மரமும் மனிதனும்…. எல்லே ராம்

மரங்களையும் பிராணிகளையும் நேசிப்பவர்களை நான் நேசிக்கிறேன்.  மனிதர்களோடு பழகுவதை விட மரங்களோடும் பிராணிகளோடும் பழகுவது மனதுக்கு இனிமை தருவதாக உள்ளது.  அதனாலேயே பாலு மகேந்திராவை எனக்கு அதிகம் பிடிக்கிறது.  அதனாலேயே தருணை எனக்கு அதிகம் பிடிக்கிறது.  மரங்களை நேசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவன் தருண்.  அவனுடைய ஆல்கெமி ஆஃப் டிஸையரைப் படித்தால் நீங்களும் மரங்களை நேசிக்கத் துவங்குவீர்கள்.  எல்லே ராம் என்றும், லாஸ் ஏஞ்ஜல்ஸ் ராம் என்றும் அழைக்கப்படும் என் அன்புக்குரிய ராம் முகநூலில் எழுதியுள்ள இந்தப் பதிவு ஒரு அழகான சிறுகதையாக, நாம் இழந்து போன வாழ்க்கையை நம் மனதில் தைக்கும்படி ஞாபகமூட்டுகிறது.  முகநூலில் இல்லாதவர்களுக்காக அந்தப் பதிவை இங்கே தருகிறேன்.  முகநூலில் பாருங்கள்… இதற்கு வந்துள்ள பின்னூட்டங்களும் அபாரமாக உள்ளன.  ஒரு நண்பர் திருப்புகழை மேற்கோள் காட்டியுள்ளார்.  அற்புதம்.  இனி எல்லே ராம்:
நான் பிறந்து, வளர்ந்து, ஓடி ஆடிப் பெரியவனான எங்கள் கிராமத்து வீடு விற்கப்பட்டு விட்டது.

எதிர்பாராத அதிக விலைக்கு விற்றதாக என் கசின் சந்தோஷமாகச் சொன்னான். பத்திரப்படி அவன் ஓனர். பாசப்படி நான்.

“ம்ஹும்’ என்று மட்டும் கேட்டுக் கொண்டேன்.

“கொல்லையில் இருந்த இரண்டு பெரிய புளிய மரங்களை ஏற்கனவே வெட்டிட்டோம், தெரியுமில்லையா?”

“ம் ம்” 

இரண்டு கைகளாலும் பெரியவர்களே கட்டி அணைக்க முடியாத பிரம்மாண்டங்கள் அவை. இரண்டு மரங்களும் இரண்டு பிரம்மராட்சஸர்கள் மாதிரி, ஆனால் கருணையான ராட்சஸர்கள். அப்படி ஒரு பிரம்மாண்ட அழகு. 

ஒரு மரத்துப் பழங்கள் தித்திக்கும், இன்னொன்று சற்றே புளிக்கும். பசியாற வரும் கிளிகளுக்கு எல்லாமே தெரியும். எப்படி இது என்று பார்த்துப் பார்த்து பரவசமாவேன்.

வெட்டி விற்றே விட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டபோது ஊமை முடவன் போல் மனசுக்குள் அழுதேன்.

மரம் ஏறக் கற்றுக்கொண்டதே அங்கேதானே? எத்தனை சறுக்கல்கள், எத்தனை சிராய்ப்புகள். எங்கள் வீட்டு ராஜேந்திரன் பல சமயம் தூக்கி விடுவான். சில சமயம் “நீயே போ” என்று விட்டும் விடுவான். 

விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் கற்றுத்தந்த வேலைக்கார குரு. 

அதன் உச்சாணிக் கொம்புகளில் ஏறி புளியம் பழம் உலுக்கியதை எப்படி மறக்க முடியும்? அக்கம் பக்கத்துப் பெண்கள் பாவாடையில் அள்ளிக்கொண்டு போனதையும் மறக்க முடியவில்லை.

