வாசக நண்பர்களுக்கு – குறிப்பாக முஸ்லீம் நண்பர்களுக்கு என் அன்பான விண்ணப்பம் ஒன்று உள்ளது. ஔரங்கசீப்பைப் படியுங்கள். நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். இறைவனின் கருணை மழை தங்கள் மீது அருளும், பொழியும்.
ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம். ஔரங்கசீப் ஒரு நாவல். நிஜமான ஔரங்கசீப்பின் வாழ்க்கை வரலாறு அல்ல என்பதை ஒவ்வொரு எழுத்திலும் ஞாபகம் கொள்ளுங்கள். இந்த நாவலை நான் எழுத வேண்டிய கட்டாயத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்திய தேசத்தை ஒற்றை அடையாளத்துக்குள் அடைக்க வலுவான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். உத்தரப் பிரதேசம் பூராவும் உள்ள கிராமப்புற முஸ்லீம்கள் மாடு வளர்ப்பதை நிறுத்தி விட்டு இப்போது எருமை வளர்க்கிறார்கள். லக்னௌவில் பீஃப் பிரியாணிக்குப் பேர் போன உணவு விடுதியில் இப்போது சிக்கன் பிரியாணிதான் கிடைக்கிறது. எல்லாம் உங்களுக்குத் தெரியும்.
ஔரங்கசீப் வில்லன் அல்ல. அசோகர்தான் வில்லன். ஆனால் என்ன நடந்துள்ளது? அசோகரின் சின்னம்தான் நமது அரசு சின்னம். இந்து மதத்தையும் பிராமணர்களையும் கடுமையாக ஒடுக்கியவர் அசோகர். அது பற்றி இங்கே பேச்சே இல்லை. இங்கே அசோகர் நேஷனல் ஹீரோ. ஆனால் ஔரங்கசீப்பை வில்லனாகக் காட்டி அவர் பெயரில் இருந்த சாலையின் பெயரை மாற்றுகிறார்கள்.
ஜிஸியா வரி பற்றிப் பெரும் புகார் இருக்கிறது. அதற்கு ஔரங்கசீப் என் நாவலில் பதில் சொல்கிறார். பிரமாதமான பதில். பொறுமையாக வாசியுங்கள்.
ஆனால் இது நாவல். வரலாற்றுப் புத்தகம் அல்ல. ஆனால் அடிப்படைகளில் இருந்து நாவல் ஔரங்கசீப் மாற மாட்டார். குடிக்க மாட்டார். பெண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார். இருந்தாலும் சில பகடியான காட்சிகளும் சம்பவங்களும் வரத்தான் வரும். நாவலை எழுத முடியாமல் போனால் அது இந்தியாவை ஒற்றை அடையாளத்துக்குள் குறுக்க நினைப்பவர்களுக்கே சாதகமாகப் போகும். கொஞ்சம் சகிப்புத்தன்மையோடு படியுங்கள். உதாரணமாக, அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அக்பர் பற்றிய உலகப் புகழ் பெற்ற ஒரு ஆங்கில நாவலில் தன் கதையை அக்பரே எழுதுகிறார். கடைசியில் அக்பர் தற்கொலை செய்து கொள்கிறார். இதை ஆங்கில இலக்கிய உலகம் அனுமதிக்கிறது. அந்த அளவுக்கு நான் ஔரங்கசீப்பைக் கொண்டு போக மாட்டேன். அவருடைய கடைசி கடிதங்களில் அவர் தற்கொலை செய்து கொள்வதை விட அதிக மன உளைச்சலை அடைந்தார். இரண்டு காரணங்கள்: தான் செய்தது அனைத்தும் இறைவனுக்குப் பிரியமானது அல்ல என்று நினைத்தார். இறைவன் என்னை மன்னிக்க மாட்டான் என்று உருகினார். இரண்டாவது காரணம், தன் பிள்ளைகள் ஒருத்தரை ஒருத்தர் கொலை செய்து கொண்டு சாகப் போகிறார்கள் என்பதை உணர்ந்தார். தான் செய்ததையே அவர்களும் செய்கிறார்களே என்று வருந்தினார். தனக்காவது ஒரு உயர்ந்த நோக்கம் இருந்தது, இவன்களுக்குப் பதவி ஆசை தவிர வேறு நோக்கமே இல்லையே என நொந்தார். அவர் செய்த கொலைகளுக்குக் காரணம், அதைச் செய்யாவிட்டால் தாரா ஹிந்துஸ்தானையே வெள்ளைக்காரர்களிடம் அடகு வைத்து விடுவான் என்று நினைத்தார். சரித்திர ஆதாரங்கள் அப்படித்தான் இருக்கின்றன.
