அபிலாஷ் என்னுடைய இரண்டாவது நாளையும் வீணடித்து விட்டார், என் மீது காறித் துப்பிய நபருக்கு வக்காலத்து வாங்குவது மூலமும், என்னிடம் சம்பந்தமே இல்லாமல் மன்னிப்புக் கேட்பதன் மூலமும். பின்வரும் பதிவைப் படித்துப் பாருங்கள். இது அபிலாஷ்:
மன்னிப்பு
அவர் என் நண்பர்களில் ஒருவர். நேர்மையானவர், வெளிப்படையானவர், பொய்யில்லாதவர், ஒரு இலக்கிய இதழைக் கொண்டு வர கடுமையாக உழைப்பவர். அதே நேரம் சற்று துடுக்கானவர். தனது விழுமியங்களுக்கு எதிரானவர்களை கடுமையாக சாடி எழுதுபவர். அவருடைய ஒரே பிரச்சனை, என்னைப் பொறுத்தவரையில், அவருடைய வாசிப்பு நவீன காலத்துடன் நின்று விட்டது என்பது. விளைவாக அவருக்கு சாருவின் எழுத்தின் முக்கியத்துவம் புரியவில்லை. ஆனால் ஒருநாள் அவருடைய வாசிப்பும் அடுத்த கட்டத்தை எட்டும் என நம்புகிறேன். ஏனென்றால் அவருக்கு ஒரு நேர்மை உள்ளது. நேர்மையாளர்கள் மெல்ல மெல்ல தம்முடனே மோதி தமது போதாமைகளைக் கடந்து மேலெழுந்து விடுவார்கள்.
இந்த இடத்தில் நான் செய்த சில தவறுகளையும் இங்கு சொல்ல வேண்டும். முதல் தவறு: சாருவின் பேட்டியைப் பார்த்து விட்டு அதில் இருந்து ஒரு மேற்கோளை (ரஜினி vs கமல்) எடுத்து இங்கே பகிர்ந்தது. ”அவர்” ஒரு கமல் ரசிகர் என்பதால் என் பதிவில் அதைக் கண்டித்து பின்னூட்டங்களை இட்டார். பல எதிர்வினைகள் அடுத்தடுத்து வர, அவர் அவற்றால் உந்தப்பட்டு சாருவை கலாய்க்கும் நோக்கில் “பிசாசு” படத்தைப் பற்றி ஒரு பதிவிட்டார். நான் அதற்கு ஒரு கண்டனத்தை எழுதினேன். அதை பதிவேற்றும் முன்பு ”அவரி”டம் “இப்படி ஒன்றை பதிவிடுகிறேன், படித்து விட்டு என்னிடம் பகை பாராட்ட வேண்டம், இது ஒரு விவாதம் மட்டுமே” என்று சொன்னேன். சாருவைப் பற்றினதாக நம்பப்படும் மிஷ்கினின் அந்த படக் காட்சியைக் கண்டிப்பதும், சாரு மீதான சாடலுக்கு ஒரு பதில் அளிப்பதுமே என் நோக்கமாக இருந்தது. “அவரும்” அதை sportiveஆக எடுத்துக் கொண்டார்.
என் தவறு இதற்கு நடுவே சாரு எனும் மனிதர் இருக்கிறார் என கணக்கில் கொள்ளாததே. கூடவே சாருவின் வாசக நண்பர்களும் என் நண்பர் மீது கொந்தளிப்பார்கள் என நான் எதிர்பார்க்காததே.
