அகர முதல்வியின் முதன்மைப் புதல்வனுக்கு வந்தனம்…

காட்சி ஒன்று:

நண்பர்கள் சிலர் திருவல்லிக்கேணி ஜானிஜான் கான் ரோட்டில் உள்ள ஒரு பேச்சிலர்ஸ் லாட்ஜில் ஒரு ரூமில் வைத்துத் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  காலை பதினோரு மணி.  எல்லோரும் எழுத்தாளர்கள்.  அவர்களில் அடியேனும் ஒருவன்.  மாலை ஐந்து மணி அளவில் நண்பர்களில் ஒருவர் என்னைப் பார்த்து “உங்களோட ஸீரோ டிகிரியே பிரேம் ரமேஷ் ரெண்டு பேரும் எழுதிக் கொடுத்ததுதானே?” என்கிறார்.  அவர் யார் என்றால் நான் வளர்த்தவர்.  குமுதம் படித்துக் கொண்டிருந்தவருக்கு லத்தீன் அமெரிக்க இலக்கியமும் புதுமைப்பித்தனும் சொல்லிக் கொடுத்தவன்.  இப்போது எழுத்தாளர்.  அவர் சொல்கிறார்.  அடிதடி மூள்கிறது.  செல்ஃபோன் இல்லாத காலம்.  நான் முரடன்.  பையாவை அழைக்க எதிரே உள்ள பெட்டிக்கடைக்குப் போகிறேன்.  பையா கிடைக்கவில்லை.  ரூமுக்கு வருகிறேன்.  அப்படிச் சொன்னவனை ஏதாவது செய்ய வேண்டும் என்று உடம்பு தகிக்கிறது.  என் சட்டை, பேண்ட், ஜட்டி எல்லாவற்றையும் கழற்றிப் போட்டு விட்டு அந்த வராந்தாவில் முன்னேயும் பின்னேயும் நடக்கிறேன்.

இப்படி லியர் அரசனுக்கு நடந்திருக்கிறது.  லியர் அரசனின் மனப்பிறழ்வு அப்படியே தங்கி விட்டது.  என் கூட இருந்த மற்ற ஒரு சிலரால் என் மனப்பிறழ்வு சரியாகி மீண்டும் ஆடைகளை அணிந்து கொண்டேன். 

ஆடைகளைத் திரும்ப அணிந்திராவிட்டால் இப்போதும் கீழ்ப்பாக்கம் மெண்ட்டல் அசைலத்தில் இருந்திருப்பேன்.  இங்கே இப்படி தட்டச்சு செய்து கொண்டிருக்க மாட்டேன்.

இதற்குக் காரணம் இரண்டு பேர் காலச்சுவடில் கொடுத்த பேட்டி, எழுதியிருந்த குறிப்புகள்.

அவர்கள் எழுதியிருந்தது:

சாரு நிவேதிதாவின் முதல் நாவலான ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்’ என்ற படைப்பு  பிரேம் எழுதித் தர – அதை தன் பெயரில் சாரு நிவேதிதா போட்டுக் கொண்டார்.  அதேபோல் ஸீரோ டிகிரி நாவல் ரமேஷ் எழுதித் தந்தது.  அதையும் தன் பெயரில் போட்டுக் கொண்டார்.  மேற்குறித்த இரு நாவல்களிலும் தனது குடும்பம் மற்றும் மனைவிமார்களைப் பற்றிய குறிப்புகள் தவிர மற்றவை அனைத்தும் பிரேம் : ரமேஷுடைய எழுத்துக்களாகும்.  இதை எம்.டி. முத்துக்குமாரசாமி, ராஜன் குறை, தி. கண்ணன், ரஃபி, கௌதம சித்தார்த்தன் போன்றவர்கள் அறிவார்கள்.

எழுதியவர்கள்:  அந்தக் காலத்தில் இரட்டையராக எழுதிய பிரேம் – ரமேஷ். 

இது காலச்சுவடு வெளியிட்ட உண்மை சார்ந்த உரையாடல் என்ற நூலின் 287, 288 ஆகிய பக்கங்களில் உள்ளன.  காலச்சுவடு இதழ் 29 (ஏப்ரல் – ஜூன் 2000) இதழில் வந்தது. 

