கடந்த இரண்டு தினங்களில் நடந்த அக்கப்போர்களை மறந்து விடுங்கள். எல்லோருக்குமே வேலை இருக்கிறது. இந்த விஷயத்தில் என் சார்பாகப் பேசிய அத்தனை சக எழுத்தாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
எழுதாதவர்களும் என் அன்புக்குரியவர்களே. எழுதாதவர்கள் இது போன்ற அக்கப்போர்களில் எப்போதுமே குரல் கொடுக்காதவர்கள். அப்படிக் குரல் கொடுப்பது பைத்தியக்காரத்தனம் என்று நினைப்பவர்கள்.
எப்போதும் அமைதி காக்கும் சில எழுத்தாளர்கள் கூட இப்போது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். பெருந்தேவி, லதா ராமகிருஷ்ணன் போன்றோர். அவர்களுக்கும் என் நன்றி.
இவ்விஷயத்தில் வடசென்னை அன்பு, அசுரன் சிவசாமி போல் செயல்பட்ட காயத்ரிக்கு என் வாழ்நாள் முழுக்கவும் கடன்பட்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவர் “உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது” என்றார்.
என்னை அவதூறு செய்த அந்தச் சிறுவனை நினைத்தும் வருத்தமாகத்தான் இருக்கிறது. அவருடைய அகங்காரத்தையும் இரண்டு நாட்களாக அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய மன உளைச்சலையும் நினைத்து.
ஜெயமோகனை ஒரு ரவுடி அடித்த போது என் எதிர்ப்பை மிகக் கடுமையாக பல ஊடகங்களில் தெரிவித்திருந்தேன். எழுதியும் இருந்தேன். என் விஷயத்தில் சம்பந்தப்பட்டது ரவுடி அல்ல. ஒரு இணையப் பத்திரிகை ஆசிரியர். ஜெயமோகன் எனக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார் என்று நினைத்தெல்லாம் அவர் சார்பாக நான் பேசுபவன் அல்ல. ஆனாலும் அவர் மௌனமாக இருந்தது எனக்கு ஆச்சரியம்தான்.
ஜெயப்பிரகாசம், ஊட்டி அறிஞர் இருவரும் அவர் மீது அவதூறு செய்தபோது இப்போது காயத்ரி எனக்குச் செய்தது போல் நான் ஜெயமோகன் பக்கம் நின்று பேசினேன். அமெரிக்காவிலிருந்து ஒரு ஆள் ஜெயமோகனைத் திட்டி எனக்குக் கடிதம் எழுதிய போது அந்த ஆளை உண்டு இல்லை என்று பண்ணியிருக்கிறேன். பிறகு அவர் ஜெ.வின் ஆயிரம் கரங்களில் ஒரு கரமாக விளங்குவதையும் பார்க்கிறேன். ஜெயமோகன் மௌனமாக இருந்ததற்கு அவருக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். எனவே அவரது மௌனத்தையும் நான் மதிக்கிறேன்.
அந்த இணையப் பத்திரிகை ஆசிரியர் திருந்துவார் என்று தோன்றவில்லை. ”புத்தக விழாவில் ஒரு பார்ப்பான் வழி கேட்டான். பார்ப்பான் என்பதால் தப்பாகச் சொன்னேன். சாவட்டும்” என்று எழுதியவர் அந்த இலக்கியப் பத்திரிகை ஆசிரியர். எல்லாம் அவரவர் பாடு.
இதை இத்தோடு மறந்து விட்டு மேலே ஆக வேண்டியதைப் பார்ப்போம். எல்லொருக்குமே ஏகப்பட்ட வேலை கிடக்கிறது.