இரவு முழுக்க எழுதி விட்டு நான் தூங்கி எழ நேரமாகி விட்டது. காலையில் பார்த்தால் ஒரே ரத்தக்களறியாக இருக்கிறது. சாரு என்னிடம் தன் ரத்தக்கொதிப்பு ஏறி விட்டது, மொத்த நாளும் வீணாகி விட்டது என கவலையைத் தெரிவித்தார். நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். ”என் நண்பர்” தன்னைப் பலரும் கண்டிக்கிறார்கள், தனக்கு எதிராக வழக்குப் போடப் போவதாகக் கூட பேசுகிறார்கள் என்று வருந்தினார். என் பதிவில் ”என் நண்பரின்” ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்ததுதான் பிரச்சனையாகி விட்டது என நான் புரிந்து கொண்டேன். இரு தரப்பின் உணர்வு நிலைகளை நான் கருத்திற் கொள்ளாமல் அதைப் பகிர்ந்தது தவறாகி விட்டது – நான் பொதுவாக ஒரு பதிவிட்டிருந்தால் அது இவ்வளவு பிரச்சனைகளுக்கு களம் உருவாக்கியிருக்காது. “என் நண்பர்” தன் பதிவில் distasteful ஆக ஏதும் இருக்கிறதா என கவலையில் இருந்தார். ஒரு பக்கம் சாருவை கொதிப்படைய செய்ததற்கான என் குற்றவுணர்வு, இன்னொரு பக்கம் என் நண்பருக்கு எதிராகத் தொடர்ந்து வரும் சாடல்களுக்கு வழிவகுத்து விட்டோமே எனும் வருத்தம். நான் அவரை எனக்குத் தெரிந்த அளவில் ஆறுதல்படுத்தினேன்.
என் நோக்கம் இப்படியாக இது முடிய வேண்டும் என்பதல்ல. ஆனால் ஒரு விபத்தைப் போல இது நடந்தேறி விட்டது.
என் நண்பரைப் பொறுத்தமட்டில் சாருவுக்கு எதிரான அவருடைய கருத்துக்கள் அவருடைய வாசிப்புப் போதாமையில் இருந்து, அவருக்குள் இருக்கும் liberal humanist சிந்தனையில் இருந்து வருகிறது. அவர் வெளிப்படையாக தன் கருத்துக்களை கூறுபவர், நேர்மையாளர் என்பதாலே தன் வாசிப்பிலும் சிந்தனையிலும் முன்னேறி சமகால வாசிப்புப் போக்குக்கு வந்து விடுவார், ஒரு உலக வாசகராக மலர்வார் என நம்புகிறேன். கோகுல், உங்கள் மீது கடும் விமர்சனங்கள் பாய நானும் காரணமாக அமைந்து விட்டேன். என்ன மன்னியுங்கள்.
சாரு, இந்தளவுக்குக் காயப்படுவார், மனதளவில் பாதிப்படைவார் என நான் கணிக்கவல்லை. அவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இதில் இருந்து நான் கற்றுக் கொண்ட படிப்பினை: நோக்கம் சரியாக இருந்தாலும் அடுத்தவரின் சண்டையை நாம் செய்யக் கூடாது. இதை நான் எதிர்காலத்தில் பின்பற்ற முயல்கிறேன்.
இத்துடன் முடித்து கொள்வோம்!
***
எப்படி முடித்துக் கொள்வது அபிலாஷ்? இன்று நீங்கள் திரும்பவும் கிளறி விட்டிருக்கிறீர்கள். இதையும் யாரோ ஒரு தெருவில் போகிறவன் செய்திருந்தால் நான் கண்டு கொள்ளாமல் கடந்திருப்பேன். எழுதியிருப்பவர் என் நண்பர் அபிலாஷ். சாதாரண நண்பர் அல்ல. தமிழ்நாட்டில் மிகவும் மதிக்கும் புத்திஜீவி. மற்றவர்களுக்காகச் சொல்கிறேன். புத்திஜீவி என்றால் படித்தவன். நீங்களே எப்படி இருக்கிறீர்கள் பாருங்கள். அவர் என்ன சொல்கிறார்? மிஷ்கின் படத்தின் திருடனை சாரு என்கிறார். இது பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். ஏன் இப்படி எல்லா எழுத்தாளர்கள் மீதும் காறி உமிழ்கிறாய்? அதற்கு அந்த நபர் என்ன பதில் சொல்கிறார்? ”எல்லா எழுத்தாளர் மீதும் என்று சொல்வது அபாண்டம். சாரு மீது மட்டும்தான்” என்கிறார்.
