“நான் ஒழுக்கமானவன் என்ற பலத்தின் அஹங்காரமே என் கண்களை மறைத்து விட்டது “- ஔரங்கசீப்.
சாரு எழுதி வரும் நான் தான் ஔரங்கசீப்பின் வெளிவராத ஒரு அத்தியாயத்தை வாசித்துக்கொண்டு இருந்தேன். இந்த வரியில் மனம் நின்று விட்டது. இந்த வரியை ஔரங்கசீப் சொல்லியிருப்பாரா , தெரியாது. ஔரங்கசீப் மூலம் சாரு நிவேதிதா சொல்கிறார்.
யோசித்துப் பார்த்தால் சாரு நிவேதிதாவின் ஒட்டு மொத்த எழுத்துக்களின் ஆதார ஸ்ருதியாக இந்த வரியை எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
தான் ஒழுக்கமாக இருப்பதாக நம்பும் ஒருவன் , அதனால் கிடைக்கும் அகங்காரத்தினாலும் அதிகாரத்தினாலும் மற்றவர்களை எப்படி ஒடுக்குகிறான் , மற்றவர்கள் மேல் எப்படி ஆக்கிரமிப்பை செலுத்துகிறான் ? போர்ப் படைகளக் கொண்டு , ஆயுதங்களைக் கொண்டு சாதிக்க முடியாயதைக் கூட , ஒழுக்கம் கொடுக்கும் மாபெரும் பிம்பத்தினாலும் , அகங்காரத்தினாலும் சாதித்து விட முடிந்திருக்கிறது.
ஒரு அரசன் அல்லது பிரதமர் இப்படி ஒழுக்கமானவனாகத் தன்னை கற்பனை செய்து கொண்டால் போச்சு. நாடே கெட்டு குட்டிச்சுவராகி விடும்.
ஒழுக்கத் திமிருக்கு எதிரான சாரு நிவேதாவின் இந்த ஆதார ஸ்ருதி எழுத்தால் , வேறொரு பக்க விளைவும் உண்டானது. சாரு நிவேதிதாவின் எழுத்துகளை தவறாக உள்வாங்கிக்கொண்டு ஒழுக்கமாக இல்லாமல், பொறுப்பற்றத் தன்மையோடு , குடித்துக்கொண்டும் , வறட்டுக் கூத்தடித்துக்கொண்டும் , பலருடன் புணர்வதற்கு மாரல் லைசென்ஸ் வாங்கிக்கொண்டும் உருவானது ஒரு சிறு கூட்டம்.
ஒழுக்கத்தையே தவறாக புரிந்து கொண்டு அகங்காரமாக மாற்றிக்கொண்டு திரியும் உலகில் , ஒழுக்கத் திமிருக்கு எதிரான எழுத்தை தவறாக புரிந்து கொள்ளவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.