எல்லோருமே உச்சக்கட்ட படைப்பாளுமையின் வெறிக்கூச்சலோடுதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பித்தநிலையின் உச்சம் என்றே சொல்லலாம். எவரைக் கேட்டாலும் அதேதான் சொல்லுவார். அந்த நிலையை அடையாதவன் எழுத்தாளனே இல்லை. அந்த நிலையில் எழுதுகிறேன் என்பவர் சகாயம் லஞ்சம் வாங்காமல் வாழ்கிறேன் என்று சொல்வது மாதிரிதான்.
யார் மீதும் எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை. இன்று எனக்கு 68 வயது முடியப் போகிறது. இனிமேலான நாட்கள் எனக்கு போனஸ். யார் தயவிலும் வாழாமல் போய் விட வேண்டும் என்பதே என் ஆசை. அதுவும் இறை சக்தியின் கையில்தான் இருக்கிறது. இன்னும் ஐந்து நாவல்கள் பாதி முடிந்த நிலையில் இருக்கின்றன. இன்று இரவே கிளம்பினாலும் அவை பாதி முடிந்த நிலையிலேயே வெளிவருவதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டேன். 25 ஆண்டுகளாக சுமந்து வந்த சுமையை இறக்கி வைத்துப் பல காலம் ஆகி விட்டது. இரண்டு முறை மரணத்தைத் தொட்டு விட்டு வந்த போது.
இந்த நிலையில் எனக்கு யாருடைய ஆசீர்வாதமோ யாருடைய மன்னிப்போ தேவையில்லை. ஒரு சின்னப் பையன் – என் மகன் போன்றவன் – இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறான் – அவன் அந்த மன்னிப்பையும் ஆசீர்வாதத்தையும் என் கவனத்துக்குக் கொண்டு வந்தான். மற்றவர்களைச் சீண்டுவது எனக்கு ஆகாது. அதிலும் மற்றவர்களின் ஈகோவைச் சீண்டுவது அரவத்தைச் சீண்டுவது போல. காலச்சுவடு பேட்டி பற்றி என் மகனிடம் சொன்னேன். ஆதாரமாகக் காட்ட என்னிடம் காலச்சுவடு இல்லை. இருந்தாலும் கூட என்னால் தேட முடியாது.
ஏன், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் கூட ஞாநி ஒரு கூட்டத்தில் “இன்னார் (இவர் பெயரைக் குறிப்பிட்டு) காலச்சுவடு பத்திரிகையில் ஸீரோ டிகிரி நாவலைத் தான் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லியிருந்தாரே? உங்கள் பதில் என்ன? 20 ஆண்டுகளாக ஏன் பதில் சொல்லவில்லை? பதில் சொல்லாவிட்டால் அதை ஒப்புக்கொள்கிறீர்கள் என்றுதானே பொருள்?” என்று கேட்ட போதும் மௌனமே சாதித்தேன்.
இன்று ஒரு பொடியன் என் மீது காறித் துப்புகிறேன் என்று சொன்னதால் அவனுக்கு நடக்கப் போகும் இயற்கை விளைவை நினைத்து அஞ்சியே அந்த வார்த்தையைச் சொன்னேன். ஒரு மேடையிலேயே வைத்து ஞாநி என்னை அசிங்கப்படுத்தியபோது கூட நான் மௌனம் சாதித்தவன். இத்தனைக்கும் அது என் புத்தக மதிப்புரைக் கூட்டம். ஞாநி விசேஷ விருந்தினர்.
குப்பையைக் கிளறி விட்டேன். நாறும்.
பதினைந்து வயதில் இரண்டு பேரால் வன்கலவி செய்யப்பட்ட பெண்ணிடம் 25 வருடம் கழித்து வந்து இருவரில் ஒருவர் அப்படி எதுவும் நடக்கவில்லையே என்றால் எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. ஆதாரம் காலச்சுவடு பத்திரிகையில் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முந்தைய இதழ். அது ஒரு பேட்டி. நான் யார் பெயரையும் சொல்ல விரும்பவில்லை. இதெல்லாம் எனக்கு முந்தின ஜென்மத்து ஞாபகங்களாகி விட்டன. ஆனால் ஞாபகத்தில் பிசகில்லை. வாங்கின சூடு ஆன்மாவில் பட்ட வடு. ஏனென்றால், ஸீரோ டிகிரி என்பது என் ஆன்மாவின் வெளிப்பாடு. அதை இரண்டு பேர் வந்து நாங்கள்தான் எழுதிக் கொடுத்தோம் என்று சொல்லி விட்டு, இன்று 25 ஆண்டு கழித்து வந்து நான் எங்கேயும் அப்படிச் சொல்லவில்லை என்றால் என் 25 வயது பிள்ளைகள் என்னப்பா சொல்கிறீர்கள் என்று என் காலரைப் பிடிக்கிறார்கள்.
என்ன இது மேஜிகல் ரியலிஸமா? காலச்சுவடைப் போய்ப் பார்.
யாருடைய ஆசீர்வாதமும் எனக்கு வேண்டாம். கடவுள் எனக்கென்று என்ன தண்டனை கொடுத்திருக்கிறாரோ, என்ன வரம் கொடுத்திருக்கிறாரோ அது அது எனக்குக் கிடைக்கும். எந்த ஆசீர்வாதத்தினாலும் அல்லது சாபத்தினாலும் அதை மாற்ற முடியாது. ஏனென்றால், என் துன்பமும் என் மகிழ்ச்சியும் நான் முந்தின பிறவியிலும் இந்தப் பிறவியிலும் ஈட்டியது. ஏனென்றால் என் தாத்தன் சொன்னதை நான் நம்புகிறேன். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
நீங்கள் நன்றாக இருங்கள். சென்ற வாரம் கூட உங்கள் நாவலைத்தான் படித்துப் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருந்தேன். 30 ஆண்டுகளுக்கு முன் கற்றதைப் போலவே. பூரானைக் கூட காகிதத்தில் பிடித்து வெளியே விடும் அளவுக்குக் கனிந்து விட்ட நான் தங்களுக்குத் தீது நினைக்க மாட்டேன். தங்களைப் புண்படுத்தியிருக்கக் கூடாது. 25 ஆண்டுகளாகச் செய்யவில்லை. ஒரு 30 வயசுப் பொடியன் காறி உமிழ்ந்ததில் நிதானம் தவறி விட்டேன். அந்தச் சம்பவம் பற்றி 25 ஆண்டுகளாக நான் வாய் திறந்ததில்லை என்பதைத் தாங்கள் கவனித்திருக்கலாம்.
இனி இது பற்றியும் தங்களைப் பற்றியும் எதுவும் எழுத மாட்டேன். சத்தியம்.