பாபாகா. பாபா என்பதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். கா என்பதை காகிதம் என்பதில் வரும் கா மாதிரி உச்சரிக்காமல் கானம் என்பதை உச்சரிப்பது போல் சொல்ல வேண்டும். கவர்மெண்ட் என்பதில் வரும் ஜி. இவருடைய முதல் நாவல் உபுகு. உபுகு என்பது ஜியாமெட்ரிக் சகுனங்கள். உடனடியாக எனக்கு தாமஸ் பிஞ்ச்சோன் ஞாபகம் வருகிறார். இப்படி எதைப் படித்தாலும் ஒரு மேற்கத்திய எழுத்தாளர் ஞாபகம் வருவதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. அதற்காக ஒரு இளைஞரை பிஞ்ச்சோனோடு ஒப்பிட்டு விட்டேன் என்று அலறாதீர்கள். எனக்கு பிஞ்ச்சோன் ஞாபகம் வந்தது, சொன்னேன். உபுகுவை நான் இன்னொரு முறை படித்து விட்டுத்தான் அது பற்றி எழுத வேண்டும். தமிழ்ச் சூழலில் நான் மிகவாக மதிக்கும் என் நண்பர் நேசமித்ரன் உபுகுவைப் படித்து சிலாகித்ததாக அறிந்தேன். பாபாகாவின் எழுத்து சற்றே கடினமானது. இரண்டு மூன்று முறை வாசிக்கக் கோருவது. இப்போது பாபாகா முகநூலிலேயே எழுதி வரும் இரண்டாவது நாவலைத் தொடர்ந்து வாசிக்கிறேன். பிரமாதமாக இருக்கிறது. உபுகு அளவுக்குக் கடினமாக இல்லை. உடனடியாக வாசகரை உள்ளே இழுத்துக் கொள்கிறது. பாபாகாவை எனக்கு அறிமுகப்படுத்தியது காயத்ரி. ஸீரோ டிகிரியில் உபுகுவைப் பிரசுரித்திருக்கிறார்கள்.
சென்ற தலைமுறையில் மிகவும் பிரபலமாக இருந்த, வெகுவாகக் கொண்டாடப்பட்ட, பெருமைக்குரிய ஒரு இசைக் கலைஞரின் பேரன் பாபாகா. பாபாகா கர்னாடக இசை, மேற்கத்திய இசை இரண்டிலும் இயங்கி வருகிறார். சமீபத்தில் அவர் இசையமைத்துப் பாடிய திருப்புகழ் ஹிப் ஹாப் கேட்டேன். பொதுவாக இசை விஷயத்தில் நான் புதுமைகளை விரும்புபவன் அல்லன். பழைய ஆள். அப்படியிருந்தும் பாபாகாவின் ஹிப் ஹாப் பிரமாதமாக இருந்தது. ஆனால் அம்மாதிரி படைப்புகளை இங்கே நானும் பாபாகாவும் அவரது நண்பர்களும் மட்டுமே கேட்டு, ரசித்து என்ன பயன்? உலகம் முழுவதும் அல்லவா கேட்டு ரசிக்க வேண்டும்? அதற்குத் தேவையானதை பாபாகா செய்ய வேண்டும். பாபாகாவின் குறிப்பிட்ட அந்த ஹிப் ஹாப்பை லாஸ் வேகஸின் இசையரங்கு ஒன்றில் அல்லவா கேட்க வேண்டும்?
இப்போது பாபாகா முகநூலில் எழுதி வரும் நாவலை ஒவ்வொரு அத்தியாயமாக நம் தளத்தில் கொடுக்க இருக்கிறேன். அனுமதி கொடுத்ததற்கு பாபாகாவுக்கு நன்றி.