என்னைத் திருடன் என்று ஒருவர் சொல்கிறார். காறி உமிழ்கிறேன் என்கிறார். நீங்கள் அரசாங்க வக்கீல் மாதிரி இரண்டு பேருக்கும் நான் தவறு இழைத்து விட்டேன், இரண்டு பேரையும் காயப்படுத்தி விட்டேன், இரண்டு பேரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்கிறீர்கள். நீங்கள் நாகார்ச்சுனாவுக்கே விளக்கம் சொல்பவர் அபிலாஷ். அதனால்தான் நான் மதிக்கும் புத்திஜீவி என்றேன். அராத்து நீங்கள் படித்த, நான் படித்த ஒரு புத்தகம் படித்ததில்லை. நானே பல சமயங்களில் அவரை “படிக்காத மேதை” என்று கிண்டல் செய்வதுண்டு. அவர் உங்கள் பதிவிற்கு என்ன பதில் எழுதியிருக்கிறார் பாருங்கள். அதுதான் என்னுடைய கருத்தும்:
ரேப்பிஸ்ட் + ரேப் செய்யப்பட்டவள் இருவரும் என் நண்பர்கள். இருவருக்கும் என் வீட்டில் அறை ஒதுக்கி நானும் தவறிழைத்து விட்டேன். இருவரின் வலிகளையும் புரிந்து கொள்கிறேன்.
ரேப் விக்டிம் என்னை அழைத்துக் கதறினாள். வருத்தமாக இருந்தது. ரேப்பிஸ்ட் என்னை அழைத்து எல்லோரும் என்னைத் திட்டுகிறார்கள். அரெஸ்ட் செய்து விடுவார்கள் என பயமாக இருக்கிறது என்று வருந்தினார். பாவமாக இருந்தது.
ரேப்பிஸ்ட் போர்ன் படத்தைத் தாண்டி எதையும் இன்னும் பார்க்கவில்லை. அதனால்தான் இந்த ரேப் நடந்தது. ரேப் செய்ய வேண்டும் என்று தோன்றினால் நேர்மையாக – மனதுக்குத் தோன்றியதை செய்து விடுவார்.
அவர் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வரும் நாட்களில் அவர் போர்ன் படங்களை விட்டு விட்டு கலைப் படங்களைப் பார்க்க வந்து விடுவார். இப்போது கூட மலையாள ஷகிலா படங்களில் இருக்கும் போதாமைகளைக் கண்டு கொண்டு அதில் இருந்து வெளியேறி , ராஜ் குந்த்ரா படங்கள் பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்.
இனி நான் கவனமாக இருப்பேன். நல்ல நோக்கத்துக்காகத்தான் என் வீட்டில் இருவருக்கும் அறை ஒதுக்கினேன். இனி இன்னும் கவனமாக இருப்பேன். இருவரும் பாவம் தான்.
***
இப்படி எழுதியும் உங்களுக்குப் புரியவில்லை. “யோவ், என்னய்யா ஒப்பீடு இது?” என்று பின்னூட்டத்தில் கேட்கிறீர்கள். உங்களுக்குக் கடைசி வரை புரியவே இல்லை.
ஒரு குழந்தையை ஒருத்தன் ரேப் பண்ணுகிறான். அவனும் குழந்தையும் ஒன்று என்கிறீர்கள் அபிலாஷ். இதுதான் பிரச்சினை. இது ரேப்பா என்றால் ஆமாம். எந்தக் காரணமும் இல்லாமல் என்னைத் திருடன் என்று சொல்வதும், காறி உமிழ்வேன் என்று சொல்வதும் ரேப் இல்லாமல் வேறு என்ன அபிலாஷ்? சொல்லுங்கள், கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வளவெல்லாம் எழுதாமல் சாந்தமாக ஒரு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஏனென்றால், அந்த நபரை ராம்ஜி தொடர்பு கொண்டு அந்தப் பதிவை நீக்கி விட்டு மன்னிப்புக் கேட்கச் சொல்லியும் அவர் அதைச் செய்யவில்லை. ஏனென்றால், நீங்கள் சொல்வது போல் அவருக்குத் தான் செய்ததில் எந்தத் தப்பும் தெரியவில்லை. இத்தனை படித்த உங்களுக்கே தெரியவில்லையே? அவருக்கு எப்படித் தெரியும், சொல்லுங்கள்.
