரித்து ஆதாயம் தேடிக் கொள்ள நினைக்கும் அளவுக்கு நான் அயோக்கியனும் அல்ல. மேலும், ஸீரோ டிகிரி நாவல் ஆங்கிலத்தில் வந்தது எவனுடைய சிபாரிசிலும் அல்ல. தானாக நடந்தது. Harper & Collins வெளியிட்டிருக்கும் 50 Books 50 Authors தொகுப்பில் இந்தியாவில் வெளிவந்த மிக முக்கியமான ஐம்பது நூல்களில் ஸீரோ டிகிரியும் ஒன்று என அந்த நூலைத் தொகுத்த Chandra Siddan கருதி, ஸீரோ டிகிரியைப் பற்றி விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதாவது, தொகுப்பாளரே எழுதிய கட்டுரை அது. சந்திரா எனக்கு உறவுக்காரரோ வேண்டியவரோ இல்லை. அவர் கனடாவில் வசிப்பவர்.
நான் ஏஷியன் ஏஜில் இரண்டு ஆண்டுகளாகப் பத்தி எழுதி வருகிறேன். தெஹல்கா ஆண்டு மலரில் என் சிறுகதை வந்த போது தருணை எனக்கு நேரடியாகத் தெரியாது. அமெரிக்காவில் வசிக்கும் Danel Olson தான் தொகுக்கும் Exotic Gothic 5 தொகுதிக்காக ஒரு பேய்க் கதை வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய போது எந்தப் பயலின் சிபாரிசும் இல்லை. என்னை உங்களுக்கு எப்படித் தெரியும் என்று நான் அவரை ஆச்சரியத்துடன் கேட்ட போது “இங்கே உள்ள நூலகங்களில் உங்களுடைய ஸீரோ டிகிரி உள்ளது” என்றார். அந்தத் தொகுப்பு நூலை PS Publishing என்ற லண்டன் பதிப்பகம் வெளியிட்டது. இது தருணின் சிபாரிசில் நடந்தது இல்லை.
என்னுடைய நாவலை வெளியிட இரண்டு சர்வ தேசப் பதிப்பகங்கள் எழுதிக் கேட்டுள்ளன. முன்பு என்றால் பதிப்பகங்களின் பெயரைச் சொல்லியிருப்பேன். இப்போது புத்தி வந்து விட்டது. புத்தகம் வந்த பிறகுதான் சொல்ல முடியும். இல்லாவிட்டால் பதிப்பகத்துக்கு நூறு கடிதம் போகும்.
20 ஆண்டு இருக்குமா? எனக்கு ஆண்டுக் கணக்கில் குழப்பம் உண்டு. பல ஆண்டுகள் என்று வைத்துக் கொள்ளுங்கள். என் உயிர் நண்பனின் மனைவி தீக்குளித்துச் செத்து விட்டாள். திருமணம் ஆகி ஒன்பது மாதமே இருக்கும். ஊரே என் நண்பனைக் கொலைகாரன் என்றது. நானும் இன்னும் சில நண்பர்களுமே சொன்னோம்… என் நண்பன் கனவில் கூட அப்படி நினைத்திருக்க மாட்டான். ஒரு எறும்பைக் கூட கொல்லத் துணியாதவன் அவன் என எத்தனை பேரிடம் சண்டை போட்டிருப்பேன். இன்று அரண்மனையின் சொகுசு அறையில் அமர்ந்து கொண்டு தருணை வசை பாடும் என் நண்பனே! ஊரே கொலைகாரன் என்று தூற்றியும் அவன் ஒரு அப்பாவி, எறும்பையும் கொல்ல மாட்டேன் என்று சொன்னேனே அதே உணர்வுடன் தான் தருணை இப்போது தாங்குகிறேன். தருணின் ஒரே கேள்வி, சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் லிஃப்ட்டின் CCTV footage கிடைத்து விட்டது அல்லவா? அதை வெளியிடு! ஏன் வெளியிடவில்லை. Screw him as long as possible! இவ்வளவு தான் விஷயம். எனவே, தருணின் தயவு இல்லாமலேயே என் நாவல் ஆங்கிலத்தில் வெளிவரும். மேலும், என் நாவலுக்கு சிபாரிசு செய்யக் கூடிய நிலைமையிலும் தருண் இல்லை. தருணின் இமேஜ் கொடூரமாகச் சரிந்து கிடக்கிறது. நினைத்துப் பாருங்கள். சென்ற ஆண்டு தான் ஆசியாவின் மிக முக்கியமான 40 பேரில் தருணின் பெயர் இருந்தது. ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைமைப் பீடத்தில் இருந்தவரையே சிறைக்கு அனுப்ப முடிந்தது தருணால். ஆனால் இன்று? ஆறு கிரிமினல்களோடு ஒரு சிறிய அறையில் கிடக்கிறார். ஏன் கிரிமினல்கள் என்கிறேன் என்றால், அவர்கள் அனைவரும் அந்தச் சிறைக்கு அடிக்கடி வந்து போகிறவர்கள்.