நான் எழுதிக் கொண்டிருந்த தியாகராஜா என்ற நாவலை – 200 பக்கம் எழுதியிருக்கிறேன் – சற்றே நிறுத்தி வைத்து விட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். சில அத்துமீறல்கள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். சரித்திரப் பிழையை மாற்றி எழுதியாக வேண்டும். இந்த நாவலை ஆங்கிலத்திலும் அரபியிலும் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலுக்குப் பிறகு இந்தியாவின் மொகலாய சரித்திரம் மாற்றி எழுதப்படும்.
இதில் எழுதப்படும் நடப்புச் சூழல் தவிர மற்ற சரித்திரச் சம்பவங்கள் அனைத்துக்கும் ஆதாரம் உள்ளது. ஆதார நூல்களை நாவலின் கடைசியில் தருவேன். உதாரணமாக, இளம் வயதில் அவர் வைன் அருந்த வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது. கோப்பையை எடுத்து விட்டார். ஆனால் குடிக்கவில்லை. உதட்டில் ஒரு சொட்டு வைன். இதற்கும் ஆதாரம் உள்ளது. ஏன் குடிக்கவில்லை? என்ன நடந்தது? அந்த ஒரு சொட்டு வைன் கூட அவர் நாவில் படவில்லை? எப்படி? பொறுமையாகப் படியுங்கள்.
சமயங்களில் எரிச்சல் ஏற்பட்டால், பாபர் பாதுஷா தன் படை வீரர்களிடம் ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றுவார். அந்த இடம் வெளிவந்து விட்டதா, இல்லையா? அந்தப் பகுதியைப் படியுங்கள். உலக சரித்திரத்தில், உலக இலக்கியத்தில் அப்படி ஒரு இடம் கிடையாது. பாபரின் அந்த உரை நானே எழுதியது. பாபர் பேசினார் என்று மட்டுமே சரித்திரத்தில் உள்ளது. பாபர்நாமாவை நான்கு முறை படித்து நானே பாபராக மாறித்தான் அந்த உரையை எழுதினேன்.
எக்காரணம் கொண்டும், இந்தியாவை ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வர விரும்புபவர்களுக்கும், பீஃப் பிரியாணி கடையை சிக்கன் பிரியாணி கடையாக மாற்றியவர்களுக்கும் நாவல் மீதான உங்கள் விமர்சனம் துணை போய் விடக் கூடாது. எல்லா விதமான கலாச்சார அடையாளங்களுக்கும் இந்த தேசத்தில் இடம் வேண்டும். அதுதான் ஹிந்துஸ்தானின் அடையாளமாக இருந்தது. இருக்க வேண்டும்.
விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அது நாவலை நிறுத்துவது போல் இருக்கலாகாது. தவறு இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள். இரண்டு முக்கியமான அரபி அறிஞர்களின் உதவியோடுதான் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். மூன்றாவது ஒரு மூத்த ஃபார்ஸி அறிஞர். இவர்களும் நாவலைப் படித்து வருகிறார்கள்.
தங்கள் ஊக்கத்துக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சம் கனிந்த நன்றி.
எனக்கு எழுத: charu.nivedita.india@gmail.com