அதை வெட்டி விறகுக்கோ வீட்டுக்கோ என்ன எழவுக்கோ விற்றதை நினைத்து நான் ரத்தக் கண்ணீர் வடித்தது இவனுக்குத் தெரியாது, சொன்னாலும் புரியப் போவதில்லை.

“பாதிரி, ருமானி மாமரம் என்னாச்சு?”

“அதையெல்லாம் முன்னயே வித்துட்டமே, நல்ல விலைக்குப் போச்சு”

அம்மாவின் முலைப்பாலுக்கு அடுத்தபடி அந்த ருசிதான் என் ரத்தத்தில். அதையும் வெட்டிப் போட்டாயிற்றா? பலே! என்னையும் சேர்த்தே வெட்டிப் போட்டிருக்கலாம். 

இப்படி வெட்டியாக எழுதிக் கொண்டிருப்பதாவது மிச்சமாக இருந்திருக்கும்.

:கொய்யா என்னாச்சுன்னு நீ கேட்கலியே?”

“வேண்டாம், சொல்லாதே, இனிமேல் தாங்க எனக்கு திராணி இல்லை” மனசுக்குள் முனகினேன்.

முல்லையும், முருங்கையும், சம்பங்கியும், நித்தியமல்லியும், வெண்டையும், சாமந்தியும், புடலையும், கறிவேப்பிலையும், வாழையும் …..வேண்டாம், வேண்டாம் 

சொல்லாதே சொல்லாதே சொல்லாதே, சொல்லிச் சொல்லிக் கொல்லாதே, ப்ளீஸ்!

“நீ கூட அந்த ஹேமமாலினி பொண்ணோட பேசிண்டிருப்பியே, முல்லை மரத்தடியிலே, ஏணியில கூட ஏறித் தடுக்கி விழுந்தியே அவளுக்கு பூப் பறிக்கும்போது …?”

இன்று தான் செத்துப் போவேனோ இரண்டாம் முறையாய்?

அவசர அவசரமாக, ஒரு தற்காப்பு முயற்சியில் ஈனஸ்வரத்தில், பேச்சை மாற்றும் கடைசி முயற்சியாய்க் கேட்கிறேன்: “கொல்லையில இருந்த லிங்கம், நாகர், புள்ளையார் சிலைகள் எல்லாம் என்னாச்சு?”

வீட்டுக்கு நேர் எதிரே குளம். குளக்கரை அரச மரத்தடியில் பெரிய லிங்கம். ஓம் சிவோஹம், ருத்ர நாமம் பஜேஹம் என்று சும்மா அது மாட்டுக்கு உட்கார்ந்திருக்கும். 

அதில் ஊர்க்காரர்கள் துணி துவைத்து அசிங்கப்படுத்துகிறார்களே என்று தவித்துப்போய், தூக்க முடியாமல் தூக்கி வந்து எங்கள் வீட்டுக் கொல்லையில் எந்த மந்திர கோஷமுமில்லாமல் என் குழந்தைக் கைகளால் புனருத்தாரண கும்பாபிஷேக மஹாபிஷேகம் செய்யப்பட்ட சிவாம்சம். கூடவே பிள்ளையார், நாகர், இன்னபிற சில்லுண்டி தேவதைகள். என் நண்பர்கள்.

“வீட்டை வாங்கிருக்கிறவர் நாஸ்திகராம். எல்லா சிலைகளையும் கொண்டு போய் ஐயாரப்பன் கோவில்ல கொடுத்துட்டாராம். அவா பத்திரமா பாத்துப்பா”

முகமறியா நாஸ்திகருக்கு என் நமஸ்காரங்கள். உம் காலில் விழுகிறேன் ஐயா.

வீடாவது, மண்ணாங்கட்டியாவது, எல்லாம் மாயைடா, மாயை.

‘ப்ரம்ம ஸத்யம்; ஜகன் மித்யா; ஜீவோ ப்ரம்மைவ நாபர’
 

Comments are closed.