அராத்து எழுதிய பிறகும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் உங்களிடம் empathy இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது அபிலாஷ். இப்படி எழுதுவதற்கு என்னைத் தயவுசெய்து மன்னியுங்கள். 45 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து ஒருவர் “சாரு மீதுதான் காறி உமிழ்ந்தேன், மற்ற எழுத்தாளர்கள் மீது அல்ல” என்று எழுதுகிறார். ஒரு படத்தில் வரும் திருடனை சாருவைப் பார்த்துத்தான் இயக்குனர் அந்தப் பாத்திரத்தை உருவாக்கினார் என்று உதவி இயக்குனர் சொன்னார் என்று கிசுகிசு எழுதுகிறார். உங்களுக்கு சாருவின் வலி புரியவில்லை. இதை எழுதியவர் ”என் நண்பர்களில் ஒருவர். நேர்மையானவர், வெளிப்படையானவர், பொய்யில்லாதவர், ஒரு இலக்கிய இதழைக் கொண்டு வர கடுமையாக உழைப்பவர்” என்று எழுதுகிறீர்களே அபிலாஷ்? நீங்கள் படித்த ஃபூக்கோ, தெரிதா, ரொலான் பார்த் எல்லாம் நேர்மைக்கு என்ன அர்த்தம் சொல்கிறார்கள்? ஒரு குறிப்பிட்ட வன்முறைச் சம்பவத்தை dissect செய்யும் போது மட்டும் எப்படி அபிலாஷ் உங்கள் உடம்பில் நாகர்கோவில் ராமசாமியின் ஆவி புகுந்து கொண்டு நேர்மை, சத்தியம் என்று பேச ஆரம்பித்து விடுகிறது? எப்படி அபிலாஷ் இந்தக் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை நடந்தது?
நேர்மை என்றால் என்ன பொருள் அபிலாஷ்? சகாயம் நேர்மையான அதிகாரியா? உங்கள் அர்த்தப்பிரகாரம் தேவாரமும் நேர்மையான ஆள்தான். தன் நம்பிக்கைக்கு நேர்மையாக இருந்தார் இல்லையா? இந்த தேசத்தின் சீர்குலைவுக்கு நக்ஸல்பாரிகளே காரணம் என்று நம்பி, தர்மபுரியில் ஆதிவாசிகளை நக்ஸலைட்டுகள் என்று நினைத்து சுட்டுக் கொன்றார். அதில் ஒன்றிரண்டு ஒரிஜினல் நக்ஸலைட்டுகளும் செத்தார்கள் என்றாலும் பெரும்பாலும் செத்தது ஆதிவாசிகள். அந்தப் போராட்டத்துக்காக தேவாரமும்தான் இரவு பகலாகக் கண் விழித்தார். ஊண் இல்லை. உறக்கமில்லை. அவரே கூட கொல்லப்பட்டிருக்கலாம். உயிரைக் கொடுத்துப் போராடினார். அவர் நேர்மையாளரா? 45 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் ஒருவனை உங்கள் நேர்மையான நண்பர் குப்பை என்று சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. திருடன் என்று சொல்லவோ காறி உமிழவோ என்ன உரிமை இருக்கிறது? இதற்கும் ரேப்புக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று எனக்குத் தயவுசெய்து சொல்லுங்கள் அபிலாஷ்? அவருக்குப் பிடித்த மாதிரி நான் எழுதவில்லை என்றால் காறி உமிழ்ந்து விடுவாரா? அப்படியானால் என் கடவுளை இழிவு செய்யும் ஒரு நாஸ்திகன் மீது நான் காறி உமிழ்ந்தால் எங்கள் ரெண்டு பேரையும் சமம் என்பீர்களா நீங்கள்?
ஏதோ ஜெயமோகன் ரேஞ்ஜுக்கு அந்த நபரை வைத்துப் பேசியிருக்கிறீர்களே? அவர் யார்? என்ன எழுதியிருக்கிறார்? அவருடைய விழுமியங்கள் என்ன? ஒரு பெண்ணை ஒருவன் ரேப் பண்ண முயற்சிக்கிறான். அவள் எதிர்க்கிறாள். அங்கே வரும் போலீஸ் ”யேய், என்ன அங்கே சத்தம்? ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்றீங்க? சமாதானமாப் போங்க” என்று சொல்வது போல் இருக்கிறது. இங்கே யார் victim அபிலாஷ்? அடித்தவனா? அடி வாங்கினவனா? மேலும், விழுமியம் என்ற வார்த்தையை யாருக்குப் பயன்படுத்துவது? ஹிட்லரைப் போன்ற ஒரு ஃபாஸிஸ்டுக்கா? ஐயோ, இதெல்லாம் பெரிய வார்த்தை என்று சொல்லாதீர்கள். நான் ரசிப்பது போல் எழுதாதவன் திருடன், நான் ரசிப்பது போல் எழுதாதவன் மீது காறித் துப்புவேன் என்பவன் ஃபாஸிஸ்ட் இல்லாமல் வேறு என்ன? அப்படிப்பட்டவருக்கு என்ன விழுமியம் இருக்க முடியும்?
