கலைஞனும் ரசிகனும்…

மேலே உள்ள இரண்டு வார்த்தைகளும் ஆண் மைய வார்த்தைகள்.  பொதுவாக நான் இப்படிப்பட்ட வார்த்தைகளைத் தவிர்க்கவே முயற்சிப்பேன்.  ஆனால் கலைஞி என்றால் நன்றாக இராது.  ”ன்” ஐ நீக்கி “ர்” போட்டால் வேறு அர்த்தமாகி விடும்.  எனவே மரபு ரீதியாகவே “ன்”னோடு விட்டேன்.  கலைஞன் என்ற வார்த்தை எழுத்தாளருக்கும் பொருந்தும்.  புதுமைப்பித்தன் ஒரு கலைஞன்.  ஆனால் ரசிகர் என்ற வார்த்தை வாசகருக்குப் பொருந்தாது.  வாசகர் என்பவர் என்பவர் ரசிகரை விட உசந்த நிலையில் இருப்பவர்.  எனவே மேலே உள்ள தலைப்பை நீங்கள் எழுத்தாளரும் வாசகரும் என்று மாற்றிக் கொள்ளலாம். 

எம்.கே.தியாகராஜ பாகவதருக்குப் பித்துப் பிடித்தாற்போல் ரசிகர்கள் இருந்தார்கள்.  எம்ஜியாருக்கும்.  மைக்கேல் ஜாக்ஸனுக்கும்.  நான் சொல்வது அசாதாரணமான எண்ணிக்கையையும் வேகத்தையும் சொல்கிறேன்.  ஒரு cult மாதிரி.  எழுத்தாளர்களுக்கு அப்படிப்பட்ட ரசிகர் கூட்டம் – வாசகர் கூட்டம் உள்ளதா?  சார்லஸ் ப்யூகோவ்ஸ்கிக்கு மட்டும் இருந்தது.  முராகாமிக்கு உலகம் பூராவும் இருக்கும் ரசிகர் கும்பலை நான் இதில் சேர்க்க மாட்டேன்.  வெறும் எண்ணிக்கையை அல்ல நான் சொல்வது.  எண்ணிக்கை என்றால், டோல்கீன் மாதிரி பலர் உளர்.  நான் சொல்வது, அந்த எழுத்தாளரின் வாழ்க்கையோடும் தத்துவத்தோடும் தன்னையும் அடையாளப்படுத்திக் கொள்வது.  முராகாமிக்கு அப்படிப்பட்ட தத்துவமெல்லாம் கிடையாது.  அவர் ஒரு கதைசொல்லி.  சுவாரசியமான கதைசொல்லி கூட இல்லை. 

இந்தியாவில் அப்படிப்பட்ட வாசகர் கூட்டத்தைப் பெற்ற எழுத்தாளர் யார்?  மாண்ட்டோவுக்கு அப்படி ஒரு கூட்டம் இருந்தது.  தாகூருக்கும் மஹாஸ்வேதா தேவிக்கும் இருந்தது.  கேரளத்தில் இப்படிப் பலர் உண்டு. 

தமிழ்நாட்டில் ஜெயகாந்தனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் பாலகுமாரனுக்கும் அப்படிப்பட்ட வெறித்தனமான வாசகர் கூட்டம் இருந்தது.   இவர்களில் இருவர் இலக்கியத்துக்குள் வர மாட்டார்கள்.  சு.ரா. மட்டும்தான் மீதி.  அதற்குப் பிறகு உருவான எழுத்தாளர் – வாசகர் உறவில் மிகத் தீவிரமான cult நிலையை அடைந்தவர்கள் இருவர்.  எஸ். ராமகிருஷ்ணனுக்கு மிகப் பரந்த வாசகர் கூட்டம் உண்டு என்றாலும் அவரது வாசகர்களிடம் எஸ்.ரா.விடம் இருப்பதைப் போலவே ஒரு மிதமான தன்மை உண்டு.  சூறாவளியும் இல்லை.  கொளுத்தும் வெயிலும் இல்லை.  நிதானம்.  ஆனால் மற்ற இருவரிடமும் எல்லா விதமான eccentricitiesஉம் உண்டு. கடுமையான பைத்தியக்காரத்தனமும் உண்டு.  எழுத்தாளர் போனால் மளிகைக்கடையில் கூட அடிதடி சண்டை நடக்கும்.  அடுத்தவர் திடீரென்று சபரிமலைக்கு மாலை போட்டுக் கொள்வார்.  அதற்கு முந்தின நாள் வரை நாஸ்திகம் பேசியவர்.  இதே பித்தம் இவரது வாசகர்களிடமும் வீசும். 