காட்சி: இரண்டு

என்னுடைய ஒரு புத்தக அறிமுக விழா.  ஞாநி சிறப்பு அழைப்பாளர்.  ஞாநி பேசும் போது மேற்கண்ட கட்டுரையை மேற்கோள் காட்டி, ”நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை, ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார்.   மற்றவர்கள் எழுதியதை ஏன் நீங்கள் உங்கள் பெயரில் போட்டுக் கொண்டீர்கள் என்று கேட்டார். 

நான் பதில் சொல்லவில்லை. 

அறம் கதையில் எழுத்தாளனின் அடி வயிறு பற்றி எரிந்தது போல் என் வயிறு எரிந்தது.  நகரங்கள் எரியவில்லை.  வயிறு மட்டும் எரிந்தது. 

கடந்த 21 ஆண்டுகளில் இப்படி நூறு முறை எரிந்திருக்கிறது. 

இப்போது ரமேஷ் சொல்கிறார்.  ஐயோ, நான் அப்படியெல்லாம் எங்குமே சொல்லவில்லையே?  ஸீரோ டிகிரியில் ஒரு வார்த்தை என்னுடையது இல்லையே?

”சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவலை நான் எழுதித் தந்ததாகக் கடந்த இருபத்தைந்தாண்டுகளில் எங்கேயும் எழுதியதில்லை. அந்த நாவல் உருவான முறைமை குறித்து கி.ராவின் கதைசொல்லி இதழிலும், அப்பனுவலை நான் எடிட் செய்தேன் என்று ஆரண்யம் இதழிலும் குறிப்பிட்டிருந்தேன். நாவலில் எனக்கு நன்றி தெரிவிக்க சாரு நிவேதிதா முன்வந்தபோது அதை மறுத்தேன். அதை எம்.டி. முத்துக்குமாரசாமி அறிவார். அந்த நாவலில் ஒரு சொல்கூட என் கைப்பட எழுதவில்லை; வெட்டிக் குறைக்கவுமில்லை; கலைத்து இடம்மாற்றிப் பொருத்தினேன். கீதையிலிருந்து ஒரு மேற்கோளை முன்பக்கத்தில் வைத்தேன். இறுதியாக சாரு நிவேதிதா என்னிடம் சொன்னவாக்கியம் < ஓ.. நாவல் எழுதுவது சைக்கிள் ஓட்டுவது போலத்தானா..”

சாரு நிவேதிதா, உடம்பும் உள்ளமும் குன்றா நலமுடன் நீடுவாழ இயற்கையை வேண்டுகிறேன். அவரை நான் வலிக்கவைத்திருந்தால் மன்னிப்பைக் கோருகிறேன். நன்றி.”

மேலே உள்ளது ரமேஷின் வார்த்தைகள்.

21 ஆண்டுகளாக ரமேஷின் அவதூறினால் நான் அடைந்த அவமானங்கள், சுமந்த சிலுவையின் ரத்தக் காயங்கள், மனப்பிறழ்வுகளுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?

ஆடைகளைத் திரும்ப அணிந்து கொள்ள உதவிய அன்பு நண்பர்கள் அன்று இருந்திராவிட்டால் நான் ஒரு பைத்தியம்.  இதை உன்னால் திருப்பித் தர முடியுமா ரமேஷ்?

ஆனாலும் என்னைப் போலவே உனக்கும் எழுத்துதான் மூச்சு.  எழுத்தை ஆராதிப்பவர்களை நான் ஆராதிப்பவன் என்று உனக்குத் தெரியும் ரமேஷ்.  நான் நினைப்பதை நினைப்பவன் ரமேஷ் என்று ஒருமுறை உன் எதிரில் நான் சொல்லியிருக்கிறேன்.  நம் இருவரது தாயும் (உன்னோடு இந்த இலக்கியம் அறியாதவனைச் சேர்ப்பதை மன்னித்து விடு ரமேஷ்) ஒன்றேதான்.  அந்த அகரமுதல்வியின் முதன்மைப் புதல்வனான உன்னை எப்போதும் ஆராதிக்கிறேன்.  வாழ்த்துகிறேன்.  ஆசீர்வதிக்கிறேன்.