விநாயகர் சதுர்த்தியும் புத்திஜீவிகளும்… (1)

அபிலாஷ் ஒரு படம் போட்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லியிருக்கிறார். விநாயகர் சிலையை இரண்டாக உடைத்துக் கொண்டு புத்தர் தோன்றும் படம். இதைப் பார்த்தவுடன் ஒரு ஹிந்துவுக்கு என்ன தோன்றும்? இப்படிப்பட்ட நண்பர்கள்தான் மோடியை வளர்த்து விடுகிறார்கள். தங்கள் அடையாளத்தை மறந்து விட்டு இருந்த ஹிந்துக்கள் தங்கள் அடையாளத்தைத் திரும்பப் பெறவும் ஒருங்கிணைப்பு செய்து கொள்ளவும் அபிலாஷ் போன்ற நண்பர்களின் இது போன்ற காரியங்களே உத்வேகம் அளிக்கின்றன. கிறித்தவக் கல்லூரிகளில் சென்ற தேர்தலில் ராகுலுக்கு வாக்களிக்கச் சொல்லி வலியுறுத்தினார்கள். அது ஹிந்து ஒருங்கிணைப்புக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்தது. நீங்கள் எதிர்க்க எதிர்க்க ஹிந்துக்கள் ஒருங்கிணைகிறார்கள். அடுத்த தேர்தலிலும் மோடி வந்தால் இந்தியா ஹிட்லரின் ஜெர்மனியை விட மோசமாகப் போகும். ஆனால் அபிலாஷ் போன்ற புத்திஜீவிகளின் செயல்பாடுகள் மோடியை வலுப்படுத்தவே உதவுகின்றன.அரசியலை விட்டு விடுவோம். ஹிந்துக்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் உங்களுக்கு என்னய்யா பிரச்சினை? எல்லோரும் புத்த மதத்துக்கு மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? மாறி ஆயுதத்தைக் கையில் ஏந்தி சிங்களர்களோடு கூட்டணி வைத்துக் கொள்வோமா? ஹிந்துக் கோவில்களையெல்லாம் இடித்து விட்டு புத்த விஹாரைகள் கட்டுவோமா? புத்தர் சிலை எத்தனை உயரமாக இருக்கிறதோ அத்தனை நெருக்கமாக நாம் புத்தரையும் சொர்க்கத்தையும் நெருங்குவோம் என்று பௌத்தர்கள் நம்புகிறார்கள். கிளம்புங்கள், முதல் காரியமாக நீங்களும் நானும் பௌத்தத்துக்கு மாறுவோம்… ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதத்தின் கொண்டாட்டங்களைக் களிப்பதில் ஒரு புத்திஜீவிக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்? நீங்கள் நாத்திகவாதி என்பதற்காக எல்லா சிலைகளையும் உடைப்பீர்களா? சரி, எல்லா மதத்துக்கும் அதைப் பின்பற்றுங்கள். ஏன் ஹிந்து மதத்தில் மட்டும்தான் உங்கள் பகுத்தறிவு வேலை செய்யுமா?

மத நல்லிணக்கம் என்றால் என்ன? நான் உன்னுடைய மத உணர்வுகளைப் புண்படுத்துவேன், அவமானப்படுத்துவேன்; நீ என் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதா?