இனிய நினைவுகள்…

என் வயது 68.  அதனால் கடவுளைத் தவிர வேறு எதற்காகவும் பயப்பட வேண்டியதில்லை, தயங்க வேண்டியதில்லை என்ற மனோபாவம் வந்துள்ளது.  முன்பேயும் இப்படித்தான்.  இப்போது அது கொஞ்சம் வலுப்பட்டிருக்கிறது.  பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது.  இந்தியா டுடே என் நண்பரும் என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவருமான வாஸந்தி ஆசிரியர் பதவியிலிருந்து விலகி மற்றொருவர் அதன் ஆசிரியராக ஆகியிருந்த நேரம்.  புதிய பொறுப்பு அவருக்கு.  உதவி ஆசிரியராக இருந்து ஆசிரியர் பொறுப்புக்கு வந்தவர்.  இப்போது தினமலரில் பணியில் இருக்கிறார்.  இந்தியா டுடேயில் என்னை ஒரு வாராந்திரப் பத்தி எழுத அழைத்தார்.  குறுக்குச் சால் என்று தலைப்பு.  ஓரிரண்டு வாரங்கள் எழுதி விட்டேன்.  மூன்றாவது வாரம் ஆசிரியரிடமிருந்து போன்.  தொடரை நிறுத்தியாக வேண்டும்.  காரணம்?  இரவு நேரத்தில் குடித்து விட்டு போனில் மிரட்டுகிறார்கள்.  வீட்டில் மனைவி பயப்படுகிறார்.  நிறுத்தவில்லையானால் நேரில் வந்து உதைப்பேன் என்கிறார்களாம்.  யார் என்று கேட்டேன்.  என்னை மேலும் வம்பில் மாட்டி விடுவீர்கள்.  வேண்டாம்.  பட்டதே போதும்.   

பிறகு சாவகாசமாகச் சொன்னார்.  கவிஞரின் பெயரை.  மூத்த கவிஞர்.  அவரும் அவரது சக கவிஞர் ஒருவரும்தான் தினமும் குடித்து விட்டு நள்ளிரவில் போன் போட்டு இந்தியா டுடே ஆசிரியரை மிரட்டியது.

சமீபத்தில் கவிஞருக்கு தமிழின் மதிப்புக்குரிய விருது கிடைத்திருக்கிறது.  எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.  நாமும் வாழ்த்தி வைப்போமே என்று பார்த்தால் மேற்படி நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது.  இன்னா செய்தாரை ஒறுத்தல் என்கிறார் ஆசான்.  உண்மைதான்.  மூக்கைப் பிடித்து தண்ணீரில் முக்கிக் கொல்லப் பார்ப்பதும் எழுத்தை நிறுத்த முயல்வதும் ஒன்றுதான்.  இரண்டையுமே மன்னிக்கலாம்.  மன்னித்தும் விட்டேன்.  ஆனால் மறக்கத்தான் முடியவில்லை.

இத்தனைக்குப் பிறகும் கவிஞரின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கிறது.  அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.  எழுத்து உலகில் யாரைப் பற்றியும் இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.  ஒடுக்கப்பட்டவனிடம், தீண்டத்தகாதவனாக நடத்தப்பட்டவனிடம் இனிமை நினைவுகளைப் பகிர்ந்து கொள் என்றால் எப்படி?  இதுதான் என் இனிமையான நினைவுகள்…