எனக்கு மொபைல் திரையில் படிப்பதென்பது மிகவும் கடினமான காரியம்..
கணினித்திரையில் படிப்பதும் பிடிக்காது. பலமுறை முயன்றும் தோற்றிருக்கிறேன்..
இத்தனைக்கும் அது 21 இன்ச் மானிட்டர்..
அது சாருவின் புதிய நாவலான ” நான் தான் ஒளரங்கசீப் ” bynge app இல், பல அத்தியாயங்கள் வெளிவந்து பல நாட்கள் ஆகியும், வேறு வழியின்றி இன்று காலை மொபைலில் இருந்து செயலி மூலமாக முதல் பாகத்தை மட்டும் என்னுடைய மெயிலுக்கு அனுப்பி, கணினித்திரையில் வாசித்து அசந்தே விட்டேன்.
அடுத்தடுத்த பாகங்களை செயலியில் இருந்து, மெயிலுக்கு அனுப்பி அகண்ட திரையில் திறந்தால், முதல் பாகம் மட்டுமே கணினியில் வாசிக்க முடிந்தது.. டவுன்லோடோ save செய்யவோ முடியவில்லை. அல்லது எனக்கு தெரியவில்லை போலும்…
ஆனால் முதல் பாகத்தை மட்டும் படித்துவிட்டு… அதுவும் சாருவின் எழுத்தை ?
வழக்கம் போல அவரின் எழுத்து என்னை மொபைல் திரைக்கு கொண்டு வந்து கட்டிப்போட்டு விட்டது…
ஒரு Transgressive எழுத்து நடை என்பது எல்லா காலங்களையும் தொட்டு, கட்டுடைத்து, கலைத்துப்போட்டு எழுதுவது என்று பரவலாக சிலர் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.. அது எளிதான முறைமையன்று.
கூர்ந்த படிபாற்றலாலும், பரந்துபட்ட உள்வாங்களாலும், பயண அறிவாலும், உண்மையான தேடலாலும், மொழியாளுமையாளும் மட்டுமே சாத்தியம்…
தனது வாசகனுக்கு எதை தரவேண்டுமென்பதில், துல்லியமாக இருக்கும் ஒரு எழுத்தாளனால் மட்டுமே இவையணைத்தும் சாத்தியம்…
கலைத்து போட்டு எழுதுவது போல் தோற்றமளித்தாலும், தனது வாசகனுக்கு கடத்த வேண்டிய கருப்பொருட்களிலும், பல எழுத்தாளர்கள் சொல்லத்துணியாத பகுதிகளையும் தனது படைப்புகளில் சமரசமின்றி ஆவணப்படுத்துவதில் சாரு திறமையானவர்.
அவருடைய அரபி மொழிக்காதலும், அரபி இசையின் மீதுள்ள மதிப்பீடுகளும், துருக்கி பயணமும், மங்கோலிய வரலாற்றின் மீதுள்ள பார்வையும், தற்போது உள்ள சமூகவாழ்வியல் மதிப்பீடுகளும், தான் வாழும் நாட்டில், தனக்கு முன்னர் வாழ்ந்த சர்வமும் வாய்க்கப்பெற்ற ஒரு சர்வாதிகாரியின் மனசாட்சியுடன், நெடும் விசாரிப்புகளுக்காக, தன் வாழ்வில் சேமித்த பல்வேறு தரவுகளுடன் சாரு தவமிருந்து வருவதாகவே, இந்நாவலின் அத்தியாயங்களை, நான் பார்க்கிறான். .
“மீடியம்” மூலம் பேசுதல் என்ற நடைமுறையில் உள்ள ஒரு விசித்திரமான பாணியை தேர்ந்தெடுத்து, அதிலும் ஒரு அகோரியை மீடியமாக காட்சிப்படுத்தி, தனது கலக வெளிப்பாடுகளை, வழக்கம் போல சாத்தியப்படுத்தியுள்ளார்.. ஆனால் என்னைப் போன்ற தொடர்வாசிப்பாளனுக்கு, ஒரே எழுத்தாளனே பல்வேறு கோணங்களில், நூற்றாண்டுகள் கால ஓட்டத்தில் பதியப்பட்டுள்ள பலதரப்பட்ட கருத்துக்களையும், சம்பவங்களையும் ஒப்பிட்டு ஒரு வாசகன் பயனடையும் வித்தைகள் கற்றுக்கொள்ள ஒரு ராஜபாட்டையை சாரு வடித்துள்ளார் என்றே கருதுகிறேன்..
எடுத்துக்கொண்ட கருவை வாசகனுக்கு கடத்துவதற்கு, முன்னுரை பகுதிகளில், தனக்கே உரிய துள்ளலான நடையில் இந்நாவலும், இது போன்ற சொல்லும் முறைமையும் எவ்வளவு முக்கியமானது என்பதை, பல்வேறு வழிகளில் உள்ளீடாக பதியவும் செய்துள்ளார்.
அத்தியாயம் 1 இல், ஒளரங்கசீப் தன் கதையை கூற ஆராம்பிக்கும் இடத்திலிருந்து சாருவின் தமிழ் மொழியாளுமையில், அவருக்குண்டான சிறப்பியல்புகளின் கூறுகளை, ஒவ்வொரு வாசகனும், அவனுக்குரிய தகுதியின் அடிப்படையில் இனம் கண்டுகொள்ளலாம்..
இந்நாவலுக்கான அவருடைய Home work அசாத்தியமானது என்பதை, படிக்கும் ஒவ்வொருவரும் திகைப்புடன் உணர்ந்து கொள்வார்கள்..
அதிகார ஆசையும், எழுதி வைக்கப்பட்ட வரலாறும், அரசியலும், சமூககட்டமைப்பின் இறுக்கங்களும், வன்முறையும், தேசங்களின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அடிப்படைக் காரணிகள்.
அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் தனி மனிதர்களின் புரிதல்களின் விழைவுகளே எப்போதும் பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிக்கிறது.
தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு இந்தியப்பேரரசனின் வாழ்க்கை முறை மூலம், நாம் அறிந்து கொள்ள நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தில், இந்த வயதில், இவ்விதமான முயற்சியை ஒரு தவவலிமையுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு என்னுடைய நன்றியும், பணிவான வணக்கங்களும்..
You always make us Proud..
This time – Much more special to us.
Thanks a lot Charu Nivedita 💅