ஔரங்கசீப்பை முடித்துக் கொள்ளலாமா?

இன்று காலை இப்படி ஒரு கடிதம் வந்தது. எழுதியவரின் பெயரை எப்படியோ தொலைத்து விட்டேன். மெஸஞ்ஜரில் வந்தது. ஔரங்கசீப் கீழ்த்தரமான பதிலைச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை. தான் செய்த அத்தனை செயல்களும் பாபகரமானவை, ஹராமானவை என்று தன் கடிதங்களில் புலம்பித் தள்ளியிருக்கிறார் ஔரங்கசீப். இது போன்ற கடிதங்கள் ஔரங்கசீப்பின் பெயரை மாற்றி கலாம் பெயரை வைப்பவர்களுக்கும், மாணவர்களின் பாடப் புத்தகங்களில் ஔரங்கசீப்பை கொடூரமான வில்லனாகக் காண்பிக்கும் இந்துத்துவவாதிகளுக்கும்தான் பயன்படும்.

இதுபோல் இன்னும் கடிதம் வந்தால் தொடரை முடித்துக் கொண்டு புத்தகமாகக் கொண்டு வருவேன். தியாகராஜா நாவல் பாதி முடிந்த நிலையில் இருக்கிறது. தியாகராஜாவை எழுதுவதில் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. இனி கடிதம்:

சாரு… நீங்கள் இன்று மனவேதனைப்பட்டு சாபம் விடும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளீர்கள்.. ஏன் தெரியுமா..???ஔரங்கசீப் எனும் பேரரசர் வெறும் அரசர் மட்டுமல்ல.. அவர் ஒரு ஒலியுல்லாஹ்….இம்மை மறுமை மட்டுமே நம்பி வாழ்ந்த அவரை நீங்கள் ஆவியாக்கி கொஞ்சம் கூட மரியாதையில்லாதல் தேவிகா, சரோஜாதேவியன் பிருஷ்டங்களை வர்ணித்து அதற்கு அவரும் இசைவு பட்டு, ஒரு கீழ்த்தரமான பதிலை அவர் சொல்வது போல் – அடுத்தப் பிறவியின் மீது நம்பிக்கையில்லாதவரை – மீண்டும் பிறந்து குடிசையில் வாழ்ந்து கவிதை எழுதி சாக வேண்டும்- என எழுதியிருக்கின்றீர்கள்…. என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்.இது வரை நீங்கள் விளையாடியது எல்லாம் ஒன்றும் இல்லாத மனிதர்களை.. இப்போது நீங்கள் தொட்டிருப்பது ஒரு அவுலியாவை…நாகூர் தர்ஹா அறிந்த உங்களுக்கு அவுலியாக்களின் மகிமை தெரியாமல் இருக்காது

இப்போது உங்களுக்கு ஏற்பட்டது போதும் என நினைக்கிறேன். இனி வரும் அத்தியாயங்களிலாவது கண்ணியத்துடன் கையாளுங்கள்…