இலக்கிய நூல்களின் இன்றைய நிலை


1.
சமீபத்தில் கோயம்பத்தூர் புத்தக விழாவில் ஒருவர் என்னைச் சந்தித்தார்.  அடையாளம் தெரியவில்லை.  பார்த்து இருபது ஆண்டுகளோ அதற்கு மேலோ இருக்கும்.  பெயரைச் சொன்ன பிறகுதான் புரிந்து கொண்டேன்.  முன்பு அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர்.  பிறகு பல லௌகீக காரணங்களால் இலக்கியத்திலிருந்து ஒதுங்கி விட்டார்.  தொடர்பு விட்டுப் போயிற்று.  இப்போது இருபது ஆண்டுகள் கழித்து, லௌகீக வாழ்க்கை சற்றே அலுத்துப்போய் இங்கே இலக்கியத்தின் பக்கம் வந்து எட்டிப் பார்த்தால் என்ன ஆகும்?  இங்கே இலக்கியத்திலோ அவன் அவன் தற்கொலை செய்து கொண்டு சாகிறான்… நாவல் எழுதினால் நாற்பது பிரதி விற்கிறது.  நீங்கள் என்னவென்றால், இருபது ஆண்டுகள் லௌகீகத்தில் திளைத்து, கல்யாணம் பண்ணி, குழந்தை பெற்று, அதை வளர்த்து கல்லூரியில் சேர்த்து விட்டு இங்கே வந்து ஜாலிக்கு எட்டிப் பார்த்தால் மயிர் கூட மிஞ்சாது என்று அந்த நண்பருக்குத் தெரியாமல் போயிற்று.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய நாவலின் மறுபதிப்பை என்னிடம் கொடுத்தார்.  வீட்டுக்கு வந்து பிரித்துப் பார்த்தால், பிரிக்கவே முடியவில்லை.  நாற்பது ஆண்டுகளுக்கு புத்தகம் வாங்கக் காசில்லாமல் ஃபூக்கோ, தெரிதா, ரொலாந் பார்த் புத்தகங்களை புகைப்பட நகல் எடுத்து அதை ’ஸ்டாப்பிள்’ பண்ணி வைத்துக்கொண்டு படிப்பேன்.  அப்படி ஸ்டாப்பிள் பண்ணியது போல் ’பைண்ட்’ செய்யப்பட்டிருந்தது புத்தகம்.   அதை என் நண்பரிடம் கொடுத்தால், ஆஹா, எவ்வளவு அருமையான தயாரிப்பு என்று மகிழ்ந்தார் நண்பர்.  தலையைக் கொண்டு போய் எங்கே முட்டிக் கொள்ள?  எல்லோருமே அட்டையின் அழகைப் பார்த்து மயங்கி விடுகிறார்கள்.  புத்தக்தையோ திறக்கவே முடியவில்லை.  கொண்டுபோய் குப்பையிலே போட்டேன்.  வேறு என்ன செய்ய முடியும்?  திறக்கவே முடியாத புத்தகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

அதோடு விடவில்லை அந்த ஸ்டாப்ளர் பிசாசு.  இன்னொரு பிரபலமான பதிப்பகத்தின் ஆயிரம் பக்க நாவலை எடுத்தேன்.  பார்த்தால் அதையும் பிரிக்க முடியவில்லை.  பதிப்பகத்தின் உரிமையாளர் என் நண்பர் என்பதால் அவரை அழைத்துச் சொன்னேன்.  யாருமே சொல்ல மாட்டார்கள்.  நான் சொன்னேன்.  அதனால்தான் ஐம்பது ஆண்டுகளாக நான் எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறேன்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  அண்ணாச்சி உயிரோடு இருந்த வரை அவருடைய உணவகங்களில் உணவு நன்றாக இருந்தது. இப்போது அவர் இல்லை.  உணவின் தரமும் போய் விட்டது.  அவர் இருந்தபோது உணவு நன்றாக இருந்ததன் காரணம், அவர் ஒவ்வொரு பிராஞ்சுக்கும் போய் ருசி பார்ப்பார்.  

பதிப்பக நண்பர் எனக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும்.  அதற்குப் பதிலாக நாவல் ஏன் அப்படி பிரிக்க முடியாமல் இருக்கிறது என்பதற்கான விளக்கத்தைப் பதினைந்து நிமிடம் விளக்கினார்.  அதாவது, ப்ரிண்ட் ஆன் டிமாண்டில் ஐம்பது பிரதிகளை அடிப்பதற்கு யாரும் ஆஃப்செட் அச்சகத்தை நோக்கிப் போக முடியாது.  இங்கே லோக்கலாக மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகை அடிக்கும் அச்சகத்தில்தான் அடிக்க முடியும்.  அங்கே அடித்தால் புத்தகம் இப்படித்தான் வரும்.  

நன்றாக கவனியுங்கள்.  நான் பதிப்பகங்களைக் குறை சொல்லவில்லை.  புத்தகங்களின் இந்தக் கேடு கெட்ட நிலைக்குக் காரணம் முழுக்கவும் இங்கே போதுமான வாசகர்கள் இல்லை என்பதுதான்.  ஐம்பது பேர் வாங்கினால் புத்தகம் எப்படி இருக்கும்?  இப்படித்தான் இருக்கும்.