இருவரும் யார் என்று உங்களுக்குத் தெரியும்.  சற்று நேரத்துக்கு முன்னால் இருவரில் ஒருவனான எனக்கு வந்த கடிதத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.  இதை ஏன் உங்களுக்கும் வாசிக்கத் தருகிறேன் என்றால், எழுத்துக்கு இருக்கும் வலிமை தெரிய.  எழுத்து இந்த அளவு வலிமையானதா?  கடிதத்தைப் படித்த போது எனக்குள் ஏகப்பட்ட உணர்வெழுச்சிகள்.  இரண்டு நாட்களாக நான் செய்தது முட்டாள்தனம் என்று தோன்றியது.  ஒரு எழுத்தாளனுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் பொறுப்பு இருப்பது தெளிவாகவே தெரிந்தது.  நாம் செய்யும் காரியங்கள், நாம் எழுதும் சொற்கள் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றால் நாம் நமது உணர்ச்சிகளை மட்டுப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டேன்.  இத்தனை தீவிரமாக இல்லை என்றாலும் இது போல் சுமார் ஐம்பது கடிதங்கள் வந்தன.  இந்தக் கடிதத்தில்தான் மிகத் தெளிவாக அந்த விஷயம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. 

என்னுடைய முதிர்ச்சியற்ற எதிர்வினையை நான் இனி மாற்றிக் கொள்ள வேண்டும்.  சாய் வித் சித்ரா பேட்டிக்கும் மிக அதிகமான கடிதங்கள் வந்தன.  இதுவரை நான் என் காணொலியைக் கண்டதே இல்லை.  பேச்சையும் கேட்டதில்லை.  அருவருப்பாகத் தோன்றும்.  லஜ்ஜையாக இருக்கும்.  முதன்முதலாக சாய் வித் சித்ரா பேட்டியை முழுமையாகக் கேட்டேன்.  ’குழந்தை போல் வெகுளியான ஒருவனால் மட்டுமே இப்படிப் பேச முடியும்’ என்பதுதான் பேட்டியைக் கேட்டதும் எனக்குள் தோன்றிய உணர்வு.  ஒரு சிநேகிதியும் அதையேதான் சொன்னார்.  இப்படி நீங்கள் இருப்பதற்கு உங்களுள் கனிந்துள்ள ஆன்மீகம்தான் காரணம் என்றார் அவர்.  எனக்கு அப்படித் தோன்றவில்லை.  இலக்கியமே போதும், ஆன்மீகம் வேண்டாம். 

கடிதம்:

அன்புள்ள சாரு,

ஒரு வேண்டுகோள். உங்களை சாரு என்றே அழைக்கவா… sir போடாமல்…

எனக்குத் தெரிந்து உங்கள் வாசகர் வட்டத்திலேயே மிகவும் குறுகிய கால வாசகி நானாகத்தான் இருப்பேன். இலக்கிய வாடையும் சுத்தமாக இல்லை. இலக்கிய வாடையை விடுங்கள். இலக்கியம் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் கூடத்தெரியாது. உங்கள் புத்தகங்களை மட்டும்தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதையும் மிகவும் குறைவாகவே வாசித்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது இவ்வளவு எழுத வேண்டுமா என்ற தயக்கம் இருக்கிறது. சரி பரவாயில்லை. நீங்கள் நேரம் கிடைக்கும் போது இதைப் படிக்கலாம்.

எங்கே ஆரம்பிப்பது எங்கே முடிப்பது என்றே தெரியவில்லை சாரு. தீடீரென்று உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் சேர்ந்துவிட்டன.

உங்களின் ‘நான்தான் ஒளரங்கசீப்…’ நாவல் ஆரம்பமே அசத்தல். நீங்கள் அடிக்கடி குறிப்பிடுவீர்கள் இல்லையா?… தவம் போல் எழுதுகிறேன் என்று.   தவமே தான். சத்தியமான வார்த்தை. பல PhDக்குத் தேவையான ஆராய்ச்சியை செய்திருப்பீர்கள் போல் தெரிகிறது.

உங்கள் மொழி மற்றும் இலக்கிய அறிவு, பகடி, சமகால நிகழ்வுகள் குறித்த பார்வை, அரிய தகவல்கள், குவிந்த பாராட்டுகள் மற்றும் தங்கள் வாசகர்களின் கொண்டாட்டம்… இதையெல்லாம் பார்த்து எந்த கொள்ளிக் கண் பட்டதோ தெரியவில்லை! இரண்டு நாட்கள் இந்தக் கலைஞனைப் பாடாய்ப் படுத்திவிட்டது. அதன் உள் விவரங்கள் பற்றி நான் பேசவில்லை. மாறாக, அது உங்கள் வாசகர்கள் மேல் உருவாக்கிய Cascade effect பற்றி நான் யோசிக்கிறேன்.

டு பி ஹானெஸ்ட், இரண்டு நாட்கள் என்னையும் அறியாமல் ஒரு தாக்கம் இருந்தது. எதிலும் மனம் லயிக்கவில்லை. உங்கள் மனதின் பாரம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது. இது எனக்கே ஒரு புது வித அனுபவம். சாரு ஏன் இவ்வளவு சென்சிட்டிவ் ஆக இருக்கிறார் என்று வருந்தினேன். சமீப காலங்களில், ஒரு சங்கடம் நேர்ந்தால், சாரு இதை எப்படிக் கையாண்டிருப்பார் என்று யோசித்துச் செயல்படுகிறேன். அந்த அளவுக்கு உங்கள் வாசகர்கள்/ரசிகர்கள் மீது உங்கள் தாக்கம் இருக்கும் பட்சத்தில் நீங்களே இவ்வளவு மனம் உடைந்து போகலாமா என்று தோன்றியது.

ஒரு வேளை ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமமாக இருக்குமோ என்று அதையும் சோதித்தேன். அதுவும் இல்லை. எத்தனை பேர் ஆறுதல் கூறியும் உங்கள் மனதில் இருந்த கனம் குறைந்தபாடில்லை.

சரிதான்.  இதயத்தால் வாழ்பவன் ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையே பாய்ந்து கொண்டுதானே இருப்பான்? உங்கள் வலி புரிந்தது.

நீங்கள் ஒரு போஸ்டில் காலையிலிருந்து நெஞ்சு கொஞ்சம் வலிக்கிறது என்று எழுதியிருந்தீர்கள். அதைப் படித்துவிட்டு மனம் மிகவும் வலித்தது. பல வாசகர்கள் அதைக் குறிப்பிட்டு தங்கள் வேதனையைப் பகிர்ந்திருந்தார்கள் என்பதையும் பார்த்தேன்.

இரவு வரை விழித்து ஏதாவது மேஜிக் நடந்து நீங்கள் நார்மலாக மாட்டீர்களா என்று முகநூலிலேயே மூழ்கி இருந்தேன். அநேகமாக நள்ளிரவை ஒட்டிய நேரத்தில் அராத்துவிடமிருந்து ஒரு போஸ்ட். கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் இரண்டு போஸ்ட் ஷேர் செய்தார். ஆஹா! என்ன ஒரு spontaneity! எப்படித்தான் இவர் மட்டும் இப்படி யோசிக்கிறார் என்று மிரண்டு போனேன். அதைப் படித்த பிறகுதான் சாரு சரியாகி விடுவார் என்ற நம்பிக்கை பிறந்தது. அதன் பிறகே உறங்கச் சென்றேன்.

