அமிர்தம் சூர்யா இன்று முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதைப் படித்து விட்டு வெகுண்டு எழுந்து இதை எழுதுகிறேன். என்னை புத்தியில் அழகு என்று போட்டதுதான் விவகாரம். புத்தியை விடுங்கள், ஒரு பக்கம் கிடக்கட்டும். பௌதிக அழகு பற்றிக் கொஞ்சம் பேசுவோம். இந்தப் பெண்கள் இருக்கிறார்களே, அவர்களை இந்த விஷயத்தில் கொஞ்சம் கூட நம்பாதீர்கள். புத்திதான் முக்கியம், புற அழகெல்லாம் சுத்த வேஸ்ட் என்பார்கள். அத்தனையும் பச்சைப் பொய். ஒவ்வொரு பெண்ணும் படு முக்கியத்துவம் கொடுப்பது புற அழகுக்கும் சேர்த்துத்தான். சொல்லப் போனால் முதல் முக்கியத்துவம் பெறுவது அதுதான். முந்தா நாள் ஒரு நண்பரைப் பார்த்தேன். ஒரு எண்ணெய் கொடுத்தார். முகத்தில் தடவினால் முகம் ஒளிரும். ஆகா… இந்த மாதிரிப் பொருட்கள் என்றால் எனக்குக் கொள்ளை இஷ்டம்.
உடனே அது பற்றி எழுத வேண்டும் என்று தோன்றினாலும் அடக்கிக் கொண்டேன். பயன்படுத்திப் பார்த்து விட்டுத்தானே எழுத முடியும்? முந்தாநாள் இரவு, நேற்று காலை, நேற்று மாலை, இன்று காலை. மொத்தம் நான்கு வேளை. இப்போது முகம் ஒளிர்கிறது. ஏற்கனவே ஒளிரும் முகம்தான் என்றாலும் இப்போது ஏகமாய் ஒளிர்கிறது. சும்மா சொல்லவில்லை. மென்மையும் கூடி விட்டது. ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் என் கன்னத்தில் கை வைத்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். அப்படி ஒரு மென்மை. பட்டுப் போல் மென்மை. ஏற்கனவே உள்ளது இந்த எண்ணெயால் இன்னும் கூடி விட்டது.
எண்ணெய் எங்கே கிடைக்கும் என்று கேட்டு எழுதுபவர்களுக்கு மட்டும் – அதிலும் அந்த நண்பர் அனுமதி கொடுத்தால் – சொல்கிறேன். ஏனென்றால், அவர் அதைத் தன் வீட்டில் தயாரிக்கிறார். சூர்யா, உன் முகம் ஏற்கனவே பளபளா என்கிறது. உன் மகனை விட நீ இளமையாக இருப்பதால் நீ போட்டிக்கு வராதே.