நவரசாவில் இடம் பெற்றிருக்கும் எட்டு படங்களையும் பற்றிய விமர்சனங்களைப் பார்த்து விட்டு அந்த எட்டையும் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். என் நண்பர் வசந்த்தின் பாயசத்தை மட்டும் இன்னும் இரண்டொரு நாள் கழித்துப் பார்க்கலாம் என்று திட்டம். ஔரங்கசீப் நாவலில் மூழ்கிக் கிடப்பதால் அப்படி நினைத்தேன். ஆனால் இடையில் செய்த ஒரு பிழையால் உடனடியாக வசந்த் சாயின் பாயசம் மட்டும் பார்த்தேன்.
என்ன பிழை என்றால், பிரபு காளிதாஸின் விமர்சனத்தை என் முகநூல் பக்கத்தில் ஷேர் செய்தது. அதில் வசந்த்தின் படம் மட்டும் நன்றாக இருந்தது என்றதும் ஷேர் செய்து விட்டேன். அதற்கு மேல் படிக்கவில்லை. அதுதான் விபரீதமாகி விட்டது. இனிமேல் முழுதும் படிக்காமல் ஷேர் செய்யக் கூடாது என்பது பாடம். அதில் பிரபு வசந்த்தை விசுவோடு ஒப்பிட்டிருந்தாராம். அதெல்லாம் மிகவும் அநியாயம், அக்கிரமம். ஆசை, நேருக்கு நேர், ரிதம் எல்லாம் விசு பாணி படங்களா என்ன? Pulp வகை சினிமாவாக அல்லாமல் நடுத்தரமான சினிமாவை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளில் வசந்த்தும் ஒருவர்.
நான் செய்த மேற்கூறிய பிழையின் காரணமாக, உடனடியாக பாயசம் பார்த்தேன். மிகச் சிறப்பான உருவாக்கம். இதை விட அழகாக தி.ஜானகிராமனின் அந்தச் சிறுகதையை சினிமாவாக ஆக்க முடியாது.
மற்ற எட்டையும் பற்றி என் நண்பர்கள் எழுதியிருந்த, பேசிய சில காணொலிகளைப் பார்த்தேன். படித்தேன். மேடை நாடகம் போல் பாத்திரங்கள் பேசிக் கொண்டிருப்பதையும், கற்பு பற்றிய ஒரு இயக்குனரின் புரிதலையும், தலித் பற்றிய ஒரு இயக்குனரின் கருத்தையும் கண்டேன். பெரிய இடத்தில் அமர்ந்திருக்கும் அசடுகள். விவரம் இல்லாததுகள். படிக்காத, சமூக ஞானம் இல்லாத ஜந்துக்கள். அவ்வளவுதான். அதற்கு மேல் அந்த எட்டு குப்பையையும் பார்த்து dissect செய்வது அநாவசியம்.
இந்தக் குப்பையில் கிடக்கும் ஒரு முத்தாகத் திகழ்கிறது வசந்த் சாயின் பாயசம்.
இனிமேல் முழுசாகப் படிக்காமல் எதையும் ஷேர் செய்யக் கூடாது என்பதையும் மனதில் இருத்திக் கொண்டேன்.