உங்கள் அராத்து உண்மையிலேயே different league. He is gifted with the highest form of intelligence – sarcasm! Unbelievable response! அவருடைய மூளையின் வேகம் மற்றும் புத்திசாலித்தனத்தை என்னுடன் ஒப்பிட்டு பார்த்தேன. (கரெக்ட். தேவையில்லாத ஆணி தான்.) I felt like an insect. He is truly genius. அதே போல் காயத்ரி அவர்களின் அன்பும் உங்களுக்குப் பெரிய பலமாக இருக்கிறது. ஒரு விதத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியும் கூட.

இப்படி ஒரு விஷயம் நடந்ததில் உங்களுக்குச் சில நல்ல விஷயங்களும் நேர்ந்திருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது சாரு. ஒன்று, உங்கள் மேல் உங்கள் வாசகர்கள் வைத்திருக்கும் அளவில்லா அன்பும் மரியாதையும் அதிகமாக வெளிப்பட்டிருக்கிறது. Personally, I could explore the ‘connect’. நீங்கள் எந்த அளவுக்கு எங்கள் subconscious mindல் இருந்திருந்தால் உங்கள் மன பாரம் எங்களை இவ்வளவு சோர்வடையச் செய்திருக்கும்? இரண்டு, திருஷ்டி கொஞ்சம் கழிந்திருக்கும். நல்ல விஷயம்தானே. Everything happens for a reason என்றே இப்போது தோன்றுகிறது.

மீண்டும் உங்கள் ஔரங்கசீப் பற்றி. Your writing resonates deeply with us, your audience. வரலாறு கண்டிப்பாக பலரின் விருப்ப genre ஆக இருக்க முடியாது (at least, not for me). But, the ‘soul’ in your writing keeps us engaged and coming back for more. 

உங்கள் வாசகி ஒருவரின் எதிர்வினையப் பகிர்ந்திருந்தீர்கள். பெயர் குறிப்பிடாமல். பலரது மனதில் தோன்றிய எண்ணங்களை அவர் கைவசப்படுத்தி விட்டார். பொறாமையாக இருந்தது. Well, மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாய் மொழிப்பெயர்க்கவும் (சரியாக) ஒரு திறமை வேண்டும்.

ஔரங்கசீப் நாவலை வாசிப்பது ஒரு போதை. காதலில் ஒரு euphoric stage இருக்கும். அந்தக் காலம் தரும் thrill and excitement வேறு எந்த விஷயத்திலும் நான் கண்டதில்லை. அது போன்ற ஒரு பரவசத்தை இந்த முன் கதை சுருக்கத்திலும் ஆரம்ப அத்தியாயங்களிலும் உணர்கிறேன். இப்போதே எனக்கு ஐயோ ஒரு நாள் இது முடிந்து விடுமே என்று பயமாக இருக்கிறது. It’s addictive.

Thank you so much for everything Charu. And, I hope you are back to normal. Just a small reminder that there are so many of us who love, respect, and care (genuinely) for you though we are miles apart.

இறுதியாக ஒரு கேள்வி:

சினிமாவைப் பற்றி எழுதுவதை உங்களால் ஏன் தவிர்க்க முடியவில்லை? சினிமாக்காரர்கள் எழுத்தாளர்களை ignore செய்வது போல் நீங்களும் சினிமா / சினிமாக்காரர்களை ignore செய்ய முடியாதா?

(கேள்வி தவறாகவோ அர்த்தமற்றதாகவோ இருந்தால் தயவுசெய்து ignore செய்யவும்.)

பிறகு என்னைப் பொறாமை அடைய செய்த அந்த வாசகியின் வரிகள்: “I am loving every bit of Aurangazeb…if u were real now I would want to hug u and kiss u. I have no words to express the pleasure of reading ur writing…”

மனதில் தோன்றியதை எழுதி விட்டேன் சாரு. ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.

உங்கள் மீது பேரன்பும் மரியாதையும் அக்கறையும் கொண்டிருக்கும்,

_______________