கண்கள் (சிறுகதை)

நான் சக்தி உபாசகன்.  ஆண் தெய்வங்களை வழிபடுவதில்லை.  ஆனாலும் ஸ்ரீ ஜெயந்தியை படு விமரிசையாகக் கொண்டாடுவேன்.  சீடை முறுக்குக்காக.  இந்த ஆண்டு வெறும் அவல் பாயாசத்தோடு முடிந்தது கொண்டாட்டம்.  அநியாயம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே போயிருக்க வேண்டும். (இந்த வார்த்தையில் ஒரு பிரச்சினை இருக்கிறது.  பிறகு பார்ப்போம்.)  கொரோனா காரணமாகத் தள்ளிப் போட்டேன்.  ஆனால் இனியும் தள்ளிப் போட முடியாது என்று தோன்றியபோது சென்று விட்டேன்.  இருந்தாலும் தேதிகளைப் பார்த்து ஸ்ரீஜெயந்தி வருகிறது என்று தெரிந்திருந்தால் இன்னும் ஒரு மாதம் தள்ளிப் போட்டிருக்கிலாம்.  இல்லை.  அப்படியே ஏதாவது காரணம் தொட்டுத் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்.  ஒரு ஆண்டு ஸ்ரீஜெயந்தி கொண்டாடாவிட்டால் என்ன?  சீடையும் முறுக்கும் எங்கே போய் விடப் போகிறது? சுஸ்வாத் பக்கம் போனால் அள்ளிக் கொண்டு வரலாம்.  சுஸ்வாதும் வீட்டுக்கு அருகில்தான்  உள்ளது.  (இதற்கெல்லாம்தான் மைலாப்பூர் பக்கம் இருக்க வேண்டும் என்கிறது.  பல்லாவரத்தில் எல்லாம் மனுசனாய்யா இருப்பான்?  அதிலும் கேட்டட் கம்யூனிட்டியாம்.  மண்ணாங்கட்டி… உங்கள் பல்லாவரத்தில் சுஸ்வாத் மாதிரி ஒரு கடை உண்டா?  அப்புறம் என்ன பல்லாவரம் நொல்லாவரம்?) 

என் வாழ்வில் இதுவரை பல் டாக்டரிடம் போனதில்லை.  அது மகா பெரிய தவறு என்று இப்போதுதான் புரிகிறது.  நானெல்லாம் பல் வலித்தால்தான் பல் டாக்டரிடம் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  பல் வலித்ததில்லை.  போகவில்லை.  எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பாலாஜி அழைத்தார்.  திருப்பதி பாலாஜி அல்ல.  இவர் என் வாசகர் பாலாஜி.  பல் டாக்டர்.  எனக்கு பல் டாக்டர் என்றால் பயம் பாலாஜி என்று மறுத்து விட்டேன்.  அவரும் நல்லது என்று விட்டு விட்டார்.  இப்போது நினைத்துப் பார்த்தால் எனக்கு பாலாஜி மேல் செம கோபம் வருகிறது.  அறியாமையில் உழல்பவர்களை விஷயம் தெரிந்தவர்கள்தானே ஏதாவது நைச்சியமாகப் பேசிக் கடைத்தேற்ற வேண்டும்?  இத்தனைக்கும் பாலாஜி சென்னையில் ஒரு க்ளீனிக்கே வைத்திருந்தார்.  நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.  இப்போது அவர் வெளியூர் போய் விட்டார்.  நான் பார்த்துக் கொள்ளும் டாக்டரும் பெரிய ஆள்தான்.  அவர் சொன்னார், ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே பார்த்திருந்தால் வெறும் பூச்சோடு போயிருக்கும், இப்போது பாருங்கள், கிரீடமெல்லாம் போட வேண்டியிருக்கிறது என்று.  செலவு ஒன்றரை லட்சம் ரூபாய்.  பூச்சு அஞ்சு பல்.  கிரீடம் பன்னிரண்டுக்கு.  எடுக்க வேண்டிய பல் ஒன்று.  அநேகமாக முக்கால்வாசிப் பற்களுக்கு மராமத்து நடக்கிறது.  முன்பே போயிருந்தால் – எட்டு ஆண்டுகளுக்கு முன் – இத்தனை பிரச்சினை வந்திருக்காது.  இப்போதுதான் தெரிகிறது, பல் வலியோ இல்லையோ, ஆண்டுக்கு ஒருமுறை பல் டாக்டரைப் பார்க்க வேண்டுமாம்.