நேற்று நீங்கள் உங்களுடைய ’நேர்மையான’ ’நண்பரு’டைய அவதூறை எடுத்துப் போட்டு அது குறித்து என் சார்பாகப் பேசியதற்கு இன்று மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்கள். வாஸ்தவத்தில் நீங்கள் நேற்று எழுதியதில் எந்தத் தவறுமே இல்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் வாய் மூடிக் கொண்டு இருக்கும்போது நீங்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு எழுதினது மெத்த சரி. நீங்கள் என் நெருங்கிய நண்பர் என்பதால் அது என் பார்வைக்கு வந்து நான் அதனால் பாதிக்கப்பட்டாலும் ஒரு படைப்பாளி நீங்கள் செய்தது போல்தான் செய்வான். இல்லாவிட்டால் அவன் படைப்பாளியாகவே இருக்க முடியாது. உணர்வெழுச்சிகளுக்கு ஆட்பட்டு எதிர்வினை ஆற்றுபவன் தான் படைப்பாளி. ஆனால் இன்று நீங்கள் மன்னிப்புக் கேட்டு எழுதி, குற்றவாளியையும் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவனையும் ஒரே தட்டில் வைத்து எழுதியிருப்பதுதான் மன்னிக்க முடியாத தவறு. அதை அராத்து சுட்டிக் காட்டியும் புரிந்து கொள்ளாமல் யோவ், என்னய்யா ஒப்பீடு இது என்று அதட்டுவது உங்களின் ’நேர்மையான நண்பர்’ செய்ததற்குச் சமமான அவமானம். அந்த நண்பரின் பெயரைச் சொல்லி ”உங்கள் மீது கடும் விமர்சனங்கள் பாய நானும் காரணமாக அமைந்து விட்டேன். என்ன மன்னியுங்கள்” என்று எழுதியிருக்கிறீர்களே? இதற்கு அராத்து எழுதியதுதான் பதில்.
ஒரு எழுத்தாளனைப் பார்த்து நீ திருடன் என்றும் உன் முகத்தில் காறி உமிழ்வேன் என்றும் எழுதி விட்டு, அந்தப் பதிவை நீக்க மாட்டேன் என்று அராஜகம் செய்யும் ஒருவரை எல்லோரும் திட்டத்தான் செய்வார்கள். அதனால் அவர் மன உளைச்சல் அடைந்தார் என்றால் நீங்கள் ஏன் அவரிடம் மன்னிப்புக் கேட்கிறீர்கள்? நீங்களா என் மீது காறி உமிழ்ந்தீர்கள்? இதில் வேறு literal ஆக அர்த்தப்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்கிறீர்கள். ஒருவன் என்னைப் பார்த்துத் திருடன் என்கிறார். காறி உமிழ்கிறேன் என்கிறார். இதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது என்று நீங்கள் எனக்குச் சொல்லுங்கள்.
நேற்று நடந்தது தவறு என்கிறீர்கள். ஆனால் ஏன் தவறைச் சரி செய்கிறேன் என்று மகா பெரிய குண்டாந்தடி அடியை அடிக்கிறீர்கள் அபிலாஷ்? உண்மையில் இன்று நீங்கள் எழுதிய மன்னிப்பு தான் கொடூரமான தவறு.