போயும் போயும் ஒரு புத்தகத்துக்காக, கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை, இந்தியாவே தூற்றிக் கொண்டிருக்கும் ஒருவரைப் பாராட்டுவேனா? அவ்வளவு மூடனா நான்? எனக்குத் தருணைத் தெரியும். அவன் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்று அவனுடைய இரண்டு மகள்களும் சொல்கிறார்கள். அவர்களும் அந்த ஓட்டலில் தருணோடு இருந்தார்கள். தருண் சிசிடிவியைக் காண்பி என்கிறான். மிகப் பெரிய அரசியல் சதியில் தருண் மாட்டப்பட்டிருக்கிறான் என்பதே என் முடிவு.
மேலும் நண்பா, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏஷியன் ஏஜில் வெளிவரும் என் பத்திகளில் இறுதியில் “Charu Nivedita is a post-modern Tamil writer based in Chennai. His magnum opus, Zero Degree, is considered one of the best in trangressive fiction” என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஒரு அடையாளம் எனக்குப் போதாதா, என் நாவலை ஆங்கிலத்தில் வெளியிட? அதுவும் இரண்டு ஆண்டுகளாக இந்தக் குறிப்பு அகில இந்திய ஏஷியன் ஏஜில் வந்து கொண்டிருக்கிறது. நண்பா, உனக்குத்தான் நான் லௌகீக சிகாமணி. ஏனென்றால், நீ அந்த உலகில் இருந்து கொண்டிருக்கிறாய். மேலும், ”நானே இங்கே வேளச்சேரியில் நண்டு பிடித்துக் கொண்டிருக்கிறேன். இவனோ என் நண்பன். என்னோடு தண்ணி அடித்தவன். இவன் எப்படிப் பெரிய ஆளாக இருக்க முடியும்?” என்பதுதானே உன் மன ஓட்டம். உனக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு Almost Island கருத்தரங்கில் கலந்து கொள்ள தில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். India International Centre இல் நானும் அஷிஷ் நந்தியும் உணவகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது தாடி வைத்த ஒரு குட்டி தாகூர் வந்தார். பெயர் ஜாய் கோஸ்வாமி. வங்கக் கவி. மேற்கு வங்கத்தில் அவரை தாகூர் போல் கொண்டாடுகிறார்கள் என்று அறிந்தேன். அந்தச் சமயம் என் கையில் ஸீரோ டிகிரியின் ஆங்கிலப் பிரதி இருந்தது. அஷிஷ் நந்திக்குக் கொடுப்பதற்காக எடுத்து வந்திருந்தேன். அதைப் பார்த்து விட்டு ஆச்சரியத்துடன், “மிகச் சமீபத்தில்தானே இந்தப் புத்தகத்தைப் பார்த்தேன்? எங்கே என்று ஞாபகம் இல்லையே?” என்று குழம்பினார் ஜாய் கோஸ்வாமி. பிறகு யோசித்து விட்டுச் சொன்னார். கல்லூரியில் படிக்கும் அவர் மகளிடம் அந்த நூலைப் பார்த்தாராம்.
