நான்தான் ஔரங்கசீப்… சந்தேகங்களும் கேள்விகளும்…

நான் தான் ஔரங்கசீப்… நாவல் பற்றிய தங்களுக்கு சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தால் அவற்றை அந்த பிஞ்ஜ் செயலியிலேயே கேட்கலாம். நான் இங்கே ப்ளாகில் பதில் தருகிறேன். அங்கே எனக்கு விரிவாகத் தட்டச்சு செய்யத் தெரியவில்லை. ஒற்றை விரலில் தமிழில் தட்டுவது கடினமாக உள்ளது.

ஒரு நல்ல இஸ்லாமியர் புனித ரமலான் மாதத்தில் போர் செய்ய மாட்டாரே என்று கேட்டிருக்கிறார் நஸீர் அஹ்மத்.

உண்மைதான். ஔரங்கசீப் மார்க்கத்துக்கு மிக மிக உண்மையாக வாழ வேண்டும் என்று நினைத்தார். அதன்படியே நடந்தார். ஆனால் அவர் 17 கோடி மக்களுக்கு அரசராகவும் இருந்தவர். போரில் ஈடுபடாவிட்டால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது; அண்டை நாட்டுக்காரர்கள் அடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்று அவர் நினைத்தார். ஃபிரங்கியர் – போர்த்துக்கீசியரும் பிரிட்டிஷ்காரர்களும் காத்துக் கொண்டு கிடந்தனர். அதனால் அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர்க்களத்திலேயே இருந்தார். அங்கேதான் தலைநகர். பாபர் நிம்மதியாக ஆண்டது மூன்று ஆண்டுகள்தான். மற்ற காலமெல்லாம் போர்க்களம்தான். ஒருநாள் பாபர் தன் நாட்குறிப்பில் எழுதுகிறார்: என் குடும்பம் ரமலான் நோன்பு துறந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நான் இங்கே ரத்த வெள்ளத்தில் மனிதர்களின், மிருகங்களின் சடலங்களின் மீது நடந்து கொண்டிருக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள். கேள்வி இருந்தால் தயக்கமின்றிக் கேட்கலாம்.