இந்த டாக்டரிடம் கேட்டேன், ஏன் இப்படி ஆயிற்று என்று.  கடினமான ப்ரஷ்ஷைக் கொண்டு தேய் தேய் என்று தேய்த்தால் இப்படி ஆகும் என்றார்.  இவரிடம் என்ன விசேஷம் என்றால், பேசவே மாட்டார்.  நானும் பேசவே மாட்டேன்.  ஆனால் ஆபத்தான இடங்களில் கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் இல்லையா?  இல்லாவிட்டால் உலகம் அழிந்திருக்குமே?  இங்கே கடவுள் டாக்டரின் மகள் வடிவத்தில் தோன்றி என்னிடம் பேசுவார்.  விளக்குவார்.  அவர்தான் பெரிய டாக்டருக்கு உதவி டாக்டர்.  பெரிய டாக்டர் என்றால் பெரிதாக நினைத்து விடாதீர்கள்.  பெண் டாக்டரின் அண்ணன் மாதிரிதான் இருப்பார்.  ஆனால் அப்பா.  சரி, பெண் டாக்டர்தான் நன்றாக விளக்குகிறார் அல்லவா? ஆனாலும் எனக்கு எதுவுமே புரியாது.  வீட்டுக்கு வந்ததும் அவந்திகா என்னப்பா என்பாள்.  ஒன்றுமே தெரியாது.  நீயே போன் செய்து கேட்டுக் கொள் என்று சொல்லி விடுவேன்.  ஒருத்தர் பேசவே மாட்டார்.  இன்னொருத்தர் பேசுவார்.  ஆனால் எனக்குப் புரியாது.  காரணம், கொரோனா முகமூடிதான்.  சே, சே.  முகமூடியின் காரணமாக சொற்கள் விளங்கவில்லை என்று நினைத்து விடாதீர்கள்.  சொற்கள் பிரமாதமாகப் புரியும்.  ஆனால் மூளைக்குள் அர்த்தமாகப் போய் விழாது.  சொற்கள் அப்படியே காற்றில் அலையலையாய்ப் பறக்கத் தொடங்கி விடும்.  எனக்கோ அந்தப் பிரக்ஞையே இருக்காது. 

நான் சந்தித்த எல்லாப் பெண்களுமே ஆண்களைப் பற்றிய தங்கள் புகாரில் பிரதானமாகச் சொல்வது ஒரு பயலும் கண்ணைப் பார்த்துப் பேச மாட்டேன் என்கிறான் என்பது.  அதைக் கேட்டதிலிருந்து நான் பெண்களோடு பேசும் போது கண்களைப் பார்த்து மட்டுமே பேசுவது வழக்கம்.  ஆனால் இந்தப் பெண் டாக்டரிடம் அப்படிப் பேசும் போது அவர் பேசுவது எதுவுமே புரிவதில்லை.  இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.  ஏன் என்று விளக்கினால் என் பற்களுக்கு ஆபத்து.  ஏற்கனவே அவர் தன் அம்மா என் எழுத்துக்கு ரசிகை என்று சொல்லி என்னோடு புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.  ஒலகம் ரொம்பச் சின்னது.  யாராவது போய் வத்தி வைத்து விட்டீர்களானால் பிரச்சினை.  இருந்தாலும் சொல் என்று வருகிற போது பல்லையெல்லாம் பார்க்கக் கூடாது இல்லையா?  அதனால் சொல்லுக்கும் பல்லுக்கும் ஒரு சமரசம் என்கிறாற்போல் ஒரு க்ளூ கொடுக்கிறேன்.  உறங்காவல்லி தாசனின் கதை தெரியுமா உங்களுக்கு?  தெரிந்தால் இந்தக் கதையின் ரகசியத்தைப் புரிந்து கொள்ளலாம்.