ஆனால், நான் சொல்ல வருவது என்னவென்றால், அந்த ஐம்பது பேருக்கு பதிப்பகத்தாராகிய நீங்கள் என்ன நியாயம் செய்கிறீர்கள்?  எங்கள் ஓட்டலில் பத்து பேர்தான் சாப்பிடுகிறார்கள் என்பதால் நாங்கள் ஊசிப்போன பண்டத்தைத்தான் தர முடிகிறது என்பீர்களா?  தொழிலில் ஒரு தர்ம நியாயம் வேண்டாமா?  ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆயிரம் பக்க நாவலை ஒருத்தர் வாங்குகிறார் என்றால், இப்படியா பிரிக்கவே முடியாத புத்தகத்தைக் கொடுப்பீர்கள்?  இதை ஒருத்தர் சுட்டிக் காட்டினால், இதைக் களைவதற்கான வழியை யோசிப்பீர்களா?  அல்லது, சுட்டிக் காட்டியவரிடம் காரணத்தை விளக்குவீர்களா?

இங்கே இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், நூறு புத்தகங்களை எடுத்தால் அதில் இரண்டே இரண்டு புத்தகங்களைத்தான் பிரிக்க முடிகிறது.  அல்லது, ஒன்றிரண்டு பதிப்பகங்களிலிருந்து வரும் புத்தகங்கள் ஒன்றில் கூட இந்தப் பிரச்சினை இல்லை.  அந்தப் பதிப்பகங்களின் எல்லா நூல்களும் பக்காவாக இருக்கின்றன.  

பல பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்களே பிரிக்க முடியாதபடிதான் வெளிவருகின்றன.  அதுவும் பிரபலமான பதிப்பகங்களின் வாயிலாக.  

கேவலம்.  வெட்கக் கேடு.  

***

2. 

ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வரும் புத்தகங்களெல்லாம் விலை அதிகமாக இருக்கின்றன என்ற புகாரைத் தூக்கிக்கொண்டு வந்து அப்பதிப்பகத்தின் உரிமையாளரான் வர்ஷாவிடம் பல நலம் விரும்பிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  விலை அதிகம்தான்.  ஆனாலும் ஒரு பைசா லாபம் இல்லை.  காரணம், ராஸ லீலா பதிப்பகத்தின் புத்தகங்கள் மிக உயர்ந்த தரத்தில் தயாரிக்கப்படுகின்றன.  அச்சகச் செலவு மற்ற இடங்களை விட ஒன்றரை மடங்கு அதிகம்.  பல நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள், வேறு மலிவான அச்சகங்களில் அடித்தால் விலையைக் கம்மியாக வைக்கலாமே என்று.  அடிக்கலாம்.  விலையும் கம்மியாகும்.  ஆனால் புத்தகம் மயிர் மாதிரி இருக்கும், பரவாயில்லையா என்று கேட்டேன்.  தமிழில் வெளியாகும் நூற்றுக்குத் தொண்ணூற்று எட்டு புத்தகங்களைப் பிரிக்கவே முடியவில்லை என்கிறேன், அப்புறம் மலிவான அச்சகத்தில் அடிக்கலாமே என்றால் என்ன அர்த்தம்?  ஒரு நண்பர் சொன்னார், ஒரே ஒரு புத்தகத்தை வேண்டுமானால் வேறொரு அச்சகத்தில் அடித்துப் பார்க்கலாமே என்றார்.  அப்படி அடித்து, அந்தப் புத்தகம் மயிர் மாதிரி இருந்தால் அத்தனை பிரதிகளையும் குப்பையிலேதான் போட வேண்டியிருக்கும், செய்யலாமா என்றேன். 

க்ரியா என்ற பெயரில் ஒரு பதிப்பகம் உள்ளது.  அங்கிருந்து வந்த ஒரு புத்தகம் கூட தரத்தில் குறைந்தது அல்ல.  அதற்கு முன்பு தீரர் கிருஷ்ணமூர்த்தியின் மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி வாசகர் வட்டம் என்ற பெயரில் ஒரு பதிப்பகம் நடத்தி வந்தார்.  அந்த வாசகர் வட்ட நூல்களைப் போல் ஒரு நூல் இன்னும் ஐநூறு ஆண்டுகளில்கூட சாத்தியம் இல்லை.  இத்தனைக்கும் வாசகர் வட்டத்தின் ஒவ்வொரு நூலுமே ஒரே மாதிரி உயர் தரத்தில் இருக்கும்.  வாசகர் வட்டத்தின் தரம் இப்போது சாத்தியம் இல்லை.  வாசகர் வட்டத்தின் ஒவ்வொரு நூலுமே கெட்டி அட்டைதான்.  குறைந்த பட்சம் க்ரியா தரத்துக்காவது கொண்டு வரலாமே என்பதுதான் என் நோக்கம்.  

எனவே ராஸ லீலா பதிப்பகத்தின் நலம் விரும்பும் நண்பர்கள் இது போன்ற ஆலோசனைகளை நிறுத்திக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.