1 இப்ராஹிம் அந்தக் கூட்டத்திற்கு அவனது காதலி வருவாளா மாட்டாளா என்று ஏங்கிக்கொண்டிருந்தான். அவள் அவனிடம் கேட்டது ஒன்று தான். உன்ன திட்டுவாங்களா பாராட்டுவாங்களா? இபராஹிமுக்கு அவளிடம் ஒரு கேள்வி தான் இருந்தது. திட்டினா வருவியா பாராட்டினா வருவியா? அவளிடம் அவனுக்கு ஒரு கேள்வி தான் இருந்தது. உன்ன திட்டினா கூட்டம் நல்லா இருக்குமா பாராட்டினா கூட்டம் நல்லா இருக்குமா? அவனிடம் அவளிடம் ஒரு கேள்வி தான் இருந்தது. கூட்டம் நல்லா இருந்தா தான் வருவியா எனக்காக அது நடக்குதுனே வருவியா? அவளிடம் அவனிடத்தில் ஒரு கேள்விதான் இருந்தது. இதுனாலயா இல்லனா அதுனாலயா அப்படிங்கறது ஒரு கேள்வியா இரண்டு கேள்வியா? அவனிடம் அவளிடத்தில் ஒரு கேள்விதான் இருந்தது. ஒரு கேள்விக்குள்ளயே இரண்டு கேள்வி இருநதுச்சுனா அது இரண்டு கேள்வியா மூனு கேள்வியா? அவளிடம் அவனிடத்தில் கேட்க ஒரு கேள்விதான் இருந்தது. நான் வருவேனா மாட்டேனானு என்ன கேட்டதுக்கு பதில் நாளைக்கு உன் கூட்டம் முடியறத்துக்குள்ள தெரிஞ்சுடுமா தெரியாதா? இப்ராஹிமிடம் அவளிடம் கேட்க ஒரு கேள்விதான் இருந்தது. நான் நீ வருவியா வரமாட்டியானு கேட்கிறது அதுக்கு பதில் தெரிஞ்சுக்கவா இல்லனா அந்த கூட்டத்தப் பத்தி நீ என்ன நினைக்கறனு தெரிஞ்சுக்கவா? தினமும் ஒருவரை ஒருவர் நான்கு கேள்விகளுக்கு மேல் கேட்கக்கூடாது என்று அவர்கள் தங்களுக்குள் ஒரு ஆனந்தமான கட்டாயத்தை வைத்திருந்தனர். அன்று அதிகாலையிலேயே நான்கு கேள்விகளும் தீர்ந்து போனதை நினைத்து இப்ராஹிம் வருத்தப் பட்டானா அல்லது சந்தோஷப்பட்டானா? அவனது காதலியின் பெயரே கேள்விதான். இப்படி ஒரு பெயரைக் கூட யாருக்காவது வைப்பார்களா என்று அவளைக் கண்ட நாள் முதல் இப்ராஹிமுக்குத் திகைப்பு. கேள்வியைக் காண்பதற்கு முன்பே இப்ராஹிம் கேள்வியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். அவளை அவளது நண்பர்கள் கெலவி என்றுதான் கூப்பிட்டார்கள். அவள் ஒரு ஊர்க்கிழவியைப் போல இப்ராஹிமிடம் பேசித் தீர்த்த அவர்களது முதல் ஒரு மணி நேரத்தில் கேள்வியைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான் இப்ராஹிம். அவளது வம்பை நம்பினால நீ ஓஹோ என்றிருப்பாய் என்றது அவன் மனம். ஸாக்ரடீஸுக்கு ஒரு பிடாரிதான் மனைவியாக வாய்த்தாள் என்று அவன் கேள்விப் பட்டிருக்கிறான். தனக்கு கேள்வியே மனைவியாக வாய்ப்பாளா என்று தன்னையே கேட்டுக் கொண்டான் இப்ராஹிம். அவனைச் சுற்றிய உலகம் அப்போது மெல்ல மாறிக்கொண்டிருந்தது. நான் மெடஃபோரிக்கலாக சொல்லவில்லை. கேள்வி முதன் முறை அவனிடம் ஒரு மணி நேரம் பேசியவுடன் அவன் வெட்கம் தாங்காமல் தரையைப் பார்த்தான். அவள் தனது அத்தையின் பெயர் முகம் என்று கூறிவிட்டு உரக்கச் சிரித்தாள். அவன் தனது மாமாவின் பெயர் முகம்மத் என்று கூறிவிட்டு உரக்கச் சிரித்தான். பின்பு அவன் கீழே பார்த்த போது அங்கு ஒரு கும்பல் எறும்புகள் கோடு கிழித்து கபடி ஆடிக்கொண்டிருந்தன. ஜியாமெட்ரிக் சகுனங்கள் தொடங்கிவிட்டன. ஜாலி .