”அவரைப் பொறுத்தமட்டில் சாருவுக்கு எதிரான அவருடைய கருத்துக்கள் அவருடைய வாசிப்புப் போதாமையில் இருந்து, அவருக்குள் இருக்கும் liberal humanist சிந்தனையில் இருந்து வருகிறது.” இல்லை, அபிலாஷ். எனக்குப் பிடிக்காதவன் மீது காறி உமிழ்வேன் என்பது இன்றைய ஃபாஸிஸம். ஜெயமோகனின் பல வாசகர்கள் இப்படி இருப்பதைக் காண்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெயமோகனின் வாசகர் ஒருவர் இளம் வயதில் மரணமடைந்தார். மிகவும் இளம் வயது. ஜெயமோகன் இரங்கல் எழுதியிருந்தார். எனக்கு ரொம்பவும் வருத்தமாகி விட்டது. அவர் யார் என்று போய்ப் பார்த்தேன். ஏதோ ஓரிரு கட்டுரைகள் எழுதியிருந்தார். பார்த்தால், சாரு ஒரு பொறுக்கி, திருடன் என்பது மாதிரியான தத்துவ முத்துகள். பார்த்தீர்களா? இப்படித்தான் ஃபாஸிஸம் உருவாகிறது. நம் தலைவன் மாதிரி ஒருத்தன் எழுதவில்லையா? அவன் மூஞ்சியில் காறித் துப்பு.
ஆனாலும் இந்தப் பாலைவனச் சூழலில் எனக்கு இரண்டே இரண்டு நண்பர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேர் மட்டுமே என்னை மிகச் சரியான இடத்தில் பொருத்தி எழுதியிருக்கிறார்கள். ஒருவர் பெயர் அபிலாஷ். இன்னொருவர் ஜெயமோகன். அதனால் எக்காரணம் கொண்டும் உங்கள் இருவரையும் என்னால் விட முடியாது. இருக்கும் இரண்டே இரண்டு ஆதரவாளர்களையும் இழந்து விட்டால் என் கதி என்ன ஆவது?
ஆனால் ஒரு விண்ணப்பம் அபிலாஷ். ஒரு இரண்டு நாட்கள் நாம் இருவரும் அமைதியாக இருப்போம். பௌத்தம் பயின்ற, நாகார்ச்சுனாவுக்கு வியாக்கியானம் சொல்கின்ற உங்களால் அது முடியாதா?
25 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ஸீரோ டிகிரியை நான் தான் எழுதிக் கொடுத்தேன் என்றார். நான் பதில் சொல்லவில்லை. அப்போது நான் நாஸ்திகன். ஆனாலும் natural justiceஐ நம்பினேன். ஞாநி ஏன் நீங்கள் பதில் சொல்லவில்லை, அப்படியானால் உண்மையா என்றார். நான் மௌனம் காத்தேன். பிறகு அந்த நபருக்கு என்ன ஆயிற்று என்று ஊர் அறியும், உலகம் அறியும். அதன் பெயர்தான் இயற்கையின் நீதி. அந்த நீதியினால் எனக்கு எந்த சந்தோஷமோ துக்கமோ இல்லை. சுவற்றில் பந்தை வீசினால் அது திருப்பி அடிக்கும் என்பது பௌதிக விதி. யாரும் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் நேர்மையான நண்பர் இப்போது சுவரில் பந்தை வீசியடித்திருக்கிறார். கொஞ்சம் பொறுத்துப் பாருங்கள் அபிலாஷ். நீங்கள் நாஸ்திகர். அதனால் இயற்கை என்று எழுதியிருக்கிறேன்.
இந்தப் பிரச்சினை பற்றிக் கேள்விப்பட்ட என் இளம் சிநேகிதி ஒருவர் – அவர் தமிழ்தான் என்றாலும் தமிழ் இலக்கியச் சூழல் பற்றி அதிகம் அறிந்து கொள்ள விரும்பாதவர், ஆங்கில எழுத்தாளர் – எனக்கு ஒரு மெஸேஜ் அனுப்பியிருந்தார். அதை நான் நள்ளிரவில்தான் பார்த்தேன். அதை மட்டும் நான் காலையில் பார்த்திருந்தால் அதன் wisdom என் உள்ளே போயிருக்கும்.
In your place, I would put up a post saying:
I have been asked by a lot of people about a recent post that was intended as an insult to me. I tried to read it, but I got bored. An offensive post would *interest* me if it had nuance and rhythm and originality of image. But I suppose someone who can create prose of that kind would write novels, not Facebook posts 😉 And so, with that, I take your leave to return to my writing desk. Anyone who wants a quote from me on this issue may feel free to use all or part of this post.
Period.