நண்பா, எனக்கு தருணின் சிபாரிசு தேவை என்று நீ நினைத்தால் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் உன் புத்திசாலித்தனம் மழுங்கி விட்டது என்றே பொருள். மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்பு நீயும் நானும் வேலு ஒயின்ஸில் தண்ணி அடித்ததையே நினைத்துக் கொண்டிருக்கிறாயா? நான் அதைத் தாண்டி வெகுதூரம் வந்து விட்டேன். மேலும், அப்போது கூட நாம் ஒன்றும் சராசரிக் குடிகாரர்களைப் போல் இல்லையே? மரியோ பர்கஸ் யோசாவைப் பற்றி அல்லவா நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருப்போம்?
இப்போது உன் கேள்வி ஒன்றே இதையெல்லாம் எழுத வைத்தது.
சதா சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. ஐந்து பக்க கட்டுரை ஒன்றாவது எழுதி எப்படி தருண் தேஜ்பால் -தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ் ஆகியோருக்கு நிகரானவர் என்று சாரு நிறுவவேண்டும்.
நண்பா, இதெல்லாம் என் வேலை அல்ல. உன்னைப் போன்ற பேராசிரியர்கள் செய்ய வேண்டியது. இன்று தான் என் நாவலின் இரண்டு பாகங்களைத் திருத்தம் செய்து முடித்து நண்பருக்கு அனுப்பினேன். ஆயிரம் பக்கங்கள். இன்னும் இரண்டு பாகங்கள் உள்ளன. அது ஒரு ஐநூறு பக்கம் வரும். எனக்கு இப்படியெல்லாம் தலையணை சைஸ் நாவல் எழுத ஆசை இல்லை. ஆனால் இந்த நாவல் அதைக் கோரியது. இப்போதே ரொம்ப சுருக்கமாக எழுதி விட்டோமோ என்று தோன்றுகிறது. மூன்றாம், நாலாம் பாகங்களில்தான் ரொம்ப வேலை இருக்கிறது. இது தவிர, இன்னும் இரண்டு நாவல்களின் கதைகள் அவசரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே, தருணின் நாவல்கள் பற்றி ஐந்து பக்கக் கட்டுரை எழுத இப்போது அவகாசம் இல்லை. அதற்கு எனக்கு ஒரு மாதம் எடுக்கும். வேண்டுமானால் ஒரு விஷயம் சொல்கிறேன். தருணின் மூன்றாவது நாவலான the valley of masks-ஐ வாங்கிப் படி. அதன் முடிவில் உன் மனம் கலங்கவில்லையெனில், உன் கண்கள் கண்ணீரில் தேங்கவில்லையெனில் இனி நான் தருணின் பெயரையே சொல்லவில்லை. சரியா? அந்த நாவலின் wisdom தான் கஸான்ஸாகிஸின் சாரம்.
இனிமேல் நீ என்ன எழுதினாலும் உன்னோரு விவாதம் செய்ய மாட்டேன். ஒரு புத்தகம் வெளிவருவதற்காக ஒருத்தனைப் புகழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்வது உன்னுடைய ஈனபுத்தியைக் காட்டுகிறது. நீ அப்படிச் செய்வாயோ என்று என்னை எண்ணத் தூண்டுகிறது. இப்படி ஒரு கீழ்த்தரமான எண்ணத்தை எனக்குத் தோற்றுவித்ததற்காகவே உன்னை இப்போது வெறுக்கிறேன். குட் பை. இனி உன் வழியில் நான் குறுக்கிட மாட்டேன். உன் பெயரை நான் உச்சரித்ததால் – அதுவும் பெரிய மரியாதையுடன் – என்னை இத்தனை அவதூறு செய்கிறாய் நீ. இனி அந்தக் காரியத்தை நான் செய்ய மாட்டேன். நான் இறந்தாலும் என் வீட்டுப் பக்கம் நீ வர வேண்டாம்.
Comments are closed.