நேற்று சீனிக்கு ஒரு நண்பர் ஒரு செய்தி அனுப்பியிருந்தார். சாரு பாராட்டியவர்களிலேயே அவரை முதுகில் குத்தாத ஒரே ஆள் நீர்தான் என்று. சீனி விஷயத்தில் அது ஒருபோதும் நடவாது. சீனியை எனக்கு நன்றாகத் தெரியும். சீனி மட்டும் அல்ல. அதுபோல் இன்னும் ஓரிருவர் கூட உள்ளனர். காயத்ரி. ஒருவரைப் பிரிய நேர்ந்தால் கூட மௌனம் காப்பாளே தவிர முதுகில் குத்தும் பண்பெல்லாம் அவளுக்கு சுத்தமாகத் தெரியாது. யாரையும் மன்னிக்கும் மாண்பு கொண்டவள். அவள் அளவுக்கு மன்னிக்கும் தன்மை கொண்ட ஒரு மனித ஜென்மத்தை நான் கண்டதில்லை. இத்தனை முஸ்தீபும் எதற்கு என்றால் ஒருவரைப் பாராட்டப் போகிறேன். பாராட்ட வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இவர் வயது 25 இருக்கலாம். இவர் எழுதும் aphorism வகை எழுத்துகளை நான் இதுவரை தமிழில் படித்ததில்லை. ஃப்ரெஞ்சில் சியோரன் (Emil Cioran) எழுதுவார். சியோரன் ரொமானியன். ரொமானியனிலும் ஃப்ரெஞ்சிலும் எழுதியவர். இவர் பற்றிய அறிமுகம் 2000 டிசம்பரில் ஃபாரிஸில் கலாமோகன் மூலம் கிடைத்தது. சியோரன் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.
உலக அளவிலேயே சியோரன் மாதிரி aphorism எழுதியவர்கள் யார் இருக்கிறார்கள்? எனக்குத் தெரியவில்லை. தமிழிலும் யாரைச் சொல்லலாம்? குட்டிக் குட்டியான நீதிக் கதைகளை இந்த genreஇல் சேர்க்கலாமா? அவருடைய சில வார்த்தைகள்:
வாக்குமூலங்கள் கண்ணீர்த் துளிகளால் மட்டுமே எழுதப்பட வேண்டும். என் கண்ணீர்த் துளிகளோ இந்த உலகையே மூழ்கடித்து விடும். ஆனால் என் உள்ளே கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அதை சாம்பலாக்கி விடும்.
மிருங்கங்களுக்கான வாழ்க்கை அவற்றின் முன்னே கிடக்கிறது. ஆனால் மனிதனுக்கு வாழ்க்கை ஒரு கேள்விக் குறி. என்றுமே பதில் கிடைக்காத என்றுமே மீள முடியாத கேள்விக் குறி. வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாதது மட்டுமல்ல, இருக்கவே முடியாது என்பதுதான் உண்மை.
இப்படி ஆயிரக்கணக்காக சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தப் பாணியில் தமிழில் யார் எழுதுகிறார்கள்? ஒரே ஒருவர். மிகச் சமீபத்தில்தான் அவர் எழுத்து எனக்குப் பரிச்சயம். அரபி மொழியில் வல்லுனர். அப்படி அரபி மொழி வல்லுனராக இருந்தாலும் தமிழை மிக அழகாக எழுதுகிறார். ஷா உமரி என்று பெயர். அவருடைய நட்பு எனக்கு ஒரு பேறு. கீழே இன்று அவர் எழுதியது. இதற்கும் சமீபத்திய சம்பவங்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக என் மனம் சொல்கிறது. இனி ஷா உமரி:
ஈர்ப்பும் விலகலும் உள்ளத்திலிருந்து தாமாக உருவாகக்கூடியவை. ஒரு மனிதரின் மீது ஏற்படும் ஏதோ ஒரு விதமான, சொல்ல முடியாத ஈர்ப்பு அவரை நோக்கி நம்மைக் கொண்டு செல்கிறது. பேசுகிறோம். பழகுகிறோம். நட்பு கொள்கிறோம். அவரை நோக்கி நம்மை ஈர்த்த அந்த அம்சம் என்ன என்பதை நம்மால் அறுதியிட்டுக் கூற முடியாது. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு அம்சத்தை நாம் குறிப்பிடலாம். நாம் குறிப்பிடும் அதே அம்சம் மற்றவர்களிடம் காணப்படத்தான் செய்யும். ஆனால் நாம் அவர்களின் பக்கம் நெருங்கிச் செல்ல மாட்டோம்.
அப்படித்தான் விலகலும். ஏதோ ஒன்று அவருக்கும் நமக்கும் மத்தியில் ஒரு தடுப்பு போன்று அமைந்து விடுகிறது. அந்தத் தடுப்பு எது என்பதையும் நம்மால் அறுதியிட்டுக் கூற முடியாது. நெருங்கி இருப்பதற்கான, நட்பு கொள்வதற்கான சூழல் இருந்தும் நாம் நெருங்குவதில்லை, நட்பு கொள்வதில்லை. நாம் அதற்குப் பல காரணங்களை முன்வைத்தாலும் நமக்கும் அவருக்கும் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட தெளிவுபடுத்த முடியாத தடுப்பே அதற்கான ஒரே காரணமாக இருக்கிறது. நமக்குள் இருந்து எழுந்து வரும் ஈர்ப்பையும் விலகலையும் நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அவற்றை வெளிப்படுத்த நாம் முன்வைக்கும் காரணங்கள் சரியானவை அல்ல.
மனம் தனக்கு ஒத்திசைவான மனதை அறிந்துகொள்கிறது. அதன் பக்கம் நெருங்கிச் செல்கிறது. அது தன்னுடன் முரண்படக்கூடிய மனதுடன் நீடித்திருப்பதில்லை. மனிதர்கள் கொண்டிருக்கும் தொடர்புகளில் இந்த அம்சத்திற்கு முதன்மையான பங்கு உண்டு. ஒவ்வொருவரும் தமக்கு ஒத்திசைவான சிந்தனை கொண்டவர்களுடன் இணைந்திருக்கவே விரும்புகிறார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் எப்படியே இணைந்து விடுகிறார்கள். மற்றவர்கள் அருகருகே நெருங்கி இருந்தாலும் ஒன்று சேர்வதில்லை. அவர்களுக்கு மத்தியில் காணப்படும் அடையாளம் காண முடியாத தடுப்பு அவர்களைப் பிரித்து விடுகிறது.