சரி, கதைக்கு ஒரு முடிவு வேண்டும் அல்லவா?  என் கதைகளுக்கு அப்படிப்பட்ட இலக்கணம் இல்லை என்றாலும் இன்று அப்படி கதை மாதிரி ஒரு சம்பவம் நடந்தது.  அதை விளக்குவதற்கு முன் – பல் டாக்டரிடம் என்னதான் நடக்கிறது என்பதை இதுவரை பல் டாக்டரிடம் போகாதவர்களுக்காகச் சொல்லி விடுகிறேன்.  என்னென்னவோ நடக்கும். அவ்வளவுதான்.  எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர்.  ஜெயின்.  எப்போதும் மாவா போடுவார்.  பல்லில் பிரச்சினை.  ஐந்து மணி நேரம் ஏதேதோ நடந்தது.  ஏழெட்டு லட்சம் செலவு ஆனது.  ஆனால் எனக்கு அம்மாதிரி பழக்கமெல்லாம் இல்லாததால் வெறும் கொத்தனார் வேலைதான்.  சுண்ணாம்பு பெயர்ந்து விழுந்தால் காரை பூசுவார்கள் இல்லையா? அந்த மாதிரி பூசினார் டாக்டர்.  அது என்னவோ வாய்க்குள் மயக்க ஊசி போட்டு, மயக்க மருந்தெல்லாம் அடித்து வலியில்லாமல்தான் செய்கிறார்கள்.  ஆனாலும் பெரிய டாக்டர் சுண்ணாம்பு பூசும் போது வலிக்கத்தான் வலிக்கிறது.  கண் டாக்டர்… ஸாரி, மகள் டாக்டர் வேலை செய்யும் போது மட்டும் வலிப்பதே இல்லை.  ஏதோ கதைக்காகச் சொல்லவில்லை ஐயா.  நிஜமாகவே வலிக்கவில்லை.  வலிக்காததோடு மட்டுமல்லாமல் ஏதோ வாய்க்குள் மஸாஜ் செய்வது போலவோ மயிலிறகால் வருடுவது போலவோதான் இருக்கிறது.  நன்கு சாய்மானமாகப் படுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  ஒரு மஜீஷியன் – பின்னே என்ன, வாய்க்குள் தந்தை ஒரு கொல்லன் பட்டறையையே நடத்தி ரகளை பண்ணுகிறார், மகளோ மயிலிறகால் வருடி மஸாஜ் செய்கிறார் என்றால் அவர் டாக்டரா?  சத்தியமாக மஜீஷியன்தான், எனக்கு அதில் சந்தேகமே இல்லை – வாய்க்குள் மஸாஜ் செய்கிறார்.  என்ன நடக்குமோ அதுவே நடந்தது.  ஆம், நான் தூங்கி விட்டேன்.

சுபம்.

பின்குறிப்பு: என் நண்பரும் பல் டாக்டருமான பாலாஜிக்கு ஒரு கேள்வி: உங்கள் அனுபவத்தில், உங்கள் பேராசிரியர்களின் அனுபவத்தில் வாயில் இந்த மாதிரி அதகளம் நடக்கும்போது யாராவது பேஷண்ட் தூங்கினதைப் பார்த்ததுண்டா?  கேள்விப்பட்டதுண்டா?  ஆனால் பல்லில் வேலை செய்தது உறங்காவல்லி தாசன் கதையில் வரும் பெண்ணைப் போன்றவர் என்பதை மறந்து விடாதீர்கள்!

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai