Bynge.in என்ற செயலியில் என்னுடைய நாவல் “நான்தான் ஔரங்கசீப்…” தொடராக வெளிவந்து கொண்டிருப்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன். ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் வாரம் மூன்று முறை வருகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை மதிப்புரைகள் வந்துள்ளன என்ற விவரங்களும் தினந்தோறும் எனக்கு வந்து விடுகின்றன. அவற்றை நான் பார்ப்பதில்லை. இன்று பார்த்தேன். இதுவரை 36330 வாசிப்புகள். நேற்று 1678 பேர் வாசித்திருக்கிறார்கள். இதுதான் ஒருநாளில் மொத்தமாக வாசித்தவர்களின் எண்ணிக்கை.
என் பெயருக்காக வேண்டாம், ஔரங்கசீப்பின் பெயருக்காகவாவது படிக்க வேண்டாமா? அதிலும் ஔரங்கசீப் யார்? வரலாற்றில் வில்லன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டு, எல்லோராலும் வசைபாடப் படுபவர். 19 வருஷ தாம்பத்தியத்தில் 14 குழந்தைகளைக் கொடுத்து, ஒரு பெண்ணின் மரணத்துக்கே காரணமாக இருந்த ஷா ஜஹான் இங்கே நாயகன். ஔரங்கசீப் வில்லன். ஔரங்கசீப்பின் பெயரைத் தாங்கியிருந்த நெடுஞ்சாலையின் பெயரை அப்துல் கலாம் சாலை என்று தில்லியில் மாற்றினார்கள்.
ஆனால் ஔரங்கசீப்பின் கதையை எழுதினால் அதைப் படிக்க 1678 பேர்தானா? என் முஸ்லீம் நண்பர்களைக் கேட்கிறேன். அதிகாரம் என்பதன் அருகில் கூட செல்ல மாட்டீர்களா? நான் தியாகராஜா நாவலை என் தளத்தில் தொடராகப் போட்டால் எத்தனை பேர் படிப்பார்கள் தெரியுமா? 10,000 பேர். என்ன காரணம் என்பதை உங்கள் யூகத்துக்கே விடுகிறேன். உங்களிடம் ஊடக பலம் உண்டா? சினிமாவில் இஸ்லாமிய கலாச்சாரத்தின் ஒரு கீற்றாவது வந்ததுண்டா? விளிம்பு நிலையிலேயே எத்தனை நூற்றாண்டுக்குத்தான் நின்று கொண்டிருப்பீர்கள்? மொகலாய சாம்ராஜ்ஜியம் வீழ்ந்ததற்குக் காரணமே ஔரங்கசீப்தான் என்று எழுதுகிறார் பண்டித நேரு. இதற்கு ஔரங்கசீப் தன் கதையில் பதில் சொல்கிறார். என்ன பதில் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
ஔரங்கசீப் ஒரு கவிஞர். ஃபார்ஸி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் அறிஞர். இது யாருக்காவது தெரியுமா? ஔரங்கசீப் தன் மகன்களுக்கு எழுதிய கடிதங்களை யாராவது படித்திருக்கிறார்களா? ஒவ்வொரு கடிதத்திலும் ஞானம் பொங்கிப் பொங்கி வழிகிறது. காரணம், அவர் வயது அப்போது எண்பத்தைந்துக்கும் மேல். ஒவ்வொரு கடிதத்திலும் நான்கு கவிதைகளாவது இருக்கின்றன. ஔரங்கசீப் புனைந்த கவிதைகள்.
இங்கே என் நண்பர் ஜெயமோகனை நினைத்துப் பார்க்கிறேன். அவருடைய வெண்முரசு சாமான்ய மனிதர்கள் படிக்கும் மொழியில் எழுதப்பட்டது அல்ல. அவர் கதைகளுமே பல கடின மொழிதான். கட்டுரைகள்தான் எளிதில் புரியும். அவர் தளத்தை தினமும் 60000 பேர் வாசிக்கிறார்கள். நானும் ராமாயணம் என்று ஒரு இதிகாசத்தை எடுத்து ஆறேழு ஆண்டுகள் தினமும் எழுதினால் இந்த எண்ணிக்கையை அடையலாம். எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. Grand narrativesஐ நான் மறுதலிப்பவன். என் இலக்கியப் பணிக்காகப் படிப்பேனே ஒழிய அதைப் பின்பற்ற மாட்டேன். நான் அதைச் சார்ந்தவன் அல்ல. அதில் உள்ள அரசியலை முற்றாக மறுப்பவன் நான். அரசியல் இல்லாமல் இந்த இரண்டு இதிகாசங்களும் இல்லை. நான் சொல்ல வந்தது அதை அல்ல. எண்ணிக்கை. எனக்கு 1678; ஜெயமோகனுக்கு 60000 என்ற எண்ணிக்கை.
