நான்தான் ஔரங்கசீப் – பாபர் உரை – ஶ்ரீராம்

சாரு ஒரு மாதத்திற்கு முன் நான்தான் ஒளரங்கசீப் நாவலில் வரும் பாபரின் உரையை அனுப்பியிருந்தார். முகநூலிலும் பாபரின் உரையை பற்றி இவ்வாறு எழுதியிருத்தார்:

“மார்ட்டின் லூதர் கிங்கின் எனக்கொரு கனவு இருந்தது, லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை, நெல்ஸன் மண்டேலாவின் நான் சாவதற்குத் தயாராக இருக்கிறேன், சர்ச்சிலின் we shall fight on the beaches ஆகிய பேச்சுக்களை விஞ்ச வேண்டும் என்று எண்ணினேன். இதையெல்லாம் விட 1095-இல் போப் அர்பன் – 2 பேசிய உணர்ச்சிகரமான பேச்சை நெருங்கினால் போதும் என்று திட்டமிட்டேன். மற்றபடி நீங்கள்தான் சொல்ல வேண்டும். அடுத்த மாதமே அந்த அத்தியாயத்தை நீங்கள் படித்து விட முடியும். அந்தப் பேச்சை மட்டும் எழுதி முடிக்க நாலைந்து நாட்கள் எடுத்தது.”

நான் பாபரின் உரையைப் படிக்கும் முன் மேலே உள்ள சாரு குறிப்பிட்ட உரைகளைப் படித்துவிட வேண்டும் என எண்ணினேன். போப் அர்பனின் உரைக்கும் சர்ச்சிலின் உரைக்கும் கடைசி இடம் கொடுப்பேன். அடுத்து லிங்கன் உரை நன்றாக இருந்தது.

மார்ட்டின் லூதர் கிங்கின் உரை எரிமலை. படிக்கும் போதே கண்ணீர் வருவது நிச்சயம்.

அடுத்து மண்டேலா உரை. 15000 வார்த்தைகள். படித்துப் புரிந்துகொள்ள ஐந்து நாட்கள் ஆகின. மண்டேலாவின் உரை தான் இந்தப் பேருரைகளிலேயே ஆகச்சிறந்தது. வன்முறை, அஹிம்சை, ஈழப் பிரச்சினை, கர்ணன் திரைப்படம் முதலியவற்றை இன்னும் தெளிவாகப் புரிந்துக்கொள்ள மண்டேலாவின் உரை உதவியது.

இவை எல்லாவற்றையும் விட பிரம்மாண்டமாக, உணர்வுப்பூர்வமாக இருந்தது சாரு எழுதிய பாபர் உரை. பார்ஸிகளைப் பற்றி சொல்வார்கள். பாலுடன் கலந்த சீனி போல அவர்கள் இந்திய சமூகத்துடன் கலந்துவிட்டார்கள் என. அதுபோல், இஸ்லாமும் இஸ்லாமியர்களும் இந்தியா என்ற மாபெரும் தேசத்துடன் எப்படி பாலில் சீனி போல கலந்தார்கள் என இவ்வுரையைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம்களைப் பார்த்து பாகிஸ்தானுக்குப் போ என்று சொல்லும் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களிடம் உள்ளூர பயத்துடனே பழகுவேன் என்று எழுதும் எழுத்தாளர்களும் இந்த உரையைப் படிக்க வேண்டும்.

– ஸ்ரீராம்