இதை நான் சும்மாவேனும் போகிற போக்கில் சொல்லவில்லை. என் நண்பருக்கு – அவரும் எழுத்தாளர் – பிறந்த நாள் வந்தது. அஞ்சு பேர் வாழ்த்து சொல்லி போன் பண்ணினார்கள். மறுநாளோ ஐம்பது பேர் போனில் வாழ்த்து சொன்னார்கள். பத்து பேர் அவரிடம் விலாசம் கேட்டுக் கொண்டு நேரிலேயே வீட்டுக்கு வந்து விட்டார்கள். என்னவென்று கேட்டால் பிறந்த நாள் அன்று ஜெயமோகனின் தளத்தில் எழுத்தாளரின் புகைப்படத்தோடு ஜெயமோகனின் வாழ்த்துச் செய்தி வந்ததுதான்.
ஜெயமோகன் இந்த எண்ணிக்கை எந்த ஊடக பலத்தினாலும் அடையவில்லை. அவர் விகடன், குமுதத்தில் எல்லாம் எழுதவே இல்லை. (சங்கச் சித்திரங்கள் மட்டுமே விதிவிலக்கு) அவருடைய ஊடகத்தை அவரே உருவாக்கினார். என்னைப் போல. சமீபமாகத்தானே குமுதத்தில் எழுதினேன்? ஆனால் ஔரங்கசீப்பின் எண்ணிக்கை என்னை மிகவும் திகைக்கச் செய்கிறது. எதிர்மறையாக.
ஒரு சுரணையணர்வு உள்ள சமூகத்தில் ஔரங்கசீப் பற்றி ஒரு நாவல் வருகிறது என்றால், அது பத்திரிகைகளில் செய்தியாக வரும். இங்கே ஒரு சத்தத்தையுமே காணோம். அப்படியானால் இந்தச் செய்தி யாருக்குத் தெரியும்? எல்லோருமே பெருமாள் முருகன் மாதிரியும் சல்மான் ருஷ்டி மாதிரியும் அதகளம் பண்ண முடியுமா? செய்தியே தெரியாமல் யார் படிப்பார்? ஊடகமே இல்லை என்றால் யார் இந்தச் செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும்? நேற்று பாருங்கள், நாள் பூராவும் தட்டச்சு செய்து விட்டு, பதினோரு மணி அளவில் உறங்கச் செல்வதற்காக கணினியை அணைக்கப் போகும்போது ஒரு மின்னஞ்சல். ஜெயமோகன் நேற்று எழுதிய ஐந்தாறு படைப்புகளை – கட்டுரைகள் – எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார் அவரது தொண்டர் ஒருவர். அதில் எனக்கு ஆர்வமாகத் தெரிந்த ஒரு கட்டுரையைப் படித்து விட்டே உறங்கினேன். வீட்டு வாசலில் வந்து கிடைக்கிறது. இது போல் சுமார் 5000 பேருக்கு இந்தச் செய்தி தினமும் போகிறது என்று நினைக்கிறேன். ஆயிரம் நிச்சயம். இதை எனக்குச் செய்ய யார் இருக்கிறார்கள்? அந்த மின்னஞ்சல் வந்திருக்கா விட்டால் நான் நிச்சயம் ஜெயமோகனின் அந்தக் கட்டுரையைப் படித்திருக்க மாட்டேன். இப்போது புரிகிறதா மார்க்கெட்டிங் என்றால் என்ன என்று?
ஔரங்கசீப்பை வாசியுங்கள். வாசிக்கக் கூடிய நண்பர்களிடமும் சொல்லுங்கள். ஒரு நாளில் பத்தாயிரம் பேர் படித்தால்தான் அதை எழுதிய எனக